இன்று "அவருடைய" சத்தம்
பிப்ரவரி 9
🔸️ தேவன் வழங்கும் நற்சாட்சியே மெய் ஆசீர்வாதம்! 🔸️
தேவன் மூலமாய் உலகப் பொருட்களின் ஆசீர்வாதத்தைப் பெற்றுக் கொள்வதற்கு நிறைவேற்ற வேண்டிய ஒரே நிபந்தனை என்னவென்றால், ஒருவர் நல்லவராகவோ அல்லது தீயவராகவோ இருக்க வேண்டும், அவ்வளவுதான்!! ஏனென்றால், தேவன் நீதியுள்ளோர் மீதும் அநீதியுள்ளோர் மீதும் ஒரே சமமாகவே தன் சூரியனை உதிக்கப் பண்ணுகிறார் (மத்தேயு 5:45) என ஆண்டவராகிய இயேசு கூறினார். எனவே பொருளாதார ஆசீர்வாதங்கள், தேவன் ஒரு மனிதனின் வாழ்க்கையை அங்கீகரித்ததற்கு அடையாளமே கிடையாது! வனாந்தரத்தில் பல இலட்சம் இஸ்ரவேலர்கள் 40 வருடங்களாக தேவனுக்கு கீழ்படியாமல் இருந்தனர். அவர்கள் மீது தேவன் கடுமையாய் கோபம் கொண்டிருந்தார் (எபிரேயர் 3:17). இருப்பினும், இந்த எல்லா வருட காலமும் தேவன் அவர்களுக்கு உணவையும் நல்ல சுகத்தையும் கொடுத்தார். ஆம், அதையும் "அற்புதமாக" கொடுத்தார் (உபாகமம் 8:2). எனவே சரீர பொருளாதாரத் தேவைகளுக்கான ஜெபத்திற்கு கிடைக்கும் "அற்புதமான பதில்கள்", தேவன் ஒரு மனிதனின் வாழ்க்கையைக் குறித்து மகிழ்ந்திருக்கிறார் என்பதற்கு அடையாளம் அல்லவே அல்ல!
இதற்கெல்லாம் மாறாக, இப்பூமியில் இயேசுகிறித்து வாழ்ந்தபோது, முப்பது வயது நிறைவு பெற்றதும் தேவ அங்கீகாரம் அவருக்குக் கிட்டியது! அதற்கு ஒரே காரணம் என்னவெனில், இந்த எல்லா வருடங்களிலும் இயேசு உண்மை உள்ளவராய் இருந்து "அவரை பாவம் செய்யும்படி" தூண்டிய சோதனைகளை மேற்கொண்டு ஜெயித்தார்! அவர் தன்னையல்ல, பிதாவை மையமாகக் கொண்டதோர் வாழ்க்கையை வாழ்ந்தார்! ஆம், அவர் தன்னைத்தானே பிரியப் படுத்துகின்ற ஒன்றையும் ஒருபோதும் செய்யவேயில்லை (ரோமர் 15:3).
அவருடைய ஞானஸ்நானத்தில், "இவர் என் நேசகுமாரன்; இவரில் நான் பிரியமாயிருக்கிறேன்" என்றே பிதா நற்சாட்சி வழங்கினார். ஆம், "நான் எப்படியெல்லாம் ஆசீர்வதித்த என் நேச குமாரன்" என்று பிதா கூறவேயில்லை! இந்த இரண்டாவது சாட்சியில் எந்த மதிப்பும் இல்லவேயில்லை! இயேசுவுக்குத் தேவையாய் இருந்ததெல்லாம் தேவ அங்கீகாரத்தை முடிசூட்டும் அந்த முதலாவது சாட்சியே ஆகும்! நாமும் இதே சாட்சியைப் பெறுவதற்காகத்தான் இன்று கர்த்தராகிய இயேசுவை பின்பற்றுகிறோம்!!
ஜெபம்:
பரிசுத்த பரமபிதாவே! உலகப் பொருட்களின் ஆசிர்வாதத்திற்காய் உம்மைப் பின்பற்றாமல், உம்மைப் பிரியப்படுத்தி வாழும் ஜீவியத்தையே வேண்டி விரும்பி ஜெபிக்கிறோம்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-



0 Comments