இன்று "அவருடைய" சத்தம்
ஜனவரி 30
🔸️ சிருஷ்டிகரே! நீர் மாத்திரம் எனக்கு வேண்டும்! 🔸️
சிருஷ்டிக்கப்பட்ட ஒன்றை சிருஷ்டிக்கு மேலாய் உயர்த்துவதே விக்கிரக ஆராதனை ஆகும். அது பணமோ அல்லது அழகான ஸ்திரீயோ அல்லது நம்முடைய பேர் புகழோ ஆகிய எதுவாகவும் இருக்கலாம். இவ்வாறு சிருஷ்டிக்கப்பட்ட ஒன்றை சிருஷ்டிகருக்கு பதிலாய் தொழுது கொள்ளுவதால், அதுவே விக்கிரக ஆராதனையாக இருக்கிறது. இதுவே எல்லாப் பாவங்களுக்கும் வேர் என்றும் கூறலாம்!
உண்மையான மனந்திரும்புதல், சிருஷ்டிக்கப்பட்ட எல்லாவற்றையும் விட்டுவிட்டு தேவனிடத்தில் திரும்பி, "சர்வ வல்லமையுள்ள தேவனே! நீர் ஒருவரே தொழுகைக்கும் ஆராதனைக்கும் பாத்திரர். இந்நாள்வரை, சிருஷ்டிக்கப்பட்டவைகளை நான் தொழுது கொண்டதற்காக மிகவும் வருத்தம் அடைகிறேன். இன்றிலிருந்து என் வாழ்வில் நீர் மாத்திரமே எனக்கு எல்லாவற்றிலும் மேலானவர்" என நாம் கூறுவதாக இருக்க வேண்டும்! (சங்கீதம் 73:25).
"நீர் மாத்திரம்" என்பதற்காக, நம்முடைய வேலைகளை அல்லது குடும்பத்தை விட்டு விட்டு ஏதாகிலும் காடு அல்லது மலைக்குச் சென்று சந்நியாசியாக மாறவேண்டும் என்பது பொருளாகாது. அப்படி இல்லவே இல்லை! நாம் யாவரும் நம்முடைய பிழைப்பிற்காக சம்பாதிக்கவும், குடும்பங்களை உடையவர்களாய் இருக்கவுமே தேவன் விரும்புகிறார். பணம் சம்பாதிப்பது ஒரு பாவமல்ல. ஆனால், தேவனைக் காட்டிலும் பணத்தை அதிகமாய் நேசிப்பதே பாவமாகும்!
இந்த மாய லோகத்தின் ஈர்ப்பு மகா கொடியது! "உலக மகிமையை கணப்பொழுதில்" காண்பித்து, இயேசுவையே வஞ்சித்திட சாத்தான் முயன்றான். ஆனால் இயேசுவோ 'லோக மயக்கம்' என்ற விக்கிரக ஆராதனையை மறுத்து, "தேவனுக்கே என்றும் ஆராதனை" செய்கிறவராய் ஜெயம் பெற்றார்! (லூக்கா 4:8). நாமும் அவரது அடிகளையே பின்பற்றக் கடவோம்!!
ஜெபம்:
பரம சிருஷ்டி கர்த்தாவே! உம்மைவிட்டு பிரிக்கும் யாதொன்றும் 'விக்கிரகமே' ஆகும். உம்மையே என்றும் சேவித்திட எங்களுக்கு அருள்புரியும்! இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் பிதாவே, ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-



0 Comments