Header Ads Widget

LightBlog

Ticker

6/recent/ticker-posts

மே 04

 இன்று "அவருடைய" சத்தம்


மே 4


🔸️ முழுமையான அர்ப்பணமே உத்தம கிறிஸ்தவ ஜீவியம்! 🔸️


அப்போஸ்தலர் 27:23-ல் "என்னை ஆட்கொண்டவரும் நான் சேவிக்கிறவருமான தேவன்!" என்றே பவுல் கெம்பீரித்தார்!! இவ்வாறு தன் தேவனுக்கு ஓர் அடிமையாகவே பவுல் இருந்தார். அவர் சகலத்தையும் தன் எஜமானுக்கே அர்ப்பணித்துவிட்டார்!!


அர்பணத்திற்கு சரியான அஸ்திபாரமாய் இருப்பதெல்லாம், "என் முழுவதும் தேவனுக்கே சொந்தம்" என உணர்ந்து அவருக்கே முதலிடம் தருவதாகும். தேவன் நமக்காக செய்த யாவற்றிற்கும் நன்றியுள்ளவர்களாய், அந்த நன்றியின் உணர்வாய் நம்மையே தேவனுக்கு அர்ப்பணிப்பதுகூட - அர்ப்பணத்திற்கு ஓர் உறுதியான அடிப்படையல்ல! 


"கிறிஸ்துவின் அன்பே" நம்மை உந்தித் தள்ளும் நோக்கம் எனவும் கூறலாம். ஆனால், நம் ஜீவியத்தை தேவனுக்கு அர்ப்பணம் செய்வதற்கு அடிப்படையான ஆதாரமாய் இருக்க வேண்டியதெல்லாம், "நம்மை அவர் சிலுவையிலே கிரயமாய் கொண்டார்" என்ற சத்தியம் மாத்திரமேயாகும். அவ்வாறு கிரயமாக்கப்பட்ட நாளிலிருந்து, இனிமேல் நாம் தேவனுக்கு சொந்தமான உடைமை ஆகிவிட்டோம்! இனியும் நமக்கு நம்மீது யாதொரு உரிமையுமில்லை!!


அந்நாட்களில் தங்கள் எஜமான்களுக்கு அடிமைகள் ஊழியம் செய்தது, பிரதானமாய் அவர்கள் தங்கள் எஜமான்களை அன்பு கூர்ந்தபடியால் அல்ல! மாறாக, அவர்கள் அந்த எஜமானுக்குரிய சொத்து!! அவ்வளவுதான். 


ஆகவே, ஒருவன் தன் முழு ஜீவியத்தையும் தேவனுக்கே அர்ப்பணம் செய்துவிட்டால், அது ஒன்றும் தேவனுக்காக அவன் செய்துவிட்ட விசேஷமான அனுகூலம் எதுவுமில்லை! இவ்வாறு அவன் செய்ததெல்லாம், "தேவனிடமிருந்து அவன் திருடியதையே, இப்போது அவருக்கு திரும்பக் கொடுத்திருக்கிறான்!" அவ்வளவுதான். 


ஒருவருடைய பணத்தை நான் திருடிய பிறகு, அதற்காக மனம் வருந்தி அதை அவரிடம் நான் திரும்பச் செலுத்தியிருந்தால், அந்த மனுஷனுக்கு நான் யாதொரு சகாயமும் செய்துவிடவில்லை! மாறாக, ஒரு மனந்திரும்பிய திருடனாகவே அவரிடம் நான் செல்வேன். நாம் தேவனிடத்தில் நம் ஜீவியத்தை அர்ப்பணிக்கும்போது, இவ்வித மனப்பான்மையோடு தான் அவரிடம் செல்ல வேண்டும்! ஏனெனில் தேவன் நம்மை விலைக்கிரயமாக வாங்கிவிட்டார்! இதை நாம் உணர்ந்து கொண்ட பிறகுதான் அர்ப்பணத்தின் சரியான அஸ்திபாரத்தை நாம் கண்டடைய முடியும்! 


ஜெபம்:

எங்கள் பரம தந்தையே! கல்வாரி சிலுவையில் எங்களை கிரயமாகக் கொண்ட உமக்கு, எங்களை முற்றிலும் அர்ப்பணிப்பது அன்பின் கடமை என்பதை உணர்ந்து உம்மிடம் எங்களை சமர்ப்பிக்கிறோம்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.  


எழுதியவர்:

சகோதரர் சகரியா பூணன்.


"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".


From:-

https://t.me/hisvoicetoday




Post a Comment

0 Comments