இன்று "அவருடைய" சத்தம்
ஜனவரி 16
🔸️ தேவன் உங்கள் வாழ்வில் இடைபட அனுமதியுங்கள்! 🔸️
"நீங்கள் கிறிஸ்துவைப்போல் மாறும் ஜீவியத்தில்" முழுவிருப்பம் உள்ளவராக இருந்தால், தேவன் உங்களை உலகப்பொருளின் ஆசை, மனுஷீக கனத்தை தேடுதல், சுய அனுதாபம் போன்ற அநேக கிறிஸ்துவற்ற மனோபாவத்திலிருந்து விடுதலையாக்குவதற்கு ஏதுவாய் எண்ணற்ற நிகழ்ச்சிகள் உங்கள் வாழ்க்கையில் நிகழ்வதற்கு அனுமதிப்பார். ஆனால், 'உங்களுக்கு விருப்பம் இல்லையென்றால்' இவ்வித வழி செல்வதற்கு அவர் ஒருபோதும் வற்புறுத்தமாட்டார்! உங்களைச் சுற்றியுள்ள அநேக விசுவாசிகளின் தரம் குறைந்த தோற்கடிக்கப்பட்ட வாழ்க்கையில் நீங்களும் திருப்தி அடைந்திருந்தால், உங்களை அப்படியே தனியே ஒதுக்கி வைத்துவிடுவார்.
ஆனால், தேவனுக்குரிய மேன்மையான காரியத்தில் நீங்கள் தாகம் உள்ளவராக இருந்தால், உங்களிடம் அவர் தீவிரமாய் செயல்பட்டு உங்களை அழித்துக் கொண்டிருக்கும் "புற்றுநோயை" வெட்டி எறிவார்! உங்களைக் கறைப்படுத்தும் "விக்கிரகங்களை" அழித்து ஒழிப்பார்! நீங்கள் துயரமடையவும், ஏமாற்றமடையவும், நஷ்டமடையவும், நம்பிக்கை குலையவும், இழிவுபடுத்தப்படவும், அநீதியாய் புறங்கூறப்படவும் அவர் அனுமதிப்பார்! எதற்கு? நீங்கள் இனி ஒருபோதும் அசைக்கப்பட முடியாத ஸ்தானத்திற்கு அவர் உங்களைக் கொண்டுவரும்படிக்குத்தான்!! அதற்குப்பிறகு, நீங்கள் பணக்காரராக இருந்தாலோ, ஏழையாய் இருந்தாலோ, அவமதிக்கப்பட்டாலோ, இவை ஒன்றும் உங்களில் எந்த வித்தியாசத்தையும் கொண்டுவர முடியாது!!
இம்மண்ணுலகின் ஒவ்வொரு காரியத்திலும் நீங்கள் கிறிஸ்துவின் மரணத்தை அடைவதால், இயேசுவின் வாழ்க்கையில் பங்குள்ளவர்களாய் மாறி, இவ்வுலகில் நீங்கள் ஒரு ராஜாவைப்போல நடக்க ஆரம்பிப்பதை நீங்களே காண்பீர்கள்! (2கொரிந்தியர் 4:10).
சுயத்திற்கு மரிப்பதின் "விலைக்கிரயத்தை" மிகக் கொஞ்சம் பேர்களே செலுத்த விரும்புகிறபடியால், கிறிஸ்துவின் பரிபூரண ஜீவியத்தை அடையும் வழியைக் கண்டு கொள்பவர்களும் மிகச் சிலராகவே இருக்கின்றனர். உங்கள் 'சுயம் உடைவதற்கு' உங்களை தேவனுக்கு விட்டுக்கொடுங்கள்! நாம் சுயத்திற்கு மரிக்கவில்லையென்றால், விசுவாசத்தினால் ஜீவிப்பதென்பதும் ஒருபோதும் முடியாது!
ஜெபம்:
ஓ, எங்கள் தகப்பனே! எங்கள் 'சுயம்' மரிக்காமல் கிறிஸ்துவின் வாழ்வை பெற இயலாது என்பதை கண்டுகொண்டோம்! நாள்தோறும் சுயத்திற்கு மரிக்க அருள்புரியும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
0 Comments