இன்று "அவருடைய" சத்தம்
பிப்ரவரி 4
🔸️ நித்தியத்தின் மேன்மையை சுட்டிக்காட்டும் வேதம்! 🔸️
இக்கொடிய இருளான நாட்களில், உங்களுக்கும் எனக்கும் அருளப்பட்டிருக்கும் "வெளிச்சம்" வேதாகமம் ஒன்றில் மாத்திரமே காணப்படுகிறது. ஆகவே வேதாகமத்தை கருத்தாய் தியானித்து, மெய்யான கிறிஸ்தவர்களுக்கு எவைகளெல்லாம் வாழ்வின் உயர்ந்த இலட்சியங்களாய் இருந்திட வேண்டும் என்பதைக் காண நாம் நாடுவோமாக!
அவ்வாறு நாம் வெளிச்சத்தில் காணும் சத்தியங்கள் நம்மைப் பாதிப்பது போலவும், நம்மை மனம் புண்படச் செய்வது போலவும்கூட தோன்றக்கூடும்! ஏனெனில், வேதாகமம் மெய்யாகவே இருபுறமும் கருக்குள்ள பட்டயமாக நம்மை ஊடுருவிச் சென்று, நம் மாய ரூபத்தைக் கிழித்து நம் உண்மை நிலையை காட்டிவிடும் என்பது உண்மை!!
இவ்வேளையில், கடந்த இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆஸ்வால்டு சேம்பர்ஸ் என்ற தேவனுடைய ஊழியனின் ஞானமுள்ள வார்த்தைகளைக் கொண்டு நாம் அனைவரும் தைரியம் பெறுவோமாக! அவர் கூறினார்:
"இயேசுவின் வார்த்தைகள் என்னைத் தாக்கி இடறச் செய்யட்டும்! எதுவரை? இனி தாக்கப்படுவதற்கும், இடறச் செய்வதற்கும் என்னில் ஒன்றும் இல்லை என்ற நிலை என்னில் ஏற்படும் வரை!! (மத்தேயு 11:6).
இயேசுவின் வார்த்தைகளால் நான் இந்நாள்வரை பாதிக்கப்படாதிருந்தால், வேதத்திலிருந்து அவர் பேசுவதை இதுநாள்வரை நான் கேட்கவில்லை என்பதுதானே உண்மை? ஒரு மனுஷனை தேவனுடைய வல்லமையான ஊழியத்திலிருந்து 'அவனை அழிக்கப் போகும்' யாதொன்றின் மீதும் இயேசுகிறிஸ்து தயவு காட்டியதே இல்லை! கர்த்தருடைய ஆவியானவர், ஆண்டவருடைய ஒரு வார்த்தையை நம் மனதிற்கு கொண்டு வந்து அதன் மூலம் நம்மைப் 'பாதிக்கும்படி' செய்திருந்தால், அந்த பாதிக்கப்பட்ட ஒன்று 'மரணம்' அடையும்வரை நம்மில் கிரியை செய்யும் என்பது அதிக நிச்சயம்!!" ("உன்னை நான் அனுப்பினேன்" என்ற புத்தகத்தில் ஆஸ்வால்டு சேம்பர்ஸ் கூறியவைகள்).
🔹️ "என் செவிகளைத் திறந்தருளும், நான் கேட்கட்டும்!
🔹️ நீர் அனுப்பும் சத்தியத்தின் குரல் நானும் ஏற்கட்டும்!
🔹️ உம் வார்த்தை செவிதனில் விழுந்த அக்கணமே அனைத்து மாயையும் என்னிலிருந்து அகலுமே!
🔹️ அமைதியாய் நானும் காத்திருப்பேன் உமக்காய்!
🔹️ ஆயத்தம் நானும் உம் சித்தம் காண்பேன் சீராய்!
🔹️ என் கண்களைத் திறந்தருளும் ஒளி அதில் ஏற்றிடும் தூய ஆவியே!
🔹️ என் திவ்வியமே! உம் சித்தம் ஆகட்டும்!!"
ஜெபம்:
பரலோக பிதாவே! உமது வேதமே நித்தியத்தின் வழிகாட்டும் எம் வெளிச்சம்! அதற்கு எங்களை முற்றிலும் ஒப்புவித்து வாழ அனுக்கிரகம் செய்தருளும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-



0 Comments