இன்று "அவருடைய" சத்தம்
ஜனவரி 28
🔸️ நீங்கள் தெய்வ நற்குணம் அடைய வேண்டும்! 🔸️
தேவன் நம்மை குணாதிசயம் கொண்டவர்களாயும், சுயாதீனமாய் தெரிந்து கொள்ளும் திறன் கொண்டவர்களாயும் படைத்தார். ஆனால் இவ்வித சுயாதீனமாய் தெரிந்துகொள்ளும் சுதந்திரத்தின் நிமித்தம் ஏற்படும் அபாயம் யாதெனில், இந்த சுயாதீனத்தை வைத்து நம்மை நாமே பிரியப்படுத்துவதற்கும் தேவனுடைய பிரமாணங்களுக்கு கீழ்படியாமல் இருப்பதற்கும் பயன்படுத்திவிட முடியும்! இவ்வாறு இருந்தபோதும் தேவன் இந்த விபரீதத்தை சந்திக்க தயாராக இருந்தார். ஏனென்றால், தேவனாகிய தன்னை சுயாதீனமாய் தெரிந்துகொள்ளும் பிள்ளைகளையே அவர் விரும்புகின்றார்!!
தேவன் சிருஷ்டித்த முதல் மனுஷனும், மனுஷியும் ஆதாம் என்றும் ஏவாள் என்றும் அழைக்கப்பட்டார்கள். அவர்கள் சிருஷ்டிக்கப்பட்டபோது "களங்கம் அற்றவர்களாகவே" இருந்தார்கள். ஆனால் பரிசுத்தமாய் இருப்பதற்கோ, அதை அவர்கள் தாங்களாகவே தெரிந்துகொள்ள வேண்டும். இந்த தெரிந்துகொள்ளுதல் ஏற்படுவதற்காகத்தான் அவர்கள் சோதிக்கப்பட வேண்டியிருந்தது. ஏனெனில் அப்போது மாத்திரமே அவர்கள் 'தீமையை மறுத்து' தேவனைத் தெரிந்துகொள்ள முடியும்! இதற்காகவே சாத்தான் அவர்களிடம் வந்து அவர்களைச் சோதிப்பதற்கு தேவன் அனுமதித்தார்! இந்த நிகழ்ச்சியை வேதாகமத்தில் ஆதியாகமம் 2, 3 அதிகாரங்களில் வாசிக்கிறோம்.
களங்கமற்ற தன்மைக்கும் பரிசுத்தத்திற்கும் ஏராளமான வித்தியாசங்கள் உள்ளன. ஒரு குழந்தையிடம் நாம் காண்பதே களங்கமற்ற தன்மையாகும். ஆதாம் சிருஷ்டிக்கப்பட்டபோது அவன் எப்படி இருந்திருப்பான் என்பதை நீங்கள் அறிய விரும்பினால், ஒரு குழந்தையை சற்றே உற்று நோக்குங்கள்..... நன்மை-தீமை இன்னதென்று அறியாததும் களங்கமற்றதுமான தன்மையையே அக்குழந்தையிடம் நீங்கள் காண்பீர்கள். ஆனால் அக்குழந்தை பரிசுத்தமானதோ அல்லது பூரணமானதோ அல்ல! பூரணம் அடையவேண்டும் என்றால், அக்குழந்தை வளர்ச்சி அடைந்து, 'தெரிந்து கொள்ளுதலை' தன் வாழ்வில் கைக்கொண்டு.... அதன் மூலம் தீமையை மறுத்து தேவனைத் தெரிந்து கொண்டு வளர வேண்டும்.
ஜெபம்:
பரம தந்தையே! தெய்வ நற்குணமே எங்கள் தீராத வாஞ்சை! எங்கள் 'சுயாதீனத்தை' கொண்டு தீமையை மறுத்து உமது நற்குணம் செய்திடவே பெலன் தாரும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
0 Comments