இன்று "அவருடைய" சத்தம்
ஜனவரி 18
🔸️ தம்முடையவர்களை 'மதிலாய்' நின்று காக்கும் தேவன்! 🔸️
சாத்தானோ அல்லது நம்மை வெறுப்பவர்களோ நம்மைப் பலவிதத்தில் துன்புறுத்துவதற்கு விரும்பலாம்! "ஆனால்" தேவனுடைய அனுமதி இல்லாமல் அவர்கள் நம்மை நெருங்கவே முடியாது!!
பழைய ஏற்பாட்டில், யோபுவை எந்தத் தீங்கும் தொட முடியாதபடி தேவன் அவனைச் சுற்றி வேலியிட்டுக் காத்ததை சாத்தான் உணர்ந்திருந்தான் (யோபு 1:10). இருப்பினும், யோபுவை பரிசுத்தப்படுத்தும்படிக்கு, தேவன் அந்த வேலியை "கொஞ்சம்" திறக்கும்படி செய்து, அவனைத் தாக்குவதற்கு சாத்தானை அனுமதித்தார். வேலியை எவ்வளவு திறக்க வேண்டும்? என்பதை 'தேவனன்றோ' தீர்மானித்து நியமனம் செய்தார்! ஆரம்பத்தில் 'கொஞ்சம்' திறக்கப்பட்டது (யோபு 1). அதற்குப் பிறகு 'சற்றே அதிகமாய்' திறக்கப்பட்டது! (யோபு 2). இவ்வாறு தேவன் திறந்த அந்த வேலியின் வழியாகவே சபேயர்களும், கல்தேயர்களும் நுழைந்து யோபுவின் சம்பத்துக்களை கொள்ளையடித்தார்கள் (யோபு 1:15,17). யோபுவின் பிள்ளைகள்மேல் வீடு தகர்ந்து விழும்படியாக வீசிய பெருங்காற்றுகூட, இவ்வாறு தேவன் திறந்த வேலியின் வழியாகத்தான் பிரவேசித்தது. இருப்பினும், யோபுவின் சரீரத்தை நோய் தாக்கும் அளவிற்கு 'இன்னும் கொஞ்சம் அதிகமாய்' திறந்த பின்புதான் "நோயும்" உள்ளே பிரவேசித்து யோபுவை வாதிக்க முடிந்தது!
தனக்கு நிகழ்பவைகள் எல்லாம் தேவன் "கன்ட்ரோல்" (Control) செய்து கொண்டிருக்கிறார் என்பதை யோபு முதலில் அறிந்து கொள்ளவில்லை. எல்லாம் நிறைவேறி முடிந்த பின்புதான் அதை அறிந்துணர்ந்தான். அவனுக்கு நம்மைப்போல் எழுதி வைக்கப்பட்ட வேத வசனங்கள் இல்லாதபடியால், நாம் யோபுவை குறை சொல்லவே முடியாது. ஆனால் இப்போதோ, தேவனுடைய பிள்ளைகளைச் சுற்றியுள்ள வேலியை ஆளுகை செய்பவர் இன்னார் என்பதை அறிவிக்கும் வேதவசனம் நம்மிடம் இருக்கிறது! நம்மைச் சுற்றிலும் அக்கினி மதிலாக தேவனே அந்த வேலியாய் இருக்கிறார் என்று சகரியா 2:5 பறைசாற்றுவதையும் நாம் அறிந்திருக்கிறோம்.
ஆனால் பரிதாபம் ..... எலிசாவின் வேலையாளைப் போலவே, இப்பரலோக உண்மையை காணமுடியாதபடி நம் கண்கள் அடிக்கடி குருடாய் போய்விடுகிறது. நம்மைச் சுற்றியுள்ள அக்கினி மதிலை நம் கண்கள் காண்பதே இல்லை. எலிசாவினால் இதைக் காண முடிந்ததால் அவன் கொஞ்சமும் பயமற்று இருந்தான் (2 இராஜாக்கள் 6:15-17). நம்முடைய கண்களும் இவ்விதம் திறக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமன்றோ!
ஜெபம்:
அன்பின் பரம தகப்பனே! உமக்குரியவர்களை நீர் எவ்வளவு கவனமாய் பாதுகாக்கிறீர்! நாங்கள் மெய்யாய் பாக்கியம் பெற்றவர்கள். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-



 
 
 
 
 
0 Comments