இன்று "அவருடைய" சத்தம்
ஜனவரி 3
🔸️ இரட்சிக்கப்பட்டதற்கும் 'கனி' வேண்டும்! 🔸️
யோவான்ஸ்நானகன் பரிசேயர்களைப் பார்த்து, "மனந்திரும்புதலுக்கேற்ற கனிகளைக் கொடுங்கள்" என அழைப்பு விடுத்தார் (மத்தேயு 3:8). நாம் உண்மையாகவே மனந்திரும்பி இருப்போமென்றால், அவ்வித மனந்திரும்புதல் நம் முழு ஜீவியத்தையும் மாற்றிவிடும்!
நாம் மனந்திரும்பியவுடன் செய்யவேண்டிய முதலாவது காரியம் யாதெனில், நம் கடந்த ஜீவியத்தில் செய்த தவறுகளினிமித்தம் ஏற்பட்ட நஷ்டங்களைத் திரும்பச் செலுத்துவதே ஆகும் (Restitution).
சகேயுவைக் குறித்து லூக்கா சுவிசேஷத்தில் வாசிக்கிறோம். இயேசு அவனுடைய வீட்டிற்குள் பிரவேசித்தவுடன், அவன் தன் பாவங்களை உணர்ந்தான் (லூக்கா 19:1-10). அந்த சகேயு பணத்தை சிநேகித்த மனிதனாயிருந்தான்! இருப்பினும், மனந்திரும்புதல் இன்னதென்பதை அவன் நன்கு அறிந்திருந்தான்!! தான் இயேசுவின் சீஷனாய் மாறவேண்டுமென்றால், தன் ஜீவியத்தில் இழைத்த எல்லாத் தவறுகளையும் சரிசெய்திட வேண்டும் என்பதையும் நன்கு அறிந்திருந்தான். அவ்வாறு அவன் செயல்பட்டால், அதிகமான பண நஷ்டம் தனக்கு ஏற்படும் என்பதையும் அறிந்திருந்தான்! ஏனெனில் அவன் அநேகரின் பணத்தை ஏமாற்றி அபகரித்தவன்!! எனவேதான், தன் ஆஸ்தியில் பாதியை ஏழைகளுக்கும், தான் அநியாயமாய் அபகரித்தவர்களிடம் நாலத்தனையாகவும் திரும்பச் செலுத்துவேன் என ஆண்டவரிடம் கூறினான்.
இவ்வாறு சகேயு "திரும்பச் செலுத்துவேன்" எனக் கூறியதால் மாத்திரமே, "இந்த வீட்டுக்கு இரட்சிப்பு வந்தது" என இயேசு அறிவித்தார்! "நான் திரும்பச் செலுத்துவேன்" என்ற ஆயத்தமான விருப்பமே உண்மையான இரட்சிப்பின் அடையாளங்களில் ஒன்றாகும் (லூக்கா 19:1-10).
யாரோ சில ஜனங்களை நீங்கள் ஏமாற்றியிருந்தால், அவர்களிடம் பணத்தைத் திருப்பிக் கொடுக்கும்போது, நீங்கள் செய்த தவற்றிற்காக மன்னிப்பும் கேட்கவேண்டும். இந்த சந்தர்ப்பத்தில், உங்கள் ஜீவியத்தில் எவ்விதம் இந்த மாற்றம் நிகழ்ந்தது என்பதையும் அவர்களிடம் கூறுங்கள்!
உங்களால் எல்லாப் பணத்தையும் உடனடியாகத் திருப்பிச் செலுத்த முடியவில்லையா? பரவாயில்லை! அவைகளைத் தவணை முறையில் திரும்பச் செலுத்துங்கள். சகேயு எல்லாப் பணத்தையும் திரும்பச் செலுத்திய பின்பு அல்ல.... "திரும்பச் செலுத்துவேன்" என அவன் என்று தீர்மானித்தானோ அன்றே தேவன் அவனை ஏற்றுக்கொண்டார்!
ஜெபம்:
எங்கள் பரம தகப்பனே! எங்கள் சீர்கெட்ட வாழ்வை நீர் விரும்புகிறபடி சரிசெய்து, மெய்யான இரட்சிப்பை நாங்கள் கண்டடைய வகை செய்தருளும்!! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
0 Comments