Header Ads Widget

LightBlog

Ticker

6/recent/ticker-posts

மார்ச் 06

 இன்று "அவருடைய" சத்தம்


மார்ச் 6


🔸️ பரம நோக்கத்தை அறிந்து ஜீவியுங்கள்! 🔸️


நம்மில் அநேகர் முதலாவது கிறிஸ்துவண்டை சேரும்போது, நமக்கென ஏதேனும் நன்மைகளைப் பெறலாம் என்ற சுயநலமான நோக்கத்தோடுதான் கிட்டிச் சேர்ந்திருக்கிறோம். அந்த நன்மை ஒருவேளை தெய்வீக சுகமாகவோ அல்லது நரக அக்கினியிலிருந்து காக்கப்பட வேண்டும் என்பதாகவோகூட இருக்கலாம். இவ்வாறெல்லாம் நாம் சுயநலமான நோக்கங்களைக் கொண்டிருந்தாலும், தேவன் நம்மை ஏற்றுக் கொள்ளத்தான் செய்தார்!  


கெட்டகுமாரன் தன் வயிற்றுப் பசியை போக்கத்தான் வீடு திரும்பி வந்தான். அவ்வாறிருந்தும், அவனுடைய தகப்பன் அவனை அளவுகடந்து நேசித்த நேசத்தின் நிமித்தம், அம்மகனைத் திரும்பவும் மகிழ்வோடு வரவேற்று ஏற்றுக்கொண்டார். ஆம், அவ்வளவாய் நல்லவர் நம் தேவன்! 


ஆனால் நாம் பரலோகம் போக வேண்டும் என்ற நோக்கத்தோடு மாத்திரமே நம் கிறிஸ்துவ ஜீவியத்தைத் தொடர்ந்து ஜீவித்துக் கொண்டிருப்போமென்றால், அது உண்மையிலேயே துக்ககரமானதாகும். நம் ஜீவியத்திற்கான தேவனுடைய நோக்கத்தை நாம் அறியத் துவங்கியவுடன், அவைகளை நம் வாழ்க்கையில் முற்றிலும் நிறைவேற்றி முடிப்பதற்கு வாஞ்சை கொண்டவர்களாகவே நாம் இருக்கவேண்டும். எபேசுக் கிறிஸ்தவர்களின் மனக்கண்கள் பிரகாசமாக்கப்பட்டு அவர்கள் "தேவனுடைய அழைப்பின் நம்பிக்கையைக்" காண வேண்டுமென்றே அவர்களுக்காக பவுல் ஜெபித்தார்(எபே.1:18).


தேவனுடைய அழைப்பின் நம்பிக்கை யாது? என்பதை ரோமர் 8:29,30 நமக்கு எடுத்து இயம்புகிறது. அவ்வசனங்களில், தேவனுடைய அழைப்பைக் கேளுங்கள்: "தம்முடைய குமாரன் அனேக சகோதரருக்குள்ளே முதற்பேறானவராய் இருக்கும் பொருட்டு, தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கொப்பாய் இருப்பதற்கு முன் குறித்திருக்கிறார்." இவ்வாறு நாம் இயேசுவின் சாயலுக்கு ஒப்பாய் மறுரூபமாகி, நாம் அவருடைய இளைய சகோதரர்களாய் மாறவேண்டும் என்பதே தேவனுடைய நோக்கமாக இருக்கிறது. இதை நாம் தெளிவாக இவ்வசனத்தில் வாசிக்கிறோம். 


இவ்வாறு நாம் தொடர்ச்சியாக இயேசுவைப்போல் மாறிடும் வளர்ச்சிதான் பரிசுத்தமாகுதலின் முழு நோக்கமுமாகும். ஆம், இது ஓர் கிறிஸ்தவ ஓட்டப்பந்தயம் ஆகும்! நம் எல்லோருக்கும் முன்பாக இந்த ஓட்டப்பந்தயத்தை இயேசு கிறிஸ்துவே முதலாவதாய் ஓடி முடித்தார். இப்போது நம் கண்களை நமக்கு முன்னோடியாய் ஓடிய இயேசுவின் மீது பதித்து நாமும் அதே ஓட்டத்தை ஓடும்படி புத்தி சொல்லப்பட்டிருக்கிறோம்! (எபி.12-1,2).


ஜெபம்:

பரம தந்தையே! உமது குமாரன் இயேசுவைப்போல் மாறும்படி எங்களை அழைத்த பரம அழைப்பை இன்று அறிந்து கொண்டோம்! இனி வரும் நாட்களில் அந்த அழைப்பை நோக்கி ஓடிட அருள்புரியும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.


எழுதியவர்:

சகோதரர் சகரியா பூணன்.


"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".


From:-

https://t.me/hisvoicetoday




Post a Comment

0 Comments