இன்று "அவருடைய" சத்தம்
ஜூலை 13
🔸️ தைரியம் இழக்காத கிறிஸ்தவர்கள் நாம்! 🔸️
'நாம் எப்போதும் நன்மை மாத்திரமே செய்திட நாடுகிறவர்களாயிருந்தால், ஒரு மனுஷனும் நமக்கு தீங்கு செய்திட முடியாது' என 1பேதுரு 3:13 ஆணித்தரமாய் கூறுவதைப் பாருங்கள். ஆகவே, தேவ கிருபையின் பெலத்தோடு "யாவருக்கும் நாம் நன்மை மாத்திரமே செய்திட வேண்டும்" என்ற உறுதியான தீர்மானம் எடுத்துக் கொள்வோமாக! ஆம், நம்மைப் பகைக்கிறவர்களை அன்புகூருவோமாக! நம்மை சபிக்கிறவர்களை
ஆசீர்வதிப்போமாக! நம்மைத் துன்பப்படுத்துகிறவர்களின் மன்னிப்பிற்காக ஜெபம் செய்வோமாக! அப்படி நாம் இருந்துவிட்டால், நமக்கு ஒரு மனுஷனும் தீங்கு செய்திட முடியாது!! சாத்தானும் அவன் கைக்கூலிகளும் நம்மை ஏமாற்றவோ, இடையூறுகள் செய்திடவோ, நம்மைத் திருடவோ, நம்மை காயப்படுத்தவோ, நம்மை சிறையில் அடைக்கவோ.... ஏன், நம் சரீரத்தைக் கொல்லவோகூட செய்யலாம்! அப்படி அவர்கள் செய்துவிட்டுப் போகட்டும், அதுவெல்லாம் நமக்கு ஒரு பொருட்டல்ல!! ஏனெனில், இவைகளைக்கொண்டு நம் ஆவிக்குரிய ஜீவியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்த அவர்களால் ஒருக்காலும் முடியவே முடியாது!!
நம் தேவன் சிங்காசனத்தில் வீற்றிருக்கிறார்.... இனியும் தொடர்ந்து எக்காலத்தும் வீற்றிருப்பார்! இந்த வானத்தின்மீதும் இந்த பூமியின்மீதும் நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவிற்கு சகல அதிகாரமும் உண்டு. கல்வாரி சிலுவையில், சாத்தான் முற்றிலுமாய் தோற்கடிக்கப்பட்டுவிட்டான். ஆகவே, நாம் அவனை மீண்டுமாய் தோற்கடிக்க வேண்டும் என்பது இல்லவே இல்லை! இப்போது நாம் செய்ய வேண்டியதெல்லாம், "சாத்தான் சிலுவையில் தோற்கடிக்கப்பட்டுவிட்டான்; இனியும் அவனுக்கு என்மீது எந்தவித அதிகாரமும் இல்லை!!" என்பதை நம் இருதயங்களில் விசுவாசித்து, வாயினால் அறிக்கை செய்வது மாத்திரமே ஆகும். இந்த அறிக்கை நம் நாவில் இருக்குமட்டும், 'எதைக் கொண்டும்' சாத்தான் நம்மை தைரியம் இழக்கச்செய்யவோ அல்லது சோர்வுறச் செய்யவோ அல்லது அச்சுறுத்தவோ ஒருக்காலும் முடியவே முடியாது!!
ஆம், இந்த "சாட்சியின் விசுவாச வார்த்தைகளைக் கொண்டு" நாம் சாத்தானை மேற்கொண்டுவிட முடியும்!! (வெளி.12:11).
ஜெபம்:
எங்கள் பரலோக பிதாவே! இவ்வுலகில் யாதொரு தீமையும் எங்களை 'தைரியம்' இழக்கச் செய்ய தேவையில்லை என்பதை அறிந்தோம்.... ஜெயித்து வாழ, கிருபை தாரும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
https://t.me/hisvoicetoday
0 Comments