இன்று "அவருடைய" சத்தம்
பிப்ரவரி 22
🔸️ ஊழியத்தைவிட ஜீவியமே பிரதானம்! 🔸️
மேலும் நியாயத்தீர்ப்பின் கடைசி நாளில் அவரது நாமத்தில் அற்புதம் செய்த அனேகர் 'அக்கிரமம் உள்ளவர்கள்' என புறக்கணிக்கப்படவே தகுதி உள்ளவர்களாய் இருப்பார்கள் (மத்தேயு 7:22, 23) என ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நமக்கு போதிக்கிறார். அவரது நாமத்தினால் மெய்யான அற்புதங்கள் செய்கிற கிறிஸ்தவ பிரசங்கிமார்களையும், குணமாக்குகிறவர்களையும்தான், அவர் இங்கு தெளிவாக சுட்டிக் காண்பிக்கிறார். இயேசு கிறிஸ்துவின் வார்த்தையின்படி இந்த அற்புதம் செய்யும் ஊழியம் கொண்டவர்களில் அநேகர் (ஒருசிலரல்ல, எல்லோருமல்ல, ஆனால் அநேகர்) தங்கள் தனிப்பட்ட வாழ்விலும், தங்கள் சிந்தனை வாழ்விலும், பாவத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்! அது கிறிஸ்துவின் நியாயாசனத்தின் முன் பகிரங்கமாக்கப்படும்!!
ஒரு மனிதன் தேவனால் அங்கீகரிக்கப்பட்டான் என்பதற்கு, "அற்புதங்கள் செய்வது" ஒருவிதத்திலும் அடையாளமாகாது என்பதையே நமக்கு தெளிவாகப் போதிக்கிறது. காதுள்ளவன் கேட்கக்கடவன்! இல்லையேல் வஞ்சிக்கப்படுவான்!!
தனது முப்பதாவது வயதில் இயேசுகிறிஸ்து "இதோ என் நேசகுமாரன், இவரில் நான் பிரியமாயிருக்கிறேன்" (மத்தேயு 3:17) என்று பிதாவினால் வானத்திலிருந்து எல்லோரும் கேட்கும்படியான நற்சாட்சி பெற்றார். "அந்த நேரம்" அவர் ஒரு அற்புதமோ, ஒரு பிரசங்கமோ ஒன்றும் செய்யாதிருந்த வேளை! அப்படியானால், தேவனால் அவர் நற்சாட்சி பெற்ற அந்த இரகசியம்தான் என்ன? ஆம், அது அவரது ஊழியத்தினால் அல்ல, அவரது ஜீவியத்தினால்தான் நற்சாட்சி பெற்றார் என்பது தெளிவு! நமது ஊழியங்களின் வளர்ச்சியினால் நாம் அங்கீகரிக்கப்பட மாட்டோம். மாறாக, நம் அனுதின வாழ்க்கையில் உண்மையுள்ளவர்களாய் இருப்பதை வைத்தே அங்கீகரிக்கப்படுவோம்!
மறைவாய் இருக்கும் இயேசு கிறிஸ்துவின் 30 ஆண்டு கால வாழ்க்கையைப் பற்றி நமக்குச் சொல்லப்பட்டிருப்பதெல்லாம் (தேவாலயத்தில் அவர் போதகருடன் பேசினதைத் தவிர்த்து) அவர் நம்மைப்போல் எல்லாவிதத்திலும் சோதிக்கப்பட்டும் பாவம் செய்யவில்லை என்றும் (எபிரெயர் 4:15), அவர் தனக்கே பிரியமாய் நடக்கவில்லை என்றும்தான் (ரோமர் 15:3) சொல்லப்பட்டிருக்கிறது.
அவர் உண்மையுள்ளவராய் எல்லாவிதமான சோதனைகளையும் எதிர்த்தார். ஒன்றிலும் அவர் தனக்கானவைகளை நாடவில்லை. இதுதான் பிதாவைப் பிரியப்படுத்தியது!
ஜெபம்:
அன்பின் பிதாவே! ஆண்டவராகிய இயேசுவின் ஊழியத்தை கண்டு அல்ல.... அவரது ஜீவியத்தைக் கண்டு "இவர் என் நேசகுமாரன்" என அழைத்த அந்த நற்சாட்சியை நாடியே உம்மை இன்றுமுதல் பின்பற்றிட தீர்மானிக்கிறோம்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-



0 Comments