இன்று "அவருடைய" சத்தம்
பிப்ரவரி 16
🔸️ நம் சுயம் சிலுவையில் அறையப்பட வேண்டும்! 🔸️
கிறிஸ்துவின் ஜீவனுக்கு (Life of Christ) நம் சுய- வாழ்க்கையே பிரதானமான எதிரியாகும். இந்த சுய-வாழ்க்கையை "மாம்சம்" (The Flesh) என வேதம் போதிக்கின்றது. நமக்குள் குடிகொண்டிருக்கும் சகலவிதமான பொல்லாத இச்சைகளின் பண்டகசாலையே இந்த மாம்சமாகும்! இக்கேடான இச்சைகளின் நிமித்தமே நம்முடைய சுய ஆதாயத்தைத் தேடும்படியும், நமக்கு இஷ்டமான சொந்த-வழியில் செல்லும்படியும் நாம் சோதிக்கப்படுகிறோம்!
நீங்கள் நேர்மை உள்ளவர்களாய் இருந்தால், உங்களுடைய நல்ல கிரியைகள் கூட தீய நோக்கத்தினால் கறைபட்டிருக்கிறது என்பதை ஒத்துக்கொள்வீர்கள்! கறை புரையோடிய நம் இச்சைகளிலிருந்தே கறைபட்ட தீய நோக்கங்கள் எழும்பி வருகிறது!! எனவே நாம் இந்த மாம்சத்தை வெறுத்தாலொழிய நாம் ஒருக்காலும் ஆண்டவரைப் பின்பற்றிச் சென்றிட முடியாது!!
இதனிமித்தமே, நம் சொந்த ஜீவனை வெறுப்பதை (அல்லது இழப்பதைக்) குறித்து இயேசு திரும்பத் திரும்ப வலியுறுத்திக் கூறினார். இவ்வாறு, நம் சுய ஜீவியத்தை வெறுப்பதைக் குறிப்பிட்டு சுவிசேஷங்களில் 6-தடவை திரும்பத் திரும்ப கூறப்பட்டிருப்பதைக் காண்கிறோம். (மத்தேயு 10:39; 16:25; மாற்கு 8:35; லூக்கா 9:24; 14:26; யோவான் 12:25). ஆண்டவராகிய இயேசு பிரசங்கித்த இந்த செய்திதான் சுவிசேஷங்களில் அடிக்கடி கூறப்பட்டுள்ளது. ஆனால்..... அந்தோ, இன்று இந்தச் செய்திதான் எப்போதோ அபூர்வமாய் பிரசங்கிக்கப்பட்டும்..... மிகக் குறைந்த அளவில் புரிந்து கொள்ளப்பட்டும் உள்ளது!
உங்கள் சொந்த ஜீவனை நீங்கள் வெறுக்க வேண்டுமென்றால், உங்கள் சுய உரிமைகளையும், சுய லாபங்களையும், சுய மதிப்பையும், சுய வழிகளையும், சுய இலட்சியங்களையும், அதன் அபிலாஷைகளையும் தேடாமல் அவைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திட வேண்டும்! இவ்வழி செல்வதற்கு நீங்கள் ஆயத்தமா? அப்போது மாத்திரமே நீங்கள் இயேசுவின் சீஷனாய் திகழ்ந்திட முடியும்!!
ஜெபம்:
பிரியமுள்ள பரம தகப்பனே! ஆண்டவர் இயேசு நடந்து சென்ற சிலுவைப் பாதையைக் கண்டு அவரது அடிச்சுவடுகள் நடந்துவர நாங்கள் ஆயத்தம்! அவரைப்போலவே 'சுயத்தை மறுத்திட' தயை புரிந்தருளும்! கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
0 Comments