"இன்று அவருடைய சத்தம்"
அக்டோபர் 24
🔸️ வேத வசனத்தில் தங்கி குடியிருக்க வேண்டும்! 🔸️
"நீங்கள் என் உபதேசத்தில் நிலைத்திருந்தால் மெய்யாகவே என் சீஷராயிருப்பீர்கள்" என இயேசு யோவான் 8:31-ல் ஆணித்தரமாகக் கூறினார். 'நிலைத்திருந்தால்' என்பது ஆங்கிலத்தில் 'தங்கியிருந்தால்' (Abiding) என்றே பொருள்படுத்துகிறது. சொந்த வீட்டில்தான் நாம் எப்போதும் தங்கியிருக்க முடியும்! வாடகை வீட்டில் உள்ளவர்கள், தங்கள் வீட்டை அவ்வப்போது காலிசெய்து விடுவார்கள்!! இன்று அநேகர், தங்கள் சௌகரியப்படி அவ்வப்போது தங்கள் வீட்டை மாற்றிவிடுகிறார்கள்..... அதாவது, வேத வசனத்தின்படியான வாழ்வில் 'தங்கி' நிலைத்திருப்பதில்லை!!
நம் முகத்தில் ஏதோ "கரி" ஒட்டியிருந்தால், அதை யாராவது ஒருவர்தான் நமக்கு சொல்ல வேண்டும்! அல்லது, ஒரு கண்ணாடியின் முன்னால் நின்று அதைக் காணவேண்டும்!!அதுபோன்றதொரு "நல்ல கண்ணாடியே, தேவனுடைய வார்த்தை!" என யாக்கோபு 1:23 கூறுகிறது. ஆனால், துயரம் யாதெனில், எல்லோருமே தேவனுடைய வார்த்தையை கேட்கிறார்கள்.....வெகு குறைவானவர்களே, அதன்படி செய்து, தங்கள் முகத்தில் உள்ள "கரியை" அகற்றிக் கொள்ளுகிறார்கள் (வசனம் 22). இவர்களே தங்கள் "செய்கையில் பாக்கியவானாய்" இருப்பவர்கள்! (வசனம் 25). ஆம், இவர்கள் கேட்டார்கள், அதன்படி செய்தார்கள்! மற்றவர்களோ, கேட்டார்கள்; ஆனால் அதன்படி செய்யவில்லை!!
வசனத்தின்படி அதை கைக்கொள்ளுகிறவர்கள் என்பதின் அர்த்தம் "இவர்கள் பூரணர்கள்" என்பதா? இல்லை! மாறாக, வசனத்தைக் கைக்கொள்ளும் செயல் இவர்களுக்குள் நடந்து கொண்டிருக்கிறது என்பதுதான்!! உதாரணமாய், "நீங்கள் ஒன்றுக்கும் கவலைப்படாமல்" என பிலிப்பியர் 4:6 கூறுகிறதே.... இந்த வசனத்தைக் கைக்கொள்பவர்கள் "பூரண கவலைப்படாத வாழ்க்கை வாழ்பவர்கள்" என அர்த்தமா? இல்லை!
"ஒன்றுக்கும் கவலைப்படாத வாழ்க்கை" 5000 அடி உயரம் கொண்ட வாழ்க்கை. இதை கைக்கொள்பவர்கள், இப்போது சுமார் 100-அடி முன்னேறி சென்று கொண்டிருக்கிறார்கள். இவர்கள் 5000 அடியை அடைந்துவிட்டார்களா? இன்னமும் இல்லை. ஆனால், அதை நோக்கிய 'செயலில்' முன்னேறுகிறார்கள். உத்தம கிறிஸ்தவ ஜீவியத்தில், "தேங்கிய நிலை" என்று இல்லவே இல்லை! மலை உச்சிக்கு 100-அடி சென்ற சைக்கிள், அங்கு நின்றுவிட்டால், உடனே கீழே இறங்கத் துவங்கிவிடும். அதுபோலவேதான், வசனத்தைக் கேட்டு தொடர்ந்து கைக்கொண்டு ஜீவிக்காதவர்களின் நிலையும் பின்மாற்றம் அடைகிறது!!
ஜெபம்:
அன்பின் தந்தையே! ஒரு வீட்டில் நிலைத்து தங்கியிருப்பதுபோல், உம்முடைய வசனத்தில் நிலைத்திருந்து, ஆவிக்குரிய ஜீவியத்தில் வளர்ச்சியடைய உதவி செய்தருளும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
https://t.me/hisvoicetoday
0 Comments