இன்று "அவருடைய" சத்தம்
மே 9
🔸️ ஆவிக்குரிய துயரமே நம்மை கிறிஸ்துவைப் போல் மாற்றும்! 🔸️
"துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்" (மத்தேயு 5:4) என ஆண்டவராகிய இயேசு குறிப்பிடும் ஜீவியமே ஒரு உண்மையான ஆவிக்குரிய தன்மையென காண்கிறோம். அப்படியானால், இவ்வுலகில் "நாம் எதற்காக துயரம் கொள்ளவேண்டும்?" என நாம் கேட்பது நல்ல கேள்வியேயாகும். இன்று ஜனங்கள் தாங்கள் அநீதியாய் நடத்தப்பட்டதற்காக துயரம் கொள்கிறார்கள். ஏதோ ஒரு வகையில் பிறர் தங்களுக்கு தீங்கிழைத்ததற்காக துயரப்படுகிறார்கள். ஆனால், இயேசுவோ 'இப்படிப்பட்ட' துயரம் கொள்வதை குறிப்பிடவே இல்லை! ஏனெனில் இதுபோன்ற துயரத்தில் எவ்வித மகிழ்ச்சியும் பாக்கியமும் இல்லை! ஆவிக்குரிய பிரகாரமாய் சொல்வோமென்றால், இதுபோன்ற துயரம் பாக்கியமல்ல... பரிதாபமே ஆகும்!
ஜனங்களை நமக்காகப் பரிதாபம் கொள்ளச்செய்வதும் அல்லது நமக்கு நாமே சுய அனுதாபம் கொள்வதும் சாத்தானின் ஆவியே ஆகும்!!
இயேசு தனக்காக ஒருபோதும் சுய-அனுதாபம் கொண்டதே இல்லை. தனக்கு நேர்ந்த துன்பங்களுக்காக அவர் ஒரு தடவைகூட கண்ணீர்விடவே இல்லை. இந்த நல்ல இயேசுவின் மாதிரியையே நாம் யாவரும் பின்பற்றுவோமாக. ஆம், நமக்கு நேரிடும் துன்பங்களுக்காக ஒருபோதும் கண்ணீர் வடிக்காதவர்களாக இருக்கக் கடவோம்!
பின் எவற்றிற்காக நாம் துயரம் கொள்ள வேண்டும்? நாம் துயரம் கொள்ள வேண்டியவைகளில் முதலாவது, நம் பாவத்திற்காக ஆகும். இப்போது எவைகளெல்லாம் பாவம் என நம்மில் கேள்வி எழக்கூடும். நான் அறிந்திருக்கிறபடி, என் ஆவிக்குரிய வளர்ச்சிக்கு இடையூறான அனைத்துமே பாவம்தான்! சில ஜனங்கள் கொலை, விபச்சாரம், களவு, ஆகிய கொடிய தீமைகளையே பாவமாக எடுத்துக்கொள்கிறார்கள். தீயபழக்கங்கள் தங்கள் கிறிஸ்தவ ஜீவியத்தை அழித்துவிடும் என்பதை நிச்சயமாய் அறிந்திருக்கிறார்கள். இன்னும் சிலர் இயேசு வகுத்துத்தந்த உயர்ந்த ஜீவியதரமான அசுத்த சிந்தைகள், பண ஆசைகள் போன்றவற்றை பாவமாக எடுத்துக்கொள்கிறார்கள்.
அது சரிதான், ஆனால் இவை எல்லாவற்றிற்கும் மேலான உயர்ந்த தரம் யாதெனில், "கிறிஸ்துவைப் போல் அல்லாத ஒவ்வொன்றும்" பாவம் எனக் கூறுவதே ஆகும். இவைகளுக்காக நாள்தோறும் தங்கள் இதயத்தில் துயரப்படுகிறவர்கள், நிச்சயமாய் கிறிஸ்துவைப் போல் மாற்றம் அடைவார்கள். இதுவே, உத்தம கிறிஸ்தவர்களுக்கு கிடைத்திடும் ஆறுதலான பாக்கியமாகும்!!
ஜெபம்:
எங்கள் பரலோக தந்தையே! "கிறிஸ்துவைப்போல் மாற வேண்டும்" என்ற எங்கள் தீராத துயரத்திற்கு 'பதில் தந்து' எங்களை ஆறுதல் செய்திடும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
https://t.me/hisvoicetoday



0 Comments