இன்று "அவருடைய" சத்தம்
பிப்ரவரி 23
🔸️ உலகப் பொருட்களின் நாட்டத்தில் விடுதலை பெறவேண்டும்! 🔸️
இவ்வுலகப் பொருள் குறித்து, ஆபிரகாம் சோதிக்கப்பட்ட இரு தருணங்களை ஆதியாகமம் 13, 14 அதிகாரங்களில் நாம் வாசிக்கிறோம். முதலாவது, தங்கள் மந்தைகள் மிகவும் பெரிதாகிவிட்டதினிமித்தம் தாங்கள் சேர்ந்திருக்கக்கூடாது என கண்டு, அவனும் லோத்துவும் பிரிய வேண்டிய தருணம்..... ஆபிரகாம் மூத்தவனாய் இருப்பதாலும், கானான் தேசத்திற்கு அவனே தேவனால் அழைக்கப்பட்டதாலும் தேசத்தை தேர்ந்தெடுக்கும் முதல் வாய்ப்பை அவன் பயன்படுத்துவதுதான் இலகுவானதும், முறையும்கூட! ஆனால் சுயநலமின்றி, தாராள மனதுடன், 'முதலாவது' லோத்து தெரிந்துகொள்ளும்படி சொன்னான். மனுஷரீதியாக சொல்லப்போனால், லோத்து சிறந்ததை தேர்ந்தெடுத்தான். ஆம், சோதோம் தேசத்தை!
ஆனால் தேவன் மௌனமாக இந்த நடபடியை - நமது எல்லாப் பண சமாச்சாரங்களை கவனிப்பதுபோலவே கவனிக்கிறார் என்று ஆபிரகாமோ, லோத்தோ உணரவில்லை! ஆபிரகாமிடம் காணப்பட்ட சுயநலமில்லா தன்மையில் தேவன் மிகவும் பூரித்துப் போய், அவனுடன் உடனடியாகப் பேசி, ஆபிரகாமிற்கு 'நான்கு திசை' எங்கும் கண்களை ஏறெடுத்துப் பார்க்கக்கூடிய தேசம் முழுவதையும் அவனுடைய சந்ததிக்கு சுதந்தரமாகக் கொடுப்பேன் என்றார். லோத்து தெரிந்தெடுத்த பகுதியும் இதில் அடங்கும்! இன்று சுமார் 4000 ஆண்டுகளுக்குப் பிறகு, தேவன் தன் வார்த்தையைக் காப்பாற்றி இருக்கிறதை பார்க்கிறோம். ஆபிரகாமின் சந்ததியார் (யூதர்கள்) ஆபிரகாமிற்கு தேவன் கொடுத்த இடத்தில் வாழ்கின்றனர். இதுதான் தேவனுடைய வழியாகும். சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரிப்பார்கள்!!
உண்மையான தேவ ஊழியக்காரனுக்கு ஏற்ற பெருந்தன்மையுடன் ஆபிரகாம் நடந்துகொள்வதை நாம் மீண்டும் ஆதியாகமம் 14ம் அதிகாரத்தில் காணலாம். சோதோம் ராஜாவின் மக்களையும், அவன் பொருட்களையும், அவனுடைய விரோதிகளிடமிருந்து ஆபிரகாம் மீட்டுவிட்டான். சோதோமின் ராஜாவோ, எல்லா பொருட்களையும் ஆபிரகாமிற்கே சமர்ப்பித்தான். ஆனால், ஆபிரகாம் அவற்றிலிருந்து ஒரு பாதரட்சை வாரைக்கூட ஏற்றுக்கொள்ள மறுத்துவிடுகிறான். "எனது தேவன் வானத்தையும் பூமியையும் உடையவர்..... உனது எந்தப் பொருளும் எனக்கு வேண்டாம்" என்று கூறுகிறான் (ஆதி. 14:22,23).
இந்த உரையாடலையும்கூட, தேவன் மவுனமாக கேட்டார். உடனடியாக ஆபிரகாமுக்கு தோன்றி, அவன் தேவனாலேயே பலன் அடைவான் என்று சொன்னார் (ஆதி 15:1). நாம் தேவனை கனம் பண்ணினால், நிச்சயம் அவர் நம்மை கனம் பண்ணுவார்.
ஜெபம்:
பரலோக பிதாவே! ஆபிரகாமைப்போல் உலக சிநேகத்தை உதறி, உம்மையே எங்கள் வாழ்வில் மேன்மையாக கனம் பண்ணி வாழ அனுக்கிரகம் செய்தருளும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
0 Comments