இன்று "அவருடைய" சத்தம்
ஜனவரி 4
🔸️ உங்களுக்கு தவறிழைத்தவர்களை மன்னியுங்கள்! 🔸️
"மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னியாதிருந்தால், உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களையும் மன்னியாதிருப்பார் (மத்தேயு 6:15) என இயேசு கூறினார். இதை இயேசு மேலும் வலியுறுத்திக் கூறும்பொழுது நாம் பிறரை மேலோட்டமாக அல்ல "மனப்பூர்வமாய்" மன்னிக்க வேண்டும் என்றும் கூறினார்
(மத்தேயு 18:35). நாம் பிறரை 'முழுவதுமாய்' 'மனப்பூர்வமாய்' மன்னிக்காவிட்டால், நாம் தேவனால் மன்னிக்கப்படுவதும் ஒருக்காலும் கைகூடாது! பிறர் செய்த செயலை நாம் ஒருவேளை மறக்க முடியாமல் இருக்கலாம். ஆனால், எப்பொழுதெல்லாம் பிறர் செய்த தீமையை நினைவுகூரும்படி நாம் சோதிக்கப்படுகிறோமோ, அப்பொழுதெல்லாம் அத்தீமைகளை நினைப்பதற்கு மறுத்துவிட நம்மால் நிச்சயம் முடியும்!
சில சமயங்களில் உங்களுக்குச் சொல்லொண்ணா தீமை விளைவித்த ஒருவரை மனப்பூர்வமாய் மன்னிக்க முடியாதபடி நீங்கள் கஷ்டப்படலாம். அச்சமயங்களில், அவரை மன்னிப்பதற்கு உதவும்படி தேவனிடம் முறையிட்டு ஜெபியுங்கள். அப்போது எந்த மனிதரையும் மன்னிப்பதற்குரிய விருப்பத்தையும் அதை நிறைவேற்றுவதற்குரிய பெலனையும் தேவன் உங்களுக்குத் தருவதை நீங்களே கண்டு ருசிப்பீர்கள்!
நம்முடைய கோடிக்கணக்கான பாவங்களைத் தேவன் இலவசமாய் மன்னித்திருப்பதை நீங்கள் சற்றே தியானித்தால், அதேபோல பிறரை மன்னிப்பது உங்களுக்கு இப்போது கஷ்டமாயிராது. நாம் யாரையேனும் மன்னியாதிருக்கும்போதுதான் சாத்தான் நம்மை தன் வல்லமையால் பிடித்துக் கொள்கிறான்! எனவேதான் "சாத்தானாலே மோசம் போகாதபடிக்கு பிறரை மன்னியுங்கள்!" என பவுல் புத்தி கூறினார் (2 கொரிந்தியர் 2:10,11).
உங்கள் சகோதரனையோ அல்லது சகோதரியையோ மன்னிக்காவிட்டால், தேவன் உங்கள் ஜெபங்களை கேட்கவே மாட்டார். "என் இருதயத்தில் அக்கிரமசிந்தை கொண்டிருந்தேனானால், ஆண்டவர் எனக்குச் செவி கொடார்" என வேதம் தெள்ளத் தெளிவாகவே கூறுகின்றது (சங்கீதம் 66:18). தேவன் எனக்கு பதில் கொடுக்கமாட்டார் என்றுகூட இல்லாமல், எனக்குச் செவி கொடுக்கக்கூட மாட்டார் எனக் கூறப்பட்டிருப்பதைக் கவனித்தீர்களா! இனியும் நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளாதிருப்போகமாக!!
ஜெபம்:
அன்பின் பிதாவே! எங்கள் 'கணக்கில்லாத' பாவங்களை நீர் மன்னித்தீரே! அதுபோல், நாங்களும் எங்களுக்கு தவறிழைத்தவர்களை மனப்பூர்வமாய், முழுமையாய் மன்னித்திட எங்களுக்கு உதவி செய்தருளும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
0 Comments