இன்று "அவருடைய" சத்தம்


ஜூன் 22


🔸️ குடும்பத்தை கட்டுவதற்கு பிரயாசம் வேண்டும்! 🔸️


நம் தோட்டம் எவ்வாறு பாலைவனமாய் மாற முடியும் என்பதை விளக்கும் எச்சரிப்பின் வசனங்களை நீதிமொழிகள் 24:30-32-ம் வசனங்களில் காண்கிறோம். "சோம்பேறியின் வயலையும், மதியீனனுடைய திராட்சைத் தோட்டத்தையும் கடந்து போனேன். இதோ அதெல்லாம் முள்ளுக்காடாக இருந்தது. நிலத்தின் முகத்தைக் காஞ்சொறி மூடினது, அதின் மதிற்சுவர் இடிந்து கிடந்தது. அதை கண்டு சிந்தனை பண்ணினேன். அதை நோக்கி புத்தியடைந்தேன்." பார்த்தீர்களா, தோட்டத்தில் நீங்கள் விழிப்புடன் கவனம் செலுத்தாவிட்டால், அத்தோட்டம் எவ்வளவு மோசமாக மாறி விடுகிறது. நீங்கள் வீதியில் கடந்து செல்லும்போது ஒருவர் வீட்டின் அருகில் செழிப்பான தோட்டத்தையும், மற்றொருவர் வீட்டின் அருகில் வறண்ட முட்புதர்களையும் பார்த்திருப்பீர்கள் அல்லவா?


ஒரு அழகான தோட்டம் தானாய் உண்டாவதில்லை. அந்த வீட்டில் உள்ளவர் தன் தோட்டத்தில் பயிர்செய்து, களையெடுத்து.... இவ்வாறாக நிச்சயம் அதிக பிரயாசப்பட்டிருப்பார்.


மற்றொருவர் வீட்டில் நீங்கள் கண்ட முட்புதர் எவ்வாறு வந்தது? அந்த வீட்டில் உள்ளவர் முட்களையும் புதர்களையும் விதைத்து பிரயாசப்பட்டா வந்தது? இல்லை, அது தானாகவே வனாந்தரமாய் மாறிவிட்டது. ஆம், வனாந்திர பாலைவன வாழ்க்கை உருவாகிட நீங்கள் ஒன்றுமே செய்ய வேண்டியதில்லை! ஆனால் உங்கள் தோட்டம் "வசந்த சோலையாய்" இருக்க வேண்டுமென்றால், அதற்கு நீங்கள் கண்டிப்பாய் பாடுபட வேண்டும்!!


இதைப்போலவேதான் திருமண வாழ்வும் இருக்கிறது. ஒருவருடைய திருமண வாழ்க்கை வசந்த சோலையாகவும், மற்றொருவருடைய திருமண வாழ்க்கை பாலைவனமாகவும் இருப்பதை நாம் கண்கூடாகவே காண்கிறோம். வசந்த சோலையாய் இருக்கும் தோட்டத்தில் (குடும்பத்தில்) கணவனும் மனைவியும் சேர்ந்து நிச்சயமாய் பாடுபட்டு வளர்த்து, விழிப்புடன் தோட்டத்தைப் பாதுகாத்திருப்பார்கள். இதற்கு மாறாக, உங்கள் திருமண உறவு பாலைவனமாய் மாறுவதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும்? அதற்கு நீங்கள், கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் சத்தம்போட்டு திட்ட வேண்டிய அவசியமில்லை... நீங்கள் ஒன்றும் செய்யாமல் இருந்தாலே உங்கள் குடும்ப உறவு பாலைவனமாய் மாறிவிடும்! 


ஜெபம்:

பரம தந்தையே! 'குடும்பத்தை' ஒரு பயிரிட்டு பாடுபடும் தோட்டமாய் காண்பித்ததற்கு உமக்கு நன்றி! கனியுள்ள தோட்டமாய் எங்கள் குடும்பம் மாறுவதற்கு பிரயாசப்பட அர்ப்பணிக்கிறோம். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.


எழுதியவர்:

சகோதரர் சகரியா பூணன்.


"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".


From:-

https://t.me/hisvoicetoday