Header Ads Widget

LightBlog

Ticker

6/recent/ticker-posts

ஜூலை 03

 இன்று "அவருடைய" சத்தம்


ஜூலை 3


🔸️ தேவனோடு சீர் பொருந்தி அவர் சத்தம் கேட்க வேண்டும்! 🔸️


"கர்த்தருடைய நாளில் ஆவிக்குள்ளானேன்; அப்பொழுது எனக்குப் பின்னாலே எக்காளசத்தம்போன்ற பெரிதான ஒரு சத்தத்தைக் கேட்டேன்" (வெளி. 1:10) என யோவான் கூறுகிறார். சற்றே கவனியுங்கள்....! யோவானுக்குக் கிடைத்த இந்த பொன்னான பாக்கியம் நமக்கும் உண்டு! நான் பரிசுத்தாவிக்குள்ளாய் நிறைந்து வாழ்ந்து, பாவத்திற்கு அதிக உணர்வுள்ளவனாகவும், சுத்த மனசாட்சியைக் காத்துக் கொள்பவனாகவும், ஆண்டவருடைய பார்வையில் தாழ்மையை தரித்து நடப்பவனாகவும் இருந்தால், நானும் ஆண்டவருடைய சத்தத்தைக் கேட்க முடியும்!.... ஒரு வானொலிப் பெட்டியை போல!! நாம் கேட்க முடியாத பல சப்தங்கள் நிறைந்த ஓர் அறையில், வானொலிப் பெட்டியை இயக்கி, அதை சரியான அலைவரிசையில் வைத்தால் "கணீர்" என்று அந்த சப்தத்தைக் கேட்கிறோமே, அதுபோல்தான்!!


காரியம் இப்படியாய் இருக்க, இன்று அநேக விசுவாசிகளிடம் காணும் பரிதாபம் கேளீர்! தேவன் அவர்களோடு பேசுகிறார்; ஆனால் அவர்களோ கேட்பது இல்லை! ஏன்? அவர்களின் வானொலிப்பெட்டி "சரியான அலைவரிசையில்" இல்லை!? அது, உலகத்தின் சார்பில் முடக்கப்பட்டுள்ளது. எப்படி அதிக பணம் சம்பாதிக்கலாம்? என்னைக் குறித்து தவறாய் தூற்றிக் கொண்டிருக்கும் அந்த மனிதனிடமிருந்து என்னை நியாயப்படுத்தித் தற்காத்துக் கொள்வது எப்படி?.... என் குடும்ப சொத்தின் பங்கைப் பெறுவது எப்படி?.... இப்படி ஏராளம், ஏராளம்! இதனிமித்தம், சாத்தான் 24 மணி நேரமும் ஒலிபரப்பிக் கொண்டிருக்கும் பொய், கசப்பு, பதட்டம்.... ஆகிய அவனின் குரலையே கேட்கிறார்கள்!!


இப்படிப்பட்டவர்கள் தேவனுடைய சத்தத்தைக் கேட்கவே முடியாது. ஆனால் இவர்களோ, "தேவன் எங்களிடம் பேசவில்லையே" என்பார்கள். அவர் பேசிக்கொண்டுதான் இருக்கிறார்! உங்கள் வானொலிப்பெட்டி சரியான அலைவரிசையில் இயக்கப்படவில்லை. இதுதான் உண்மை! யோவானும் ஆவிக்குள்ளாக இல்லாமலிருந்தால், அவரும் ஆண்டவருடைய சத்தத்தைக் கேட்டிருக்க முடியாது. ஆனால் யோவானோ, "நான் ஆவிக்குள்ளாய் இருந்தேன். அவருடைய சத்தத்தைக் கேட்டேன்" என கெம்பீரித்துக் கூறுகிறார்.  


நாம் கடைசி நாட்களை நெருங்கிவிட்டோம். இயேசு கிறிஸ்துவின் வருகையும் மிகவும் சமீபமாகிவிட்டது. பாவத்திற்கு உணர்வு உள்ளவர்களாய் இருந்து, சுத்த மனசாட்சியை கொண்டிருப்போம். தாழ்மையை தரித்து, 'தேவனுடைய பார்வையில்' ஜீவிப்போம்! ஆண்டவரின் சத்தத்தை தொடர்ச்சியாய் கேட்போமாக!!      


ஜெபம்:

அன்பின் தகப்பனே! நாள்தோறும் உமது குரல் கேட்டு வாழுவதற்கு, எங்கள் இருதயம் உம்மோடு செம்மையாய் வாழ்ந்திட அனுக்கிரகம் செய்தருளும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.   


 எழுதியவர்:

சகோதரர் சகரியா பூணன்.


"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".


From:-

https://t.me/hisvoicetoday




Post a Comment

0 Comments