இன்று "அவருடைய" சத்தம்
ஜனவரி 2
🔸️ மனந்திரும்புவதே விசுவாசத்தின் ஆதாரம் 🔸️
ஆதி கிறிஸ்தவர்களிடம் காணப்பட்ட ஆழ்ந்த தன்மையும், அர்ப்பணமும், வல்லமையும் இன்றுள்ள அநேகமான விசுவாசிகளிடம் காணப்படவில்லை. இதற்கு என்ன காரணம் என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? ஆம், இவர்கள் சரியான விதமாய் மனந்திரும்பவில்லை என்பதே பிரதான காரணமாகும். இவர்கள் கிறிஸ்துவை விசுவாசித்தார்கள் என்பது உண்மைதான். ஆனால் இவர்களோ 'முதலாவது' மனந்திரும்பாமலேயே விசுவாசித்தவர்கள்!
உதாரணமாய், இன்று அனேகருக்குப் பழக்கமான ஒரு கீர்த்தனை பாடலின் வாசகத்தை கவனித்துப்பாருங்கள்:
"மா கொடிய துரோகியானாலும்
மனதார விசுவாசித்தால் போதுமே;
அக்கணமே அக்கொடியோன்
இயேசுவின் மன்னிப்பைப் பெற்றிடலாகுமே!"
இவ்வாறு, ஒரு கொடிய துராகிதன் 'வெறுமனே' விசுவாசித்துவிட்டால் இயேசுவின் மன்னிப்பை உண்மையாகவே பெற்றிட முடியுமா? அவன் 'முதலாவது' மனந்திரும்புவது அவசியமில்லையா?
இக்கேள்விக்கு நீங்கள், "உண்மையான விசுவாசம் மனந்திரும்புதலோடு இணைந்தே வருகின்றது" என பதிலுரைக்கலாம். ஆனால், நீங்கள் எண்ணிக்கொள்ளும் இந்த விளக்கத்தை அக்கொடிய துராகிதன் அறியாதிருப்பான் என்றால், தான் விசுவாசித்ததின் நிமித்தம் 'மறுபடியும் பிறந்துவிட்டதாக' அல்லவா தன்னைத் தவறாக முடிவு செய்திருப்பான்? இதன் நிமித்தம் தன் ஜீவிய காலமெல்லாம் கொடிய ஏமாற்று வஞ்சகத்தில் அம்மனிதன் சிக்கிக் கொள்வானே!
இயேசு கிறிஸ்துவே பிரசங்கித்த முதல் செய்தி யாதெனில், "மனந்திரும்பி, சுவிசேஷத்தை விசுவாசியுங்கள்" (மாற்கு 1:15) என்பதுதான். இதே செய்தியைத்தான் அவருடைய அப்போஸ்தலர்களும் பிரசங்கிக்கும்படி இயேசு கட்டளை கொடுத்தார் (லூக்கா 24:47). அதை அப்படியே அப்போஸ்தலர்களும் கொஞ்சமும் பிசகாமல் பிரசங்கித்தார்கள் (அப்.20:21). நீங்கள் யாராயிருந்தாலும், உங்களுக்கு காரியம் நன்றாய் நடந்து நீங்கள் உண்மையாகவே குணப்பட வேண்டுமென்றால். . . . மனந்திரும்புதலையும் விசுவாசத்தையும் ஒருக்காலும் பிரித்துவிடாதீர்கள்!! இந்த இரண்டையும் தேவனே ஒன்றாக இணைத்துள்ளார். எனவே தேவன் இணைத்ததை மனிதன் ஒருக்காலும் பிரிக்கலாகாது!
ஜெபம்:
எங்கள் பரம தந்தையே! மெய்யாய் மனந்திரும்பி திருந்தி வாழாமலே "நானும் ஆண்டவரை விசுவாசிக்கிறேன்" என வாழ்ந்த என்னை மன்னியும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
0 Comments