இன்று "அவருடைய" சத்தம்
ஜனவரி 31
🔸️ சாட்சியாய் வாழ தேவபெலன் வேண்டும்! 🔸️
தேவ பெலனுக்கென நமக்கு அளிக்கப்பட்டிருக்கும் முதல் மூலதனமாய் இருப்பது "தேவனுடைய வார்த்தையே" ஆகும். நாம் சோதனைகளை ஜெயிப்பதற்கு வேதப்புத்தகம் ஒரு வலிமையான ஆயுதமாய் நமக்கு உதவுகிறது. இயேசுகூட, சாத்தானுடைய சோதனைகளை தேவனுடைய வார்த்தையின் வல்லமையின் மூலமாகவே ஜெயித்தார் என நாம் வேதாகமத்தில் வாசிக்கிறோம் (மத்தேயு 4:1-11). இதனிமித்தமே நாம் ஒவ்வொரு நாளும் தேவனுடைய வசனத்தை வாசிக்கும் பழக்கத்தை உடையவர்களாய் இருக்க வேண்டும். அதனிமித்தம் தேவன் நம்மோடு தம் வார்த்தையின் மூலமாய் பேசி, அன்றாட நம் ஜீவியத்தின் போராட்டங்களைச் சந்திப்பதற்கு நம்மைப் பெலப்படுத்துகிறார்!
வேதாகமம் வாலிபர்களைப் பார்த்து, "வாலிபரே, நீங்கள் பலவான்களாய் இருக்கிறதினாலும், தேவவசனம் உங்களில் நிலைத்திருக்கிறதினாலும், நீங்கள் பொல்லாங்கனை ஜெயித்தீர்கள்" என கூறுகிறது (1யோவான் 2:14).
தேவ பெலனுக்கென நமக்கு அளிக்கப்பட்டிருக்கும் இரண்டாவது மூலதனமாகயிருப்பது, நமக்குள் வந்து வாசமாயிருக்கும் "பரிசுத்த ஆவியாகிய தேவனே" ஆவார். நம்முடன் தினமும் பேசவும், வாழ்க்கைப் போராட்டங்களுக்குரிய பெலனைத் தரவும், கிறிஸ்துவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றும் சீஷர்களாய் வாழ்வதற்கு உதவி செய்யவும், பரிசுத்த ஆவியானவர் நமக்குள் நிரந்தரமாய் தங்கி வாழ விரும்புகிறார்! எனவேதான், பரிசுத்தாவியினால் நம்மை தொடர்ச்சியாய் நிரப்பும்படி நாம் தேவனிடம் கேட்க வேண்டும்!!
தேவ பெலனுக்கென நமக்கு அளிக்கப்பட்டிருக்கும் மூன்றாவது மூலதனமாக இருப்பது, "ஏக சிந்தை கொண்ட கிறிஸ்தவர்களோடு கொண்டிருக்கும் ஐக்கியமாகும்." அனேக கரித்துண்டுகள் ஒன்றாய் எரியும்போது, அவை அனைத்தும் பிரகாசமாய் சுடர்விட்டு எரியும்.
பெயரளவில் மாத்திரம் கிறிஸ்தவர்களாய் இருப்பவர்களை நாம் தவிர்த்துவிடல் வேண்டும்! நாமோ அனுபவபூர்வமான கிறிஸ்தவர்களாய் மாறி, இயேசு கிறிஸ்துவைத் தங்கள் அனுதின வாழ்வில் பின்பற்ற வாஞ்சிப்பவர்களோடு மாத்திரமே ஐக்கியம் கொள்ள நாடவேண்டும்!
ஜெபம்:
அன்பின் பிதாவே! நாங்கள் உமக்கு சாட்சியாய் வாழ்ந்திட அருளித்தந்த "மூலதனங்களுக்கு" நன்றி! அவைகளைப் பற்றிக்கொண்டு உமக்கென்று சுடர்விட அருள்புரியும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-



0 Comments