Header Ads Widget

LightBlog

Ticker

6/recent/ticker-posts

ஆகஸ்ட் 16

 இன்று "அவருடைய" சத்தம்


ஆகஸ்ட் 16


🔸️ நம் உலக தேவைகளையும் தன்னிடம் ஜெபித்திட தேவன் விரும்புகிறார்! 🔸️


ஆண்டவராகிய இயேசு தான் தூங்குவதாக காணப்படுவதில் அவர் எந்த வெட்கமும் கொள்ளவில்லை! மேலும், அவர் தாகமாயும், பசியாயும் இருந்த வேளைகளும் வந்தன. அவைகளெல்லாம் தனக்கு இருந்ததை அவர் தயக்கமின்றி ஒத்துக்கொண்டார். ஏனெனில் தன் சரீரத் தேவைகளைக் குறித்து அவர் ஒருபோதும் வெட்கம் அடைந்ததே இல்லை. தேவன்மீது ஜனங்கள் கொண்டிருந்த தவறான அபிப்ராயத்தை திருத்தும்படிக்கே, கர்த்தருடைய ஜெபத்தின் கடைசி மூன்று விண்ணப்பங்களிலும் சரீரத் தேவைகளுக்கே இயேசு முதலிடம் கொடுத்தார்!!


பூமிக்குரிய நம் தேவைகள் யாவும் ஒட்டுமொத்தமாக "எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்" என்ற விண்ணப்பத்தில் அடங்கியிருப்பதைப் பாருங்கள். இந்த விண்ணப்பத்திற்குள், "தகப்பனே, ஒரு வேலையை எனக்குத் தாரும்; நான் வசிப்பதற்கு வீடு ஒன்று தாரும்; நானும் என் குடும்பத்தாரும் உடுத்திக்கொள்ள உடைகளைத் தாரும்; என் பிள்ளைகளுக்கு நல்ல கல்வியை தரும்.... ஏனென்றால், அவர்களும் ஒரு நாளில் தங்கள் அன்றாட ஆகாரத்தை பெற வேண்டும்!" போன்ற அனைத்து விண்ணப்பங்களும் அடங்கியுள்ளன. நாம் மாத்திரம் தேவனுடைய ராஜ்யத்தை முதலாவது தேடுபவர்களாக இருப்போமென்றால், இந்த பூமிக்குரிய தேவைகள் யாவையும் நமக்கு ஆண்டவர் நிச்சயமாகவே கூட்டி வழங்குவார்! 


நாம் ஏன் உணவு, உடை, வேலை, வீடு, நம் பிள்ளைகளின் கல்வி போன்றவைகளுக்காக மிகுந்த கவலை கொள்கிறோம் தெரியுமா? ஏனென்றால், நம் இருதயத்தின் ஆழத்தில் தேவன் இவ்வித உலக காரியத்திற்கெல்லாம் உதவி செய்வதற்கு ஆர்வம் கொண்டிருக்கமாட்டார் என்ற நம்முடைய தவறான எண்ணமே ஆகும். நம் ஆவிக்குரிய நலன்களுக்கு மாத்திரமே தேவன் அக்கறை கொண்டுள்ளார் எனவும் நாம் எண்ணிக் கொள்கிறோம்!


நம் நல்ல தேவனோ நம்முடைய ஆவி, ஆத்துமா, சரீரம் ஆகிய ஒவ்வொரு பகுதியிலும் அக்கறை கொண்டுள்ளார் என்ற உணர்வை பரிசுத்த ஆவியானவர் நமக்குள் நிலையாக கொடுத்துவிட்டால், அது எத்தனை அருமையாய் இருக்கும்! நம் பூமிக்குரிய தேவைகளுக்காக நாம் அவரிடம் விண்ணப்பம் செய்வதையும் தேவன் விரும்புகின்றார். ஏனெனில் நாம் ஒருபோதும் கவலை கொண்டிருக்க அவர் விரும்புவதே இல்லை. எனவேதான், பரிசுத்த வேதாகமம், "நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையும் குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்" (பிலி. 4:6) எனக் கூறுகிறது.     


ஜெபம்:

எங்கள் அன்பின் தகப்பனே! நீர் கிருபையாய் எங்கள் சரீரத் தேவைகள்மீது அக்கறை கொண்டிருக்கிறீரே! எங்கள் சரீர தேவைகளை மகிழ்ச்சியுடன் விண்ணப்பிக்க முடியுமே! உமக்கு நன்றி! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென். 


எழுதியவர்:

சகோதரர் சகரியா பூணன்.


"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".


From:-

https://t.me/hisvoicetoday




Post a Comment

0 Comments