"இன்று அவருடைய சத்தம்"
அக்டோபர் 26
🔸️ சிலுவையின் பாதையில் செழிப்பின் உபதேசம்! 🔸️
தேவன் அருளும் கடின சூழ்நிலைகள் எதுவாயிருந்தாலும்...... உங்கள் சிலுவையை மனப்பூர்வமாய் சகித்து, அந்த சூழ்நிலையில் தேவனுடைய முகத்தை நாடுங்கள். . . உங்கள் அருகில் அவர் நிற்பதை தரிசித்து, அவரோடு கொண்ட ஐக்கியத்தில் உங்கள் இருதயம் சந்தோஷப்படுவதை காண்பீர்கள்! அது, தோன்றி மறையும் "உலக சந்தோஷம் அல்ல" இருதயத்தில் பெற்ற நிரந்தர சந்தோஷம்! (யோவான் 14:27).
"ஒரே, ஒரு முறை" அவரைக் கண்ட உறவில் சந்தோஷம் அடைந்தவன். . . சிலுவையை மனப்பூர்வமாய் ஏற்று "மீண்டும். . . மீண்டும்" அவருடைய உறவில் மகிழ்வான்! அவன் கண்களுக்கு முன்பாக இயேசுவின் இனிய முகம் காணுமே அல்லாமல், சூழ்நிலைகளோ அல்லது அதற்குரிய மனிதர்களோ காணப்படமாட்டார்கள்! சூழ்நிலையின் வெம்மை அகோரமாய் இருந்தாலும், அவர்களின் நெஞ்சம் தேவனுடைய உறவில் களிகூர்ந்திருக்கும்! ஆனால், அந்தோ! "சிலுவையின் உபதேசத்தை" உபதேச அளவில் கேட்ட அனேகர், அன்றொருநாள் "பலவந்தத்தில் சிலுவை சுமந்த" சீமோனைப் போலவே (மத். 27:32) சூழ்நிலைகளில் சிக்கி தவிக்கிறார்கள்! அந்த சூழ்நிலைகளுக்குரிய மனிதர்களே இவர்கள் கண்முன் எப்போதும் நிற்கிறார்கள்! ஆ, இது துயரம்!!
இயேசு தொடர்ந்து யோவான் 16:23-ல் கூறுகையில் "அந்த நாளிலே"
(உபத்திரவத்தின் ஊடாய் என்னைக் கண்ட நாளிலே) "நீங்கள் என்னிடத்தில் ஒன்றும் கேட்கமாட்டீர்கள்" என்றார். உண்மைதான், அவரது உறவில் களித்தவன் "நீரின்றி, எனக்கு வேறு எதுவும் வேண்டாம்" என தாவீது, சங்கீதம் 73:25-ல் கூறியதுபோல், கூறி நிற்பான்! இதுவன்றோ, உத்தம கிறிஸ்தவம்! இந்த தெய்வ உறவின் "மகிழ்ச்சியை" நிறைவாய் தங்கள் நெஞ்சில் கொண்டவர்கள் பாக்கியவான்கள்.... இவர்களே, தேவனை மெய்யாய் ஆராதிப்பார்கள்!! (சங்கீதம் 100:2). "இருதயத்தின் நிறைவான சந்தோஷம்" தேவனை ஆராதிப்பதற்கு அவசியமான முக்கிய பங்கில் ஒன்றாய் இருக்கிறது!!
ஆகிலும், அவ்வேளையில் கேட்கும்படியே இயேசு கூறினார்! மண்ணுக்குரிய யாதொன்றும் அல்ல... "அவர் நாமத்தினால்" கேட்கும்படியே கட்டளையிட்டார் (யோவான் 16:24). அவருடைய நாமம் அல்லது பிதாவின் நாமம் என்பது அவரது திவ்விய சுபாவமே ஆகும்! அன்று அவசர சூழ்நிலையில் நீங்கள் விரும்பிய "பொறுமையை" கேளுங்கள்! "மீண்டும்" அவரைக் காணும்போது "சாந்தகுணத்தை" கேளுங்கள்! "இயேசுவின் தாழ்மையை" கேளுங்கள். . . மெய்யாய் சொல்ல வேண்டுமென்றால், "இதுவே" செழிப்பின் சுவிசேஷம் (Prosperity Gospel) .... மற்றவை, அழிவின் மண்ணுக்குரிய சுவிசேஷம்!!
ஜெபம்:
எங்கள் பரலோக பிதாவே! எங்களை நேசித்து, உம்முடைய திவ்விய சுபாவம் அனைத்தையும் நாங்கள் பெற்று செழிப்பாகும்படி அருளிய சிலுவையின் பாதைக்கு எங்களை அர்ப்பணிக்கிறோம்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
https://t.me/hisvoicetoday
0 Comments