இன்று "அவருடைய" சத்தம்
டிசம்பர் 7
🔸️ கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நோக்கிப்பார்த்து ஓடக்கடவோம்! 🔸️
"இயேசுவை நோக்கிப்பார்த்து நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் ஓடக்கடவோம்" (எபிரேயர் 12:1). தேவ பக்தியின் இரகசியம் மாம்சத்தில் வெளிப்பட்ட "கிறிஸ்து" என்ற அந்த நபரில்தான் இருக்கிறதேயல்லாமல், "கிறிஸ்து நம்முடைய மாம்சத்தில் வெளிப்பட்டார்" என்ற உபதேசத்தில் இல்லவே இல்லை. இதை 1தீமோத்தேயு 3:16 மிகத் தெளிவாக சுட்டிக்காட்டுகிறது. எனவே "அவர்" என்ற தனி நபரின் மூலமேயல்லாமல், அவருடைய மாம்சத்தை ஆராய்ந்து கண்டறியும் உபதேசத்தினால் நாம் பரிசுத்தமாவதில்லை.
நாமாக எடுத்துக் கொள்ளும் எந்த முயற்சியும் நம்முடைய பாவ இருதயத்தை ஒருக்காலும் பரிசுத்தமாக்கிட முடியாது. அந்த அற்புத மாற்றம் நிகழ்வதற்கு தேவன்தான் நமக்குள் கிரியை நடப்பிக்க வேண்டும். பரிசுத்தம் (நித்திய-ஜீவன்) தேவனால் உண்டாகும் ஈவு. அதை கிரியையினால் ஒருக்காலும் அடைந்திட முடியாது (எபே. 2:8). தேவன் மாத்திரமே நம்மை முற்றிலும் பரிசுத்தமாக்க முடியுமென 1தெசலோனிக்கேயர் 5:23) மிகத் தெளிவாக கூறுகிறது. இந்த வசனங்களை நம்மில் ஒருவரும் தவறு என்று சொல்லிவிட முடியாதே! இருப்பினும் இன்று எண்ணற்ற விசுவாசிகள் தாங்கள் பரிசுத்தமாகும்பொருட்டு தங்களைத் தாங்களே வெறுப்பதற்கு போராடிக் கொண்டிருப்பதைத்தான் நாம் பார்க்கிறோம். அந்தோ, இவர்கள் பரிசுத்தத்தை அடைவதற்குப் பதிலாக "பரிசேயர்களாகவே" மாறிவிடுகிறார்கள்!
எபேசியர் 4:24 குறிப்பிடும் மெய்யான பரிசுத்தம், இயேசுமீது கொண்ட விசுவாசத்தினால்..... அதாவது, "இயேசுவை நோக்கிப் பார்ப்பதால்" மாத்திரமே அடைந்திட முடியும். ஆம், நாம் உபதேசத்தை மாத்திரமே நோக்குபவர்களாயிருந்தால், முடிவில் பரிசேயர்களாகவே முற்றுப் பெறுவோம். இயேசுவை நோக்கிப் பார்ப்பதின் பொருள் என்ன என்பதை எபிரேயர் 12:2 மிகத் தெளிவாக நமக்கு எடுத்துரைக்கிறது. முதலாவதாக, நாம் அவரை நோக்கிப் பார்த்து "இந்த பூமியில் ஒவ்வொரு நாளும் சிலுவையை சகித்து வாழ்ந்தவராகவும், நம்மைப்போல எல்லாவிதத்திலும் சோதிக்கப்பட்டும் பாவம் இல்லாதவராகவும்" காண்பதுதான் (எபிரேயர் 4:15). இவ்வாறு அவர் நமக்கு முன்னோடியானபடியால், இப்போது அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றி நாமும் தொடர்ந்து ஓட வேண்டும்.
இரண்டாவதாக, "பிதாவின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறவராகவும்" நாம் அவரைக் காண வேண்டும். இவ்வாறு பிதாவின் அருகிலிருந்து நமக்காக வேண்டுதல் செய்யவும், நம்முடைய சோதனைகளிலும், உபத்திரவங்களிலும் நமக்கு உதவி செய்யும்படியும் அவர் ஆயத்தத்துடன் இருக்கிறார்!!
ஜெபம்:
பரம பிதாவே! உபதேசம் எங்களை இரட்சித்திட முடியாது என அறிந்தோம். இப்பூமிக்கு வந்த ஆண்டவர் இயேசுவின் மீது கொண்ட விசுவாசமும், அவரது வாழ்வின் அடிச்சுவடுமே எங்களின் பரிசுத்தமாகட்டும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
https://t.me/hisvoicetoday
0 Comments