இன்று "அவருடைய" சத்தம்
செப்டம்பர் 8
🔸️ ஆவிக்குரிய மனிதனின் மூன்று முக்கிய பண்புகள்! 🔸️
ஒரு ஆவிக்குரிய மனிதன், "தேவன் ஒருவனை ஆசீர்வதித்திருப்பதின் ஒரே நோக்கம், அவன் பிறரை ஆசீர்வதிக்க வேண்டும் என்பதுதான்" என்ற உண்மையை அறிந்திருப்பான்.
1) தேவன் அவனுக்கு அதிகமாய் மன்னித்திருக்கிறபடியால், தனக்குத் தீமை செய்த அனைவரையும் மகிழ்ச்சியுடன் உடனடியாக மன்னித்துவிடுவான்!
2) தேவன் அவனுக்கு மிகுந்த நல்லவராக இருந்தபடியால், அவனும் பிறருக்கு நல்லவனாகவே இருப்பான்.
3) அவன் தேவனிடம் இலவசமாய் பெற்றபடியால், மற்றவர்களுக்கும் தான் பெற்ற கிருபா நன்மைகளை இலவசமாய் கொடுப்பான்.
ஒரு ஆவிக்குரிய மனிதன் மற்றவரின் நலன் மீது மிகுந்த கரிசனை கொண்டிருப்பான். இழந்தவர்கள் மீதும், துயர் நிறைந்த மானிடர் மீதும், அவன் எப்போதும் மனதுருக்கம் நிறைந்தவனாக இருப்பான். நல்ல சமாரியன் உவமையில் காணும் லேவியனும், ஆசாரியனும் தேவை நிறைந்த ஒரு சகோதரனைப் புறக்கணித்து சென்றுவிட்டதுபோல், அவனால் முடிவதில்லை!! (லூக்கா 10:30-37).
வீழ்ச்சியடைந்த மனிதனை சாத்தானின் கட்டுகளிலிருந்து விடுதலை செய்து அவனுக்கு உதவிச் செய்யவும், அவனை ஆசீர்வதிக்கவும், அவனை தூக்கி நிலைநிறுத்தவும், தேவன் எப்போதும் கரிசனை கொண்டவராகவே இருக்கிறார். இதைப்போன்ற கரிசனையை ஆவிக்குரிய மனிதனும் பெற்றிருப்பான். ஒரு ஆவிக்குரிய மனிதன் தன் எஜமானனைப் போலவே "ஊழியம் கொள்ளாமல் ஊழியம் செய்திடவே" நாடுவான். சாத்தானின் கட்டுகளிலிருந்து ஜனங்களை விடுதலையாக்கி, அவர்களுக்கு நன்மை செய்கிறவராகவே ஆண்டவராகிய இயேசு சுற்றித் திரிந்தார். (அப்போஸ்தலர் 10:38). ஆவிக்குரிய மனிதனும் அவ்வாறாகவே நன்மை செய்கிறவனாகவே எப்போதும் திகழ்வான்!!
ஒரு ஆவிக்குரிய மனிதன், தான் பிறருக்குச் செய்திடும் ஊழியத்திற்காக அவர்களிடமிருந்து யாதொரு பணத்தையோ அல்லது கனத்தையோ தனக்கு ஆதாயமாக ஒருபோதும் தேடமாட்டான். அவன் தேவனைப் போலவே, தன் ஜீவியத்தின் மூலமாகவும், ஊழியத்தின் மூலமாகவும் பிறரை ஆசீர்வதிப்பது ஒன்றையே நாடுவான். ஒருவரிடமிருந்தும் தனக்கென பரிசுப் பொருளையோ அல்லது காணிக்கையையோ அவன் எதிர்பார்த்திட மாட்டான். ஏனெனில், தன் ஒவ்வொரு தேவைக்கும் தேவனை மாத்திரமே அவன் நம்பியிருப்பான்!!
ஜெபம்:
அன்பின் பரலோக தந்தையே! ஆவிக்குரியவர்களாயிருந்து, பிறரை ஆசீர்வதிப்பதற்கும், பிறரிடம் கரிசனையாய் நடந்துகொள்ளவும், பிறரிடம் யாதொரு ஆதாயம் எதிர்பாராது நன்மை செய்யவும் கிருபை தாரும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
https://t.me/hisvoicetoday
0 Comments