Header Ads Widget

LightBlog

Ticker

6/recent/ticker-posts

பிப்ரவரி 27

இன்று "அவருடைய" சத்தம்


பிப்ரவரி 27 


🔸️ பழைய மனிதனை களைந்து புதிய மனிதனை தரித்துக்கொள்ள வேண்டும்! 🔸️


ரோமர் 6:1-7 வசனங்கள் ஞானஸ்நானத்தின் பொருளை மிகத் தெளிவாக விளக்குகின்றன. அவ்வசனங்களில், நம்முடைய பழைய மனுஷன் அவரோடேகூட சிலுவையில் அறையப்பட்டதென்றும், ஞானஸ்நானத்தினாலே கிறிஸ்துவுடனேகூட அடக்கம் பண்ணப்பட்டோம் என்றும் வாசிக்கிறோம். நாம் மனந்திரும்பாத நாட்களில், நம்மோடுகூட நாம் வைத்திருந்த 'பாவம் செய்ய விரும்பும்' ஒரு மனமே பழைய மனுஷனாகும்! இப்போது இந்த பழைய மனிதன் கிறிஸ்துவுடனேகூட சிலுவையில் அறையப்பட்டுவிட்டான்! (ரோமர் 6:6).


பழைய மனுஷனும், மாம்சமும் ஒன்று அல்ல! சகல பொல்லாத இச்சைகளையும் தனக்குள் வைத்திருக்கும் பண்டகசாலையே மாம்சமாகும்! இப்படிப்பட்ட மாம்சம் தேவ சித்தத்தை சதா எதிர்த்தே நிற்கிறது. இருப்பினும், இக்கேடான மாம்சத்தை நம்முடைய மரணநாள் வரை நம்மோடுகூட நாம் சுமந்தே வரவேண்டியுள்ளது!!  


நம் வீட்டிற்குள் நுழைய முயலும் ஒரு திருடர்களின் கும்பலுக்கே நம் மாம்சத்தை ஒப்பிடலாம்! நம் வீட்டிற்குள் இருக்கும் பழைய மனுஷனை ஓர் உண்மையற்ற வேலைக்காரனுக்கு ஒப்பிடலாம்! இந்த உண்மையற்ற வேலைக்காரன் (பழைய மனுஷன்) இதுநாள் வரை நமக்குச் செய்ததெல்லாம், "திருடர்கள் உள்ளே நுழைவதற்கு தொடர்ச்சியாக கதவுகளைத் திறந்து விட்டான்!" என்ற கேடான செயலே ஆகும். ஆனால் இப்போது, ஒரு விந்தையான நற்செய்தி கேளீர்!! இத்தீமையான உண்மையற்ற வேலைக்காரன் இப்பொழுது கொல்லப்பட்டுவிட்டான். திருடர்கள்......? அவர்கள் இன்னமும் திடகாத்திரமாகவே நம்மைச்சுற்றி வந்து கொண்டேதான் இருக்கிறார்கள்! ஆனால் 'புதிய மனுஷன்' என அழைக்கப்படும் ஒரு புதிய வேலைக்காரனை இப்போது நாம் பெற்றிருக்கிறோம். இப்புதிய வேலைக்காரன் உண்மை உள்ளவன்! உள்ளே நுழைய விரும்பும் திருடர்களுக்கு எதிராக கதவைப் பூட்டுவதற்கே இப்புதிய மனுஷன் வாஞ்சையோடு நிற்கிறான்!!


நம் ஞானஸ்நானத்தின் மூலமாக, பாவம் செய்ய விரும்பும் பழைய மனுஷனின் மரணத்தையும் அவனுடைய அடக்கத்தையும் சாட்சி பகர்ந்து, இப்போது கிறிஸ்துவோடுகூட உயிர்த்தெழுந்து "புதிதான ஜீவன் உள்ளவர்களாய் நடந்துகொள்வோம்!" என்றே நாம் கெம்பீரிக்கிறோம் (ரோமர் 6:4).


ஜெபம்:

எங்கள் பரம தகப்பனே! ஞானஸ்நானத்தின் மெய்யான அர்த்தத்தின்படி 'பழைய மனிதனை' நடைமுறை வாழ்வில் அடக்கம் செய்து 'புதிய மனிதனை' தரித்து வாழ கிருபை செய்தருளும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென். 


எழுதியவர்:

சகோதரர் சகரியா பூணன்.


"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".


From:-

https://t.me/hisvoicetoday



 

Post a Comment

0 Comments