Header Ads Widget

LightBlog

Ticker

6/recent/ticker-posts

மார்ச் 11

 இன்று "அவருடைய" சத்தம்


மார்ச் 11


🔸️ உங்களை தேவனிடமே மௌனமாய் ஒப்புவிக்கப் பழகுங்கள்! 🔸️


மோசேயிடம் காண்கின்ற நேர்த்தியான விஷயம் என்னவெனில், அவனைப்பற்றி அவதூறு பேசப்பட்ட போதும் அல்லது அவன் எதிர்க்கப்பட்ட போதும், அவன் நடந்துகொண்ட விதம்.....ஜனங்கள் கலகக்காரர்களாய் 'நமக்கு வேறொரு தலைவனை ஏற்படுத்துவோம்' (எண் :14:5) என்று சொன்னபோது மோசே முகங்குப்புற விழுந்து மௌனமாயிருந்தான். தன் பாரிசத்தில் நியாயம் பேச அவன் மறுத்து விட்டான் . கோராவும், இஸ்ரவேலின் மூப்பர்கள் 250 பேரும் மோசேயின் தலைமைக்கு விரோதமாக எதிர்த்தபோதும், மோசே மீண்டும் முகங்குப்புறக் கிடப்பதை நாம் பார்க்கிறோம் (எண். 16:4).


அவன் தன்னை பாதுகாத்துக் கொள்ளவும் இல்லை, தன் ஸ்தானத்தைப் பற்றிக்கொள்ளவும் இல்லை. தன் அதிகாரத்தை நிலை நாட்டவும் இல்லை.


அவனுடைய சொந்த சகோதரியும் சகோதரனும் அவனுக்குப் புறம்பே குறை பேசும்போது, தேவன் அதற்காக தீர்ப்பு செய்ய எத்தனித்தபோது, மோசே மீண்டும் முகங்குப்புற விழுந்து அவர்களுக்காக இரங்கும்படியே கர்த்தரிடம் மன்றாடுகிறான் (எண். 12:13). அவன் வாழ்ந்த காலத்தில், பூமியின்மேல் மெய்யாகவே மிகவும் தாழ்மையான மனிதனாய் இருந்தான்! தேவன் அப்படிப்பட்டவர்களிடமே தன்னை ஒப்புவிக்க முடியும்!!


மற்றவர்களின்மேல் அதிகாரமும், ஆளுகையும் செலுத்துகிறபோது, மனிதர்கள் கெட்டுப்போகிறார்கள். ஆனால், மோசே அப்படி கெட்டுப்போகவில்லை. தன்னுடைய மந்தையின் கலகத்தினால், தேவன் மோசேயை திரும்பத் திரும்ப சோதித்துப் பார்த்தார். ஆனால் அந்த பரீட்சைகளில் எல்லாம் மோசே மீண்டும் மீண்டும் வெற்றி பெற்றான்!


ஆவிக்குரிய வாழ்க்கையின் தலைமைப் பொறுப்பில் அநேக ஆபத்துக்கள் இணைந்துள்ளன. ஆயினும் மண்ணில் மீண்டும் மீண்டும் முகங்குப்புற விழுந்து, எவ்விதத்திலும் தனக்காக வாதாடாமலும், தன்னுரிமையைப் பாதுகாக்காமலும், நாவடக்கி இருக்கக் கற்றுக்கொண்டோர் பாக்கியவான்கள். 'கர்த்தர்தாமே' தனது ஊழியக்காரர்களுக்காக வழக்காடுவார் என்று அவர் வாக்குக் கொடுத்திருக்கிறார் (ஏசா. 54:17). ஆகையால், அவ்வித காரியங்களை நாம் நமது கரங்களில் எடுத்துக் கொள்ளாமல், தேவனிடமே விட்டுவிடுவது சாலச் சிறந்தது! நீதியாக நியாயம் தீர்ப்பவர் எவரோ அவரிடம் நமது காரியத்தை ஒப்புக்கொடுத்து விடுவதுதான் நமது ஒரே வேலை!! (1பேதுரு 2:23).


ஜெபம்:

 பரம தந்தையே! பதறிப் பேசும் எங்கள் வாழ்விற்காக வருந்துகிறோம்... எந்த நிலையிலும் "மௌனமாய்" உம்மிடம் எங்களை ஒப்புவிக்க கிருபை தந்தருளும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.


எழுதியவர்:

சகோதரர் சகரியா பூணன்.


"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".


From:-

https://t.me/hisvoicetoday




Post a Comment

0 Comments