இன்று "அவருடைய" சத்தம்
டிசம்பர் 23
🔸️ அசம்பாவிதங்கள் நம்மை மனச்சோர்வடைய செய்திடக்கூடாது! 🔸️
சற்றேறக்குறைய 20 வருடங்களுக்கு முன்பு, நம் தேசத்தின் சுதந்திர நாளில் ஒரு கொடிய பூமி அதிர்ச்சி குஜராத் மாநிலத்தின் சில முக்கிய நகரங்களை அழித்து விட்டது. அப்பகுதிகளில் எத்தனை கோரமான அழுகுரல்கள் கேட்டிருக்கக்கூடும்! ஒரு சில வினாடிகளில் எண்ணற்றோர் அனாதைகளாகினர்! எண்ணற்றோர் வீடுகளை இழந்தனர்!! பூமி அதிர்ச்சி தேவனுடைய தண்டனை என நாம் சொல்லிவிட முடியாது. ஆண்டவராகிய இயேசுவின் நாட்களில் சீலோவாம் கோபுரம் விழுந்தபோது, அந்த விபத்தில் மரித்தவர்கள் மற்றவர்களைக் காட்டிலும் அதிகப் பாவம் செய்தவர்கள் அல்ல என்பதை இயேசு அவ்வேளையில் தெளிவுபடுத்தினார். மேலும், கடைசி நாட்களில் யுத்தங்களும், பஞ்சங்களும், பூமி அதிர்ச்சிகளும் சம்பவிக்க வேண்டியதே எனவும் இயேசு எச்சரிக்கையாய் கூறினார். ஆகவே "கர்த்தருடைய வருகை சமீபித்துவிட்டது" என்பதையே பூமி அதிர்ச்சிகள் நமக்கு நினைவூட்டுகின்றன.
மேலும், கொடிய விக்கிரக ஆராதனைக்குள் மூழ்கிப் போயிருக்கும் நம் இந்திய தேசத்திற்குத் தேவன் இரக்கம் பாராட்டும்படியாய், நாம் யாவருமே நம் தேசத்திற்காய் ஜெபித்திட வேண்டிய அவசியத்தையும் இதுபோன்ற சம்பவங்கள் காட்டுகின்றன!
மரணம் சம்பவித்த சில வீடுகளில் அங்குள்ளவர்கள் தேவனைத் திட்டுவதை நான் கேட்டிருக்கிறேன். அதுபோன்ற இடத்தில், அந்த இடத்தை விட்டே போய்விடலாமா என்றுகூட நான் எண்ணியிருக்கிறேன். இச்சமயங்களில், எதிர்காலத்திற்கென நமக்கு ஓர் உயிருள்ள நம்பிக்கை இருக்கிறது என்பதையே அங்கு கூடியிருக்கும் புறஜாதிகள் அறிந்துகொள்ள வேண்டும்! ஆண்டவருக்குள் மரித்தவர்கள் அவருடைய சமூகத்திற்குள் உடனடியாகப் பிரவேசித்துவிடுவார்கள்!! ஆகவே, மரித்தோரிலிருந்து இயேசு உயிர்த்தெழுந்தபடியால், எதிர்காலத்திற்கு ஒரு மகிமையான நம்பிக்கை நம் யாவருக்குமே இருக்கிறது!!
துக்கமான மனச்சோர்வு என்ற உளையான சேற்றுக்குள் நீங்கள் சிக்கிக் கொள்ளாதபடி கவனமாய் இருங்கள்! அப்படியாகிவிட்டால், உங்கள் உணர்வுகளுக்கும், உங்கள் மனநிலைக்கும், உங்கள் ஆவிக்குரிய நிலைக்கும் நீங்களே தீங்கு செய்துவிட முடியும். இந்நிலையில் உங்கள் மனதில் தோன்றும் யூகங்களையெல்லாம் கூறி மற்றவர்களையும் நீங்கள் இடறச் செய்துவிட முடியும். ஒரு நாளில், மரித்த உங்கள் அன்பு கூர்ந்தவரை பரலோகத்தில் காணும்போது...... இப்பூமியில் ஆண்டவரோடு நெருங்கி நடக்கும் வாய்ப்பை இழந்து வீணாக்கிய அந்த மனச்சோர்வின் காலங்களுக்காய் நீங்கள் 'அன்று' வெகுவாய் துக்கமடைவீர்கள்!
ஜெபம்:
அன்பின் பரம தகப்பனே! தேசத்தின் சோக நிகழ்ச்சிகள், எங்கள் இல்லங்களின் சோக சம்பவங்கள் எங்களை ஜெபத்திற்கு உந்திட வேண்டுமே அல்லாமல், மனச்சோர்வின் உளைக்குள் சிக்காதிருக்க கிருபை தாரும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
https://t.me/hisvoicetoday
0 Comments