இன்று "அவருடைய" சத்தம்
பிப்ரவரி 18
🔸️ சகலத்தையும் அர்ப்பணித்தவனே இயேசுவின் சீஷன்! 🔸️
நமக்குச் சொந்தமாக நாம் வைத்திருப்பவைகளே நம் உடைமைகள்! நமக்கு உண்டானவைகள் யாதொன்றையும் இனிமேலிருந்து நமக்குச் சொந்தமாக பாவிக்காமலிருப்பதே, இயேசு கற்பித்த நமக்குரிய யாவற்றையும் வெறுத்துவிடுவதாகும். (லூக்கா 14:33).
ஆபிரகாமின் வாழ்க்கை, இதைக் குறித்த விளக்கத்தை நமக்குச் சித்தரிக்கின்றது. ஆபிரகாமின் சொந்த மகன், ஈசாக்கு அவனுடைய உடைமை! ஒருநாள், அவனுடைய உடைமை ஈசாக்கைப் பலியாக படைக்கும்படி ஆபிரகாமிடம் தேவன் கூறினார். அதன்படியே ஆபிரகாம் ஈசாக்கைப் பலிபீடத்தில் கிடத்தி அவனை வெட்டுவதற்கும் ஆயத்தமாகிவிட்டான்! இத்தருணத்தில் தேவன் துரிதமாய் இடைப்பட்டு "பிள்ளையாண்டான் மேல் உன் கையை போடாதே...." என தடுத்துவிட்டார். ஆபிரகாம் தேவனுக்கு கீழ்ப்படிய ஆயத்தமாய் இருந்தான் என்பதை தேவன் கண்டபடியால், அவ்விதம் இடைப்பட்டுத் தடுத்தார் (ஆதியாகமம் 22). அதன் பின்பு, ஆபிரகாம் ஈசாக்கை தன் வீட்டில் தன்னோடு வைத்துக் கொண்டாலும், அவனைத் தனக்குச் சொந்தமாக வைத்திருக்கவில்லை என்பதை ஆபிரகாம் ஆழமாய் உணர்ந்திருந்தான்! ஆம், இந்த ஈசாக்கு இப்போது தேவனுக்கே சொந்தம்!!
நமக்குரிய எல்லா உடைமைகளையும் வெறுத்துவிட வேண்டும் என்பதற்கு இதுவே பொருளாகும். நமக்கு உண்டான உடைமைகள் யாவும் பலிபீடத்தில் வைக்கப்பட்டு அவைகளைத் தேவனுக்கே அர்ப்பணித்திட வேண்டும். இவ்வாறு நாம் அர்ப்பணித்து விட்டவைகளில் சிலவற்றை உபயோகிக்கும்படி தேவன் அனுமதிக்கக் கூடும்! ஆனால் அவ்விதமான பொருட்களை, நாம் இனியும் நமக்குச் சொந்தமானது என எண்ணிட முடியாதே!
நம்முடைய சொந்த வீட்டில் நாம் வசித்தால்கூட, அந்த வீடு தேவனுக்கே சொந்தம் என்று மனதார நினைத்திட வேண்டும். இந்த நல்ல தேவன், அவ்வீட்டில் நாம் வாடகை இல்லாமல் இருக்க செய்திருக்கிறார் என்று நன்றியோடு நினைவுகூர வேண்டும்! இதுவே உண்மையான சீஷத்துவம் ஆகும்.
ஜெபம்:
பரம பிதாவே! "எனக்குரியது" என பற்றி வாழும் வாழ்க்கையின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலையாகி, எங்கள் முழுமையையும் உமக்கே அர்ப்பணிக்கிறோம்! எங்களையும் இயேசுவின் சீஷனாய் ஏற்றுக் கொள்ளும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
0 Comments