இன்று "அவருடைய" சத்தம்
பிப்ரவரி 10
🔸️ நீதிமான்களாக தேவனிடம் கிட்டி சேரும் பாக்கியம்! 🔸️
நம் கடந்தகால ஜீவியத்தின் குற்றங்களை இயேசுகிறிஸ்துவின் மூலமாய் பெற்ற "பாவமன்னிப்பு" அகற்றிவிடுகிறது. ஆனால், அது மாத்திரம் நம்மை பரிசுத்தராய் மாற்ற முடிவதில்லை. ஆகவே, பூரண பரிசுத்தம் நிறைந்த தேவனுக்கு முன்பாக நாம் நிற்பதற்கு இன்னமும் தகுதி பெறவில்லை! எனவேதான் தேவன் நமக்காக மேலானதொன்றைச் செய்ய வேண்டியதாயிருந்தது.
அவர் நம்மை நீதிமானாக்குவதே அச்செயலாகும்!
"பரிபூரணம் நிறைந்த கிறிஸ்துவின் நீதியை தேவன் நம் கணக்கில் வரவு வைக்கிறார்" என்பதே சரியான பொருளாகும். இதன் விளைவாய், கிறிஸ்து எங்ஙனம் தேவனுக்கு முன்பாக பூரணராய் நின்றிட முடியுமோ, அதற்கு ஒப்பாகவே நாமும் தேவனுக்கு முன்பாக நின்றிட முடியும்! இந்த சத்தியம் நம்மை மகா ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது..... ஆனால், அது உண்மை!!
ஒரு பிச்சைக்காரனின் வங்கிக் கணக்கில், அவனுடைய பெயரில் பல கோடி ரூபாய்கள் வரவு செய்வது எவ்வளவு ஆச்சரியமோ, அதற்கு ஒப்பாகவே மேற்காணும் சத்தியம் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது!! இவ்வளவு பெரிய தொகையை இந்த ஏழைப் பிச்சைக்காரன் சம்பாதிக்கவோ அல்லது அதற்கு தகுதி உள்ளவனோ அல்ல. இருப்பினும், அப்பெரும்தொகை ஓர் இலவச அன்பளிப்பாகவே அவனுக்குத் தரப்பட்டது!!
ஆகவே, நீதிமானாக்கப்படுதல் என்பது "நம் கடந்த ஜீவிய காலம் முழுவதும் நாம் இதுவரை ஒரு தடவைகூட பாவம் செய்யாதவர்களைப் போல தேவன் நம்மை ஏற்றுக் கொள்வதாகும்! மேலும் இன்று வாழும் ஜீவியத்தில் நாம் பூரண நீதி உள்ளவர்களைப்போல காணப்படுவதுமாகும்!!"
"இவ்விதமாக, நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டு இருக்கிறபடியால்..... இயேசுகிறிஸ்து மூலமாய் நாம் இந்த கிருபையில் பிரவேசிக்கும் சிலாக்கியத்தை விசுவாசத்தினால் பெற்று நிலை கொண்டிருக்கிறோம்" (ரோமர் 5:1,2) என தேவனுடைய வசனம் கூறுவதைப் பாருங்கள். எனவே, நாம் இப்போது எல்லா சமயங்களிலும் தேவனுடைய சமூகத்திற்கு முன்பாக எவ்வித தயக்கமும் பயமுமின்றி தைரியமாகப் பிரவேசிக்க முடியும்! ஏனெனில் இவ்விதம் தைரியமாய் கிட்டிச் சேருவதற்கான வழியை தேவனே நமக்காகத் திறந்திருக்கிறார்!!
ஜெபம்:
அன்பின் பரலோகப் பிதாவே! ஆண்டவர் இயேசு கிறிஸ்து மூலமாய் பாவமன்னிப்பு மாத்திரமல்லாமல் உம்மண்டை நாங்கள் கிட்டிச் சேரும்படி பாவ குற்ற உணர்வை நீக்கி எங்களை 'நீதிமானாகவும்' மாற்றிய தயவிற்கு உமக்கே ஸ்தோத்திரம்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
0 Comments