இன்று "அவருடைய" சத்தம்
டிசம்பர் 30
🔸️ சதாகாலமும் நம்மோடு இருக்கும் தேவன்! 🔸️
"தாயின் பால் மறந்த குழந்தையைப்போல நான் என் ஆத்துமாவை அடக்கி அமரப்பண்ணினேன்; என் ஆத்துமா பால் மறந்த குழந்தையைப்போல் இருக்கிறது" (சங்கீதம் 131:2) என தாவீதினால் சாட்சி பகர முடிந்தது. பால்குடி மறந்த பிள்ளை இளைப்பாறுதலற்று இருப்பதில்லை! அல்லது தன் தாயின் கவனம் தனக்கு எப்போதும் வேண்டுமென்று சார்ந்து கொள்ளும் விருப்பமும் இருப்பதில்லை! ஆகவே, பால்குடி மறந்த பிள்ளை இவ்வுலகில் கவலையற்று மகிழ்ச்சியாய் இருப்பதை நாம் பார்க்க முடியும்!
"நாமும் கூட" கர்த்தரைச் சார்ந்து நிலைத்திருப்போமென்றால், பால்குடி மறந்த பிள்ளையைப் போல் இருந்திட முடியும்! எவ்வளவுதான் பாடுகளும் துன்பங்களும் நிறைந்த வேலைகள் இருந்தாலும், அதன் மத்தியிலும் அவர் நம்மோடு இருப்பதை நாம் கண்டுகொள்ள முடியும்!!
"சதாகாலமும் நான் உன்னோடு இருக்கிறேன். நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை" என்பது ஆண்டவர் நமக்கென்று அளித்த நிரந்தரமான ஆறுதலின் வசனங்களாகும். இதுவே புதிய உடன்படிக்கையில், நமக்கு தேவன் வழங்கியிருக்கும் மகிழ்ச்சியான செய்தியாகும்: அதாவது, "நாம் என்ன செய்து கொண்டிருந்தாலும், சதாகாலமும் அவர் நம்மோடு இருப்பார் என்பதும், நம்முடைய வீடுகளில் நாம் அவரை எப்போதும் சந்தித்து உறவு கொள்ளமுடியும் என்பதுமே" அந்த நற்செய்தியாகும்.
இப்போது, "இந்த பூமியில் ஆண்டவருடைய சமூகத்தைத் தவிர வேறு விருப்பம் ஏதுமில்லை" என்ற பாக்கியமான இடத்தை நாம் அடைந்திருக்கிறோம். இதை மேடம் குயான் அம்மையார் நேர்த்தியாய் குறிப்பிட்டு கீழ்காணும் கவிதையைப் பாடினார்கள்.....
விரும்பும் இடமோ அல்லது விரும்பாத இடமோ
எதிலும் என் ஆன்மா மகிழ்ச்சி காணவில்லை;
என் வழி நடத்திட என்னோடு தேவன் இருந்தால்
போவதோ அல்லது தங்குவதோ சமமான சந்தோஷமே!
தேவா, நீர் இல்லாத இடத்தில் நான் இருந்திட கூடுமோ?
ஆ, அதுவே என் பெருந்துயரமாகும்!
தொலைவான இடமென்று எதையும் நான் கூறிடேன்
எங்கிருந்தாலும் "உம்மைக் கண்டால்" அதுவே என் பாதுகாப்பு!!
இந்த அம்மையார் பெற்ற "அதே பாக்கியத்தை" நாமும் பெறுவதுதான் எத்தனை மேன்மையானது!!
ஜெபம்:
எங்கள் பரம தகப்பனே! இவ்வுலகின் ஆதரவிற்காய் அழுது கொண்டிருக்கும் பிள்ளைகளாய் இராமல், உம்மையே விசுவாசித்து, நீர் எங்களைவிட்டு விலகாத பங்கில் பூரண திருப்தி காண எப்போதும் எங்களை வழிநடத்தும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
https://t.me/hisvoicetoday
0 Comments