இன்று "அவருடைய" சத்தம்
ஜூன் 21
🔸️ குடும்ப ஐக்கியத்தில் சாத்தானை அனுமதித்துவிடக்கூடாது! 🔸️
ஆதியில், தான் சிருஷ்டித்த ஆதாமை ஏதேன் தோட்டத்திற்கு அழைத்து வந்து அத்தோட்டத்தை பண்படுத்தவும், காக்கவும் அவனை தேவன் வைத்தார் (ஆதி 2:15). இந்த சம்பவத்திற்கடுத்து, அவனுக்கு ஏற்றதோர் "துணையையும்" தேவன் தந்தார்! எனவே அந்த இனிய நாளில் ஆதாம் தேவனிடமிருந்து இரண்டு வெகுமதிகளை பெற்றான் என்றே நாம் கூறவேண்டும்! முதலாவது வெகுமதி, தோட்டம்.... அதை ஆதாம் பண்படுத்திக் காத்திட வேண்டும்! இரண்டாவது வெகுமதி, ஒரு துணை அல்லது ஒரு மனைவி... அவளோடும் ஆதாம் நல்ல உறவை ஏற்படுத்திக் கொண்டு அவளையும் அவன் பண்படுத்திக் காத்திட வேண்டும்!! இவ்வாறு ஏதேன் தோட்டத்தையும், தனக்குக் கொடுக்கப்பட்ட மனைவியையும் காத்துக்கொள்ளும் உன்னதப் பணியை அந்நாளில் ஆதாம் தேவனிடமிருந்து பெற்றான்.
ஆனால், இந்த ஒப்பற்ற பணியை நிறைவேற்றிட ஆதாம் தவறி பெரும் தோல்வியை கண்டான். விழிப்புடன் காத்துக் கொள்ள வேண்டிய தோட்டத்திற்குள் சாத்தான் வரும்படி அனுமதித்து விட்டான்! இப்போது என்ன நடந்தது? ஒரு வசந்த சோலையாய் இருக்கவேண்டிய அந்தத் தோட்டம் பாலைவனமாய் மாறி, "முள்ளும் குருக்குமே" அங்கு வளர்ந்தது. இந்த நிலை, தோட்டத்திற்கு மாத்திரமல்ல, ஆதாம்-ஏவாளின் உறவிலும் ஏற்பட்டுவிட்டது . ஆம், "எலும்பில் எலும்பும், மாம்சத்தில் மாம்சமுமாய்.... ஒரே மாம்சமாய்" இசைந்திருந்த ஆதாம்-ஏவாள் உறவைப் பிரிக்க அவர்கள் நடுவிலும் சாத்தான் புகுந்து விட்டான் (ஆதி:2:23,24; 3:1).
பார்த்தீர்களா, தேவன் இணைத்ததை பிரித்திட 'ஒருவன்' எப்போதும் காத்துக் கொண்டிருக்கிறான். இருவரும் ஒரே மாம்சமாய் இருப்பார்கள் என தேவன் ஒன்றாக இணைத்த வசனத்திற்கு உடனடியாக அடுத்த வசனத்தில் 'தோட்டத்தில் சாத்தான் பிரவேசித்து விட்டானே!' இதை நாம் ஒருக்காலும் மறந்துவிடவே கூடாது. சர்ப்பத்தின் ஒரே நோக்கம், தேவன் ஒன்றாய் இணைத்தவர்களைப் பிரிப்பதேயாகும். நம் குடும்பத்திலும், கணவன்-மனைவி-பிள்ளைகள் அன்பின் உறவிலும் சாத்தானாகிய 'சர்ப்பம்' பிரவேசித்திடாது காத்துக்கொள்ள பொறுப்புள்ளவர்களாக நாம் இருந்திட வேண்டும்.
ஜெபம்:
அன்பின் பிதாவே! நீர் இணைத்த தெய்வீக குடும்ப உறவில் எத்தனை சமயங்களில் 'விரிசல்' ஏற்படுத்த சாத்தான் முயற்சிக்கிறான். தெய்வ பயத்தோடு ஐக்கியமாய் வாழ உதவி செய்தருளும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
https://t.me/hisvoicetoday



0 Comments