இன்று "அவருடைய" சத்தம்
பிப்ரவரி 13
🔸️ நம் அந்தரங்கத்தில் சுமந்திட வேண்டிய அனுதின சிலுவை! 🔸️
கொரிந்தியர்கள், சிலுவையில்லாத இயேசுவை விசுவாசித்து வஞ்சிக்கப்படுவார்களோ என்று பவுல் அஞ்சினார் (2 கொரி.11:4). யார் இந்த சிலுவை இல்லாத இயேசு? மக்களை பாவமன்னிப்பு பெறுவதற்கு அழைத்துவிட்டு, சிலுவை எடுத்து இயேசுவைப் பின்பற்றும் அவசியத்தை வலியுறுத்தாத இயேசு! சுவிசேஷத்தின் உண்மை இயேசுவோ, தன் ஜீவிய காலமெல்லாம் தொடர்ச்சியாக சுயத்தை வெறுத்து, சிலுவையில் அறையுண்ட வாழ்க்கை வாழ்ந்து, மக்களும் இப்படிப்பட்ட அவரது வாழ்க்கையை பின்பற்ற அழைத்த இயேசு! இதை பவுல் தெளிவாய் உணர்ந்திருந்தார். இளைப்பாறுதல் தேடி பாரத்தோடு இயேசுவிடம் வந்தவர்கள் உடனடியாக 'அவரது நுகத்தை' தங்கள் மேல் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதுதான் சத்தியம் (மத்தேயு 11: 28,29). ஆம், சிலுவை எடுத்து அனுதினமும் சுயத்திற்கு மரிக்காமல் (லூக்கா 9:23; 14-27) ஒருகாலும் இயேசுவின் சீஷனாய் இருக்க முடியாது என்று ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து தெளிவுபடுத்தியதை பவுல் நன்றாய் அறிந்திருந்தார்! இந்த சீஷத்துவத்தின் பூரண சுவிசேஷத்தையே பவுல் எல்லா இடங்களிலும் பிரசங்கித்தார் (அப்.20:26).
அனேக பிரசங்கிகள் "இலகுவான" சுவிசேஷத்தைப் பிரசங்கித்தார்கள் என்பதை பவுல் அறிந்திருந்தார். இந்த இலகுவான சுவிசேஷத்தின் இயேசு ஆசீர்வதிப்பவர், மன்னிப்பவர், சுகம் அளிப்பவர், ஜெபங்களுக்கு பதில் தருபவர்! "ஆனால்" பாவம், உலகம், சுயம் ஆகியவற்றை நூற்றுக்கு நூறு விட்டுவிட்டு திரும்ப, ஒருபோதும் அழைக்காத இயேசு! இந்த இயேசுதான் போலியான "வேறொரு இயேசு!"
பேதுருவுக்கும் மற்றும் எல்லா அப்போஸ்தலர்களுக்கும் தான் மரிக்கப்போகும் "வெளியரங்கமான சிலுவையைப்" (External Cross) பற்றி இயேசு கூறியிருந்தார் (மத்தேயு 16:21). மேலும் தான் அனுதினமும் "அந்தரங்க" சிலுவையில் (Inward Cross) ஏற்கனவே மரித்துக் கொண்டிருப்பதையும், அதைப்போலவே தன்னைப் பின்பற்ற விரும்பும் ஒவ்வொரு உண்மை சீஷனும் *அனுதினமும்* தன் ஜீவனை இச்சிலுவையில் இழக்க வேண்டும் (மரிக்க வேண்டும்) என்ற சத்தியத்தையும் அவர்களுக்குப் போதித்திருந்தார் (மத்தேயு 16:24).
நாம் நமக்குரியவைகளை அல்ல, தேவனுக்குரியவைகளை தேடுவோமென்றால், இந்த சத்தியத்தை புரிந்திட முடியும். நம்முடைய பாவங்களுக்கு நிவாரணமாய் மரித்த இயேசுவின் மரணத்தில் நாம் பங்குபெற முடியாது. ஆனால், அனுதின "இயேசுவின் மரணத்தில்" நாம் பங்குபெற்றே ஆக வேண்டும்! இயேசுவின் ஜீவன் பெற அதுவே வழி!!
ஜெபம்:
எங்கள் பரலோக பிதாவே! கல்வாரி சிலுவை தந்த இரட்சிப்பிற்கும் மேலாக, ஜீவனையும், இளைப்பாறுதலையும் நாங்கள் கண்டடையும்படி இயேசு "அனுதினம் நாங்கள் சுமந்து வரும்படி" முன்வைத்த சிலுவை உபதேசத்திற்கு நன்றி! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
0 Comments