இன்று "அவருடைய" சத்தம்
பிப்ரவரி 11
🔸️ வெளிப்புற உலக வசீகரமல்ல, 'உள்ளான ஜீவிய வசீகரமே' வேண்டும்! 🔸️
ஏசாயா 2:12-16 வசனங்களில், 'சேனைகளுடைய கர்த்தரின் நாளானது...... எல்லா சித்திர விநோதங்கள் (தோற்றத்தில் அழகானவைகள்) மேலும் வரும்" என காண்கிறோம்.
இன்று இவ்வாறாகவே மனுஷர் பார்வைக்கு கவர்ச்சியூட்டும் வசீகரங்களே ஏராளமாய் உள்ளன! ஆனால் இது போன்றவைகளை வியந்து பாராட்டுவதின் மூலமாய், உங்கள் உள்ளான மனிதனில் எந்த அளவிற்கு மறுரூபமடையும் பெலன் குன்றிப்போகும் என்பதை சிந்தித்துப் பாருங்கள்! ஆம், இவ்வாறு வெளிப்புற கவர்ச்சியால் எந்த அளவுக்கு ஈர்க்கப்பட்டு இருக்கிறோமோ அந்த அளவிற்கு நம் உள்ளான ஜீவியத்தின் வளர்ச்சியில் குறைவுபடுவோம் என்ற உண்மையை நாம் மனதில் கொள்வோமாக!!
வெளிப்புறத்திற்குரிய யாதொன்றும் நம் சந்தோஷத்தை சிறிதளவுகூட கூட்ட முடியாது! ஆனால் உங்கள் முழு இருதயமாக தேவனுக்கு பயந்து வாழ்ந்தால், நீங்கள் சம்பூரண இரட்சிப்பை அடைவது மாத்திரமல்லாமல், நிறைவான மகிழ்ச்சியும் அடைவீர்கள்!!
தேவனோ, நேற்றும் இன்றும் மாறாதவராகவே இருக்கிறார். அன்று ஏசாயாவின் நாட்களில் வெளித்தோற்றமான கவர்ச்சியை அருவருத்தார்! இன்றும் பவுல் தன்னுடைய நாட்களில் "மேட்டிமையானவைகளை சிந்தியாமல் தாழ்மையானவைகளுக்கு நம்மை இணங்கும்படியே" (ரோமர் 12:16) புத்தி சொன்னார். அதாவது, நாம் எப்போதும் தாழ்மையானவைகளையே தெரிந்துகொள்ள வேண்டும். ஆனால், இவ்வாறு தாழ்மைக்கு இணங்கும் சிந்தை இன்று ஜனங்களிடத்தில் காணப்படுகிறதா? இல்லவே இல்லை! இதற்கு நேர் எதிரிடையான மேன்மையானவைகளில்தானே நாட்டம் கொள்கிறார்கள்!!
ஏசாயா 3:16-24 வசனங்களில், மாயையாகிய வெளித்தோற்ற கவர்ச்சியை தங்களுக்குத் தேடுகிறவர்கள்மீதும் இப்பூமிக்குரிய உயர்ந்த வஸ்துக்களைப் போற்றி மதிப்பவர்கள்மீதும், எவ்வாறு தேவனுடைய உக்கிரமான கோபம் வெளிப்படும் என கூறப்பட்டுள்ளது. ஆம், தங்கள் பேச்சின் நளினம், தங்கள் ஒய்யாரப் பார்வை, தங்களைக் குறித்து மற்றவர்களின் கணிப்பு, போன்ற சிந்தைகளால் ஆட்கொள்ளப்பட்டு வாழ்பவர்கள்மீதே தேவகோபம் தூண்டப்படுகிறது! ஏனெனில், உள்ளான வசீகரத்தில் மாத்திரமே நாட்டம் கொண்டிருப்பது, அந்தரங்க ஜீவியத்தில் மறுரூபமடைவது, முழுமையான தேவ பக்தியுடன் வாழ்வது, போன்ற ஜீவியத்திற்கு, இவையாவும் நேர் முரணானவைகளே யாகும்! தேவனோ இதுபோன்ற அந்தரங்க தேவபக்தியின் சிந்தையில்தான் அக்கறை கொண்டுள்ளார்.
ஜெபம்:
அன்பின் பிதாவே! நிறைவான மகிழ்ச்சிக்கு எங்கள் உள்ளான ஜீவியத்தில் அடைந்திடும் இரட்சிப்பே அல்லாமல், மாயையான உலக வசீகரம் மகிழ்ச்சி தர முடியாது என்பதை அறிந்தோம்! அந்தரங்க வாழ்வில் உண்மையாய் வாழ கிருபை செய்தருளும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
0 Comments