இன்று "அவருடைய" சத்தம்
பிப்ரவரி 17
🔸️ நம் "பாடுகள்" வழங்கும் பரம ஐசுவரியம்! 🔸️
நம்மைவிடப் பாடுகள் குறைவாய் இருப்பதுபோல் தோன்றுகிறவர்களைக் கண்டு நாம் பொறாமை கொள்வது சுத்த மதியீனம்! பாடுகள் எவ்வளவு அதிகமோ, அவ்வளவு அதிகமாய் இயேசுவின் மகிமையை அடையும் சந்தர்ப்பத்தையும் பெறுகிறோம். (2தெச.2:14). உதாரணமாக, மற்ற விசுவாசிகளிடம் இருப்பதுபோல் அதிகமான உலகப் பொருட்கள் உங்களிடம் இல்லை என்று வைத்துக் கொள்ளுங்கள்; அதனால் என்ன? இப்போது உங்கள் எல்லா தேவைக்கும் அவரையே நம்பும்படி அதிகமான சந்தர்ப்பம் உங்களுக்கு கிட்டிவிட்டதே! எனவே இப்போது உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் தாழ்ச்சியானது ஒரு கஷ்டகாலம் அல்ல! அது ஆசீர்வாதமே!! ஆனால், இதற்கு மாறாக, உங்கள் பாடுகளில் நீங்கள் முறுமுறுத்துக் குறை கூறுவீர்களென்றால், உங்களுக்குக் கிட்டிய அரிய சந்தர்ப்பத்தை வீணாக்கிவிட்டீர்கள்!! ஆண்டவர் உங்களுக்குத் தர எண்ணிய மகிமையையும் இழந்து போனீர்கள்...... இது, எத்தனை பெரு நஷ்டம்!
தன் வழியில் குறுக்கிடும் ஒவ்வொரு பாடுகளின் சந்தர்ப்பத்தையும் பிரயோஜனப்படுத்திக் கொள்பவனே ஞானவான்! ஒவ்வொரு நாளும் பலதரப்பட்ட சோதனைகளை நாம் சந்திக்கிறோம். அந்த ஒவ்வொரு சோதனையிலும் நம் ஆண்டவரின் மகிமையை இன்னும் கொஞ்சம் அடைவதற்கான சந்தர்ப்பமும் கூடவே வருகிறது என்ற உண்மையை நாம் ஒருபோதும் மறந்துவிடவே கூடாது!!
இவ்வாறு தொடர்ந்து அந்தரங்கத்தில் உண்மையுள்ளவர்களாய் இருப்பதே, நித்தியத்தில் திரட்சியான மகிமையின் ஐசுவரியத்தை நமக்குக் கொண்டுவந்து சேர்க்கும்! ஆனால், நீங்கள் நழுவவிடும் சந்தர்ப்பங்களோ மீண்டுமாக உங்களுக்கு கிடைக்கவே கிடைக்காது..... ஆம், அவைகளை நீங்கள் நித்திய காலமாய் இழந்துவிட்டீர்கள்!
நாம் பிறப்பதற்கு முன்பாகவே தேவன் நமக்காகப் பரலோக சம்பத்துக்களைத் திட்டம் வகுத்துவிட்டார்! நம் வழியில் குறுக்கிடப் போகும் ஒவ்வொரு பாடுகளும் அவர் ஏற்கனவே வரையறை செய்ததுதான்! இப்போது அவருடைய முழு வாஞ்சையும் என்னவென்றால், நாம் ஒவ்வொரு பாடுகளையும் பொறுமையோடு சகித்து, ஆண்டவராகிய இயேசுவின் மகிமையை அடையவேண்டும் என்பதுதான்!
ஜெபம்:
அன்புள்ள பிதாவே! 'பாடுகளை' தள்ளிவைத்து வாழ்ந்த வாழ்விற்கு நாங்கள் மனம் வருந்துகிறோம்! இன்றிலிருந்து, பாடுகளுக்குள் பிரவேசித்து உமது மகிமையை சுதந்தரிக்க அருள்புரியும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
0 Comments