இன்று "அவருடைய" சத்தம்
மே 3
🔸️ தொடர்ச்சியான "ஆவியில் நிறைந்த ஜீவியம்" வேண்டும்! 🔸️
எபேசு கிறிஸ்தவர்களுக்கு எபேசியர் 5:18-ல் பவுல் கூறும்போது, அவர்கள் ஏற்கனவே பரிசுத்தாவியின் அபிஷேகத்தைப் பெற்றிருந்தாலும், அவர்களை "ஆவியில் நிறைந்திருக்கும்படி" புத்தி சொன்னார். அதனுடைய பொருள், அவர்கள் ஆவியினால் தொடர்ச்சியாய் நிரப்பப்பட வேண்டும் என்பதுதான்! தொடர்ச்சியான ஆவியின் நிறைவில் நடந்திடும் புருஷர்களும், ஸ்திரீகளுமே "ஆவியில் நிரம்பினவர்கள்" என கூறப்படத் தகுதியுள்ளவர்கள். இருப்பினும், அவ்வாறு நாம் நிறைந்திருப்பதை மற்றவர்கள் கூறலாமே அல்லாமல், நாம் சாட்சி சொல்லக்கூடாது! மோசேயினுடைய முகம் தேவனுடைய மகிமையினால் பிரகாசித்தபோது, மற்றவர்கள் கண்டார்கள்! ஆனால் அவனோ அதை அறியாதிருந்தான்!! (யாத்திராகமம் 34:29,30).
ஆவியில் நிறைந்திருப்பதின் பொருள், "கிறிஸ்துவின் ஆவியினால்" நிறைந்திருப்பதேயாகும்! ஆகவே, நம் ஜீவியத்தில் கிறிஸ்துவின் சாயலுக்கு ஒப்பான சுபாவத்தின் கனி நம்மிடத்தில் இருந்தால் மாத்திரமே, நாம் ஆவியில் நிறைந்திருக்கிறோம் என்பதை மற்றவர்கள் அறிந்து கொள்வார்கள்! இதைக் குறித்த சாட்சியை நாம் சொல்லிடத் தேவையில்லை .... ஏனெனில், நம் ஜீவியத்தின் தொனி நம் வார்த்தைகளின் தொனியை விட அதிக சத்தமுள்ளதாகும்!
ஆவியில்-நிறைந்த ஜீவியத்தை தெளிவாக விளக்குவதற்கு பவுல் கலாத்தியர் 2:20ல் கூறிய வசனத்தை விட வேறு சிறந்த விளக்கம் எதுவும் காண முடியவில்லை. அந்த வசனம் கூறும் விளக்கம்: "கிறிஸ்துவுடனே கூட சிலுவையில் அறையப்பட்டேன்; ஆயினும் இனி நானல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்" என்பதேயாகும். இயேசுவின் ஜீவியத்தை நமக்குள் உருவாக்குவதேயன்றி, ஆவியில் நிறைந்திருப்பதின் நோக்கம் வேறு என்ன இருக்கிறது?
ஆகவே, எந்த அளவு நம் சுய-வாழ்க்கை சிலுவையில் அறையப்பட்டு கிறிஸ்துவின் ஜீவியம் நமக்குள் வெளிப்பட்டிருக்கிறதோ, அந்த அளவே நாம் பரிசுத்தாவியினால் நிறைந்திருக்கும் மெய்யான அளவாயிருக்கிறது!
ஜெபம்:
அன்பின் தகப்பனே! நாள்தோறும் "ஆவியில் நிறைந்து" வாழும் ஜீவியமே, எங்களில் கிறிஸ்துவின் சாயலை கொண்டுவரும் என அறிந்தோம்....மெய்யான அந்த திவ்ய ஜீவியத்தையே எங்களுக்குத் தந்தருளும்; கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
https://t.me/hisvoicetoday



0 Comments