"இன்று அவருடைய சத்தம்"
நவம்பர் 20
🔸️ ஞானத்தின் 7-தூண்கள்! 🔸️
மணவாளன் "ஞானம்" என அழைக்கப்பட்டதை நீதிமொழிகள் 8:1,27-ம் வசனங்களில் வாசிக்கிறோம். அதுபோலவே, மணவாட்டியும்கூட "ஞானம்" என்றே அழைக்கப்படுவதை நீதிமொழிகள் 9:1-ம் வசனத்தில் வாசிக்கிறோம். ஏனெனில் இந்த மணவாட்டி எல்லாவகையிலும் தன் மணவாளனுக்கு ஒப்பாகவே மாறிவிட்டாள்! ஞானத்தின் குணாதிசயங்களை உற்றுநோக்கி "யார் கிறிஸ்துவின் மணவாட்டி?" என்பதை எளிதில் கண்டுபிடித்திடவும் முடியும்!!
1. பரிசுத்தம்:
கிறிஸ்துவின் மணவாட்டிக்கு மிக முக்கியமான "முதல் தூணாய்" காணப்பட வேண்டியது இந்த பரிசுத்தமே ஆகும்! வெளிப்புற பரிசுத்தத்தை மாத்திரம் காட்டி, உள்ளே 'வெற்றுக் கூடாய்' காணப்படும் தூணல்ல இந்த பரிசுத்தம்! அப்படி இல்லவே இல்லை!! மாறாக, தூணின் உச்சி தொடங்கி அதன் அடிப்பாகம் வரை "உறுதியான கெட்டியான" தூணாய் விளங்குவதே இந்த பரிசுத்தம்!
2. சமாதானம்:
நீதியும் சமாதானமும் எப்போதும் இணைந்தே செல்கிறது! ஆம், இவர்கள் இரட்டையர்கள்!! தேவனுடைய ராஜ்யம், நீதியும் சமாதானமுமாம்!! (ரோமர் 14:17). மெய்யான ஞானம் ஒருபோதும் வாக்குவாதம் கொண்டதும், சச்சரவு பண்ணுவதுமாய் இருப்பதே இல்லை! அது சண்டையிடுவதற்கு முன்செல்லாது! 'தன்னால் முடிந்தவரை' யாவரோடும் ரம்மியமான உறவையே நாடும்!
3. சாந்தமுள்ள கரிசனை:
கிறிஸ்துவின் மணவாட்டி மற்றவர்களிடம் எப்போதுமே நல்லவர்களாயும், மென்மை உள்ளவர்களாயும், பொறுமை உள்ளவர்களாயும், சகித்துக் கொள்பவர்களாயும், மரியாதை காண்பிக்கும் குணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்!
4. இணங்குவதற்கு விருப்பம்:
எச்சரிப்பையும், புத்திமதியையும் ஏற்றுக் கொண்டு, அதற்கு இணங்குவார்கள்.
5. மிகுந்த இரக்கமும் அதன் நற்கனிகளும்:
அவ்வப்போது கொண்ட இரக்கத்தினால் அல்ல, கிறிஸ்துவின் மணவாட்டி எப்போதுமே இரக்கத்தினால் நிறைந்திருப்பாள்! யாரையும் நிபந்தனையின்றி, மகிழ்ச்சியுடன், மனப்பூர்வமாய் மன்னிப்பதற்கு கிறிஸ்துவின் மணவாட்டிக்கு கஷ்டமாய் இருப்பதே இல்லை!
6. என்றும் மாறாத உறுதி:
தேவனுடைய பார்வையில் ஜீவிக்கும் இவன், தான் கற்றுத்தேர்ந்த சத்தியத்தில் உறுதியாய் இருப்பான்!
7. மாயமற்ற தன்மை:
மற்றவர்கள் வெளியே காண்பதைவிட, தன் "உள்ளே" அதிகமான ஆவிக்குரிய களஞ்சியம் பெற்றவளாக இருப்பாள், இந்த ஞான மணவாட்டி!
வாஞ்சை உள்ளவர்களாய் இருந்தால், நாமும் ஞானத்தின் இந்த 7-குணாதிசயங்களை நிச்சயமாய் கண்டுகொள்ள முடியும்!!
ஜெபம்:
எங்கள் பரம தகப்பனே! ஞானத்தின் சம்பூர்ணம் நிறைந்த எங்கள் மணவாளனைப் போலவே, அவரது மணவாட்டியாகிய நாங்களும் ஞானத்தின் இந்த ஏழு திவ்ய அம்சங்களில் தேறிட கிருபை தாரும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
https://t.me/hisvoicetoday
0 Comments