இன்று "அவருடைய" சத்தம்
ஜனவரி 27
🔸️ உணர்வுள்ள மனசாட்சி தேவன் தந்த வரம்! 🔸️
"ஒரேதரம் மரிப்பதும் பின்பு நியாயத்தீர்ப்பு அடைவதும் மனுஷனுக்கு நியமிக்கப்பட்டிருக்கிறது" என வேதாகமம் கூறுகிறது (எபிரெயர் 9:27).
இந்த பூமியில் செய்யும் குற்றங்களுக்கு 'அநேக மக்கள்' தப்பித்துக் கொள்கிறார்கள். ஆனால்..... முடிவில் இவர்கள் நியாயசனத்திற்கு முன்பு நிற்கும்போது தங்களுக்குரிய நீதியான தண்டனையை இவர்கள் நிச்சயமாய் அடைவார்கள். அதேபோல், அநேக மக்கள் தாங்கள் பிறருக்குச் செய்த நன்மைகளுக்காக இப்பூமியில் பிறரால் பிரதி உபகாரம் தரப்படாமல் இருந்திருக்கலாம்! இருப்பினும், கிறிஸ்து இப்பூமிக்கு திரும்ப வரும்போது அவர்களுக்குரிய பலன் நிச்சயம் அவர்களுக்கு கிடைக்கும்!
இவ்வாறு நாம் எதைச் செய்தாலும் "ஒரு நாளில்" தேவனுக்கு கணக்கு ஒப்புவிக்க வேண்டியது இருக்கிறபடியால், நம் மனசாட்சியின் சப்தத்திற்கு எப்போதும் செவி கொடுக்க வேண்டியது மிக முக்கியமாக இருக்கிறது.
'மனசாட்சி' தேவன் மனிதனுக்கு வழங்கிய ஒரு ஒப்பற்ற வரமாகும். இந்த வரம் நம்முடைய சரீரத்தில் நாம் பெற்றிருக்கும் வலி என்ற வரத்திற்கு ஒப்பாகும். இன்று அநேகர் வலியை தொந்தரவு தரும் ஒன்றாக எண்ணுகிறார்கள். இந்த வலி நம் ஜீவியத்தில் எத்தனை ஆசீர்வாதமாய் இருக்கிறது என்பதை நாம் உணர்வதில்லை. வலியின் மூலமாகவே நம்மில் ஏற்படும் ஏதாகிலும் ஒரு சுகவீனத்தை நம் சரீரம் எச்சரிக்கிறது. நம் சரீரத்தில் நோய் உண்டாவதை அறிவிக்கும் "முதல் சிக்னலாய்" வலி இருக்கிறது. இந்த வலி இல்லாத பட்சத்தில், நமக்கு வியாதி இருந்தால்கூட அதை அறியாதவர்களாகத்தான் இருப்போம். இந்த வலிக்கொப்பாகவே மனசாட்சி இருக்கிறது.
நம் மனசாட்சி சொல்லுகிறபடியால்தான் நாம் யாவரும் நம்மை பாவிகள் என அறிந்திருக்கிறோம். எனவே, நாம் உணர்ந்திடும் குற்ற உணர்வை உதறி விடுவதற்கு நாம் முயற்சிக்கவே கூடாது. ஏனென்றால் இந்த குற்ற உணர்வு வலியின் ஆசீர்வாதத்திற்கு ஒப்பாகும். நாம் ஆவிக்குரிய நோய் கொண்டிருக்கிறோம் என்பதையும், அதிலிருந்து நாம் சுகமடைய வேண்டும் என்பதையும் இந்த குற்ற உணர்வே நமக்கு எடுத்துரைக்கிறது.
ஜெபம்:
பரம தந்தையே! எவ்வித தவற்றையும் உடனே உணர்ந்து உம்மிடம் மனந்திரும்பி வந்துவிட உணர்வுள்ள மனசாட்சியை எமக்கு தந்தருளும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-



0 Comments