இன்று "அவருடைய" சத்தம்
மே 7
🔸️ "பரிபூரண ஜீவன்" முழுமையும் அர்ப்பணித்த சீஷர்களுக்கே சொந்தம்! 🔸️
பரிபூரண ஜீவனைக் கண்டடைய வகை செய்யும் ஒப்பற்ற சத்தியங்களையே ஆண்டவர் இயேசு மலைப்பிரசங்கத்தின் மூலமாய் தன் சீஷர்களுக்கு உபதேசித்தார். பெருமான் இயேசு திருவாய் மலர்ந்த அந்த சத்தியங்கள் இன்று புதிய உடன்படிக்கையில் இயேசுவின் சீஷர்களாக அவரைப் பின்தொடரும் யாவருக்குமே சொந்தமாகும்!
புதிய உடன்படிக்கையின் இக்காலத்தில், "ஊழியம் செய்கிறோம்" எனக் கூறுபவர்கள் யாவரும் ஆண்டவர் இயேசுவை சற்றே நோக்குவார்களாக! ஆம், இயேசுவைப் பொறுத்தமட்டில் சீஷர்களை உருவாக்காத ஒரு ஊழியத்தை அவர் சுவிசேஷ ஊழியமாகக் கொள்ளவே இல்லை. இந்த உண்மையை மலைப்பிரசங்கத்தின் துவக்க அதிகாரத்திலேயே நாம் காண்கிறோம். மலைப்பிரசங்க அதிகாரங்களுக்கு முன்பான மத்தேயு 4-ம் அதிகாரம் கடைசி இரண்டு வசனங்கள், அவர் "திரளான ஜனங்களை சொஸ்தமாக்கி அவர்களுக்கு சுவிசேஷத்தைப் பிரசங்கித்தார்" (மத்தேயு 4:23-25) எனக் கூறுகின்றது. இவ்வாறு சுவிசேஷ ஊழியத்தை செம்மையாய் துவக்கிய இயேசு, மத்தேயு 5:1-ல் தன்னைப் பின்பற்றிய "திரளான ஜனங்களைக்" கண்டபொழுது அவர்களுக்கு மீண்டுமாய் மனந்திரும்புதலைப் பிரசங்கிக்கவில்லை. மாறாக, அவர்கள் சீஷர்களாகும்படி உபதேசிக்கவே மலையின்மேல் ஏறினார்! அந்த மலையில் திரளான ஜனங்களல்ல.... சீஷர்களாகும்படி வாஞ்சித்தவர்கள் மாத்திரமே அவரைச் சுற்றி அமர்ந்திருந்தார்கள்! (மத். 5:1,2). விலைமதிப்பில்லாத இந்த உபதேசங்களின் பெருமதிப்பை உணர்ந்தவர்கள் இவர்களே ஆவர்!! நீங்களும் அவர்களில் ஒருவர் தானே.....?
உங்கள் பாவங்களுக்காக நீங்கள் மனந்திரும்பி, இயேசுவிடம் வந்து உங்கள் பாவங்களையெல்லாம் அறிக்கையிட்டு, அவருடைய விலையேறப்பெற்ற இரத்தத்தால் கழுவப்பட்டு, தேவனுடைய ராஜ்ஜியத்தில் மறுபடியும் பிறந்து விட்டீர்களா? (யோவான் 1:12). திருவசனத்திற்கு கீழ்ப்படிந்து தண்ணீர் ஞானஸ்நானமும் பரிசுத்தாவியின் அபிஷேகமும் பெற்று விட்டீர்களா? (அப். 2:38) ....இருப்பினும், இன்னமும் நீங்கள் இயேசுவைப் பின்பற்றும் சீஷனாகவில்லையா? இப்போது, சற்றே அமர்ந்து, உங்கள் ஜீவகாலமெல்லாம் அவரைப் பின்பற்றி வாழ முடியுமா என்பதை சிந்தித்துப் பாருங்கள்! (லூக்கா 14:25-33). என்ன... இயேசுவின் சீஷனாவதற்கு முடிவு செய்துவிட்டீர்களா? அதுவே அற்புதம்! அன்று, அந்த மலையில் இயேசுவை புடைசூழ அமர்ந்திருந்த சீஷர்களோடு நீங்களும் இப்போது அமர்ந்து விட்டீர்கள்!! பரிபூரண ஜீவனை அள்ளித்தரும் அவருடைய உபதேசங்கள் யாவும் இப்போது உங்களுக்கும் சொந்தம்!!
ஜெபம்:
பரலோகப் பிதாவே! ஆண்டவர் இயேசுவை குருவாய் ஏற்று, அவருடைய சீஷனாய் மாறிட முற்றிலும் எங்களை அர்ப்பணிக்கிறோம்! தயவாய் எங்களை பரிபூரண ஜீவனுக்குள் நடத்தியருளும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
https://t.me/hisvoicetoday



0 Comments