Header Ads Widget

LightBlog

Ticker

6/recent/ticker-posts

ஜனவரி 06

 இன்று "அவருடைய" சத்தம்


ஜனவரி 6


🔸️ நிலைத்திருக்கும் வாழ்க்கையையே நாடுங்கள்! 🔸️


இரட்சிக்கப்பட்டு தேவனுடைய பிள்ளையாகிவிட்ட ஒருவனுக்கு, இக்காலத்திற்குரியவைகளைக் காட்டிலும் நித்தியத்திற்கு உரியவைகளே அதிக மேன்மை உள்ளதாய் இருக்கும்! அதாவது, பூமிக்குரியவைகளின் மதிப்பைக் காட்டிலும் பரலோகத்துக்கு உரியவைகளின் மதிப்பு இவனுக்கு இப்போது அதிக முக்கியமானதாயிருக்கும்.


நித்திய வாழ்வை நோக்கிச் செல்லும் நம்முடைய பயணத்தில், இவ்வுலகம் நாம் கடந்து செல்லும் 'இடைவெளி' மாத்திரமேயாகும். 'தகுதியைப் பெறும் பரீட்சைக்காகவே' நாம் இவ்வுலகில் வைக்கப்பட்டிருக்கிறோம். வாழ்வின் பல்வேறு சூழ்நிலைகளில் பரலோகத்திற்குரிய நித்தியமானவைகளைத் தெரிந்து கொள்கிறோமா? அல்லது இப்பூமிக்குரிய அநித்தியமானவைகளைத் தெரிந்து கொள்கிறோமா? என்பதைக் காண்பதற்காகவே தேவன் இப்போது நம்மை சோதித்தறிகிறார். நாம் ஞானம் உள்ளவர்களாய் இருந்தால், நித்தியத்தில் மதிப்புடையவைகளையே தெரிந்துகொள்வோம்!


ஒரு குழந்தை 500 ரூபாய் நோட்டை காட்டிலும் ஒரு பளபளக்கும் வர்ணத்தாளையே விரும்பும்.  ஏனென்றால்,  இக்குழந்தைக்கு மதிப்பிடும் சாதுரியம் இல்லை!  பரலோகத்திற்கும்,  நித்தியத்திற்கும்  உரியவைகளுக்குப் பதிலாக இப்பூமிக்குரியவைகளையே நாம் தெரிந்து கொண்டால், நாமும் இந்தக் குழந்தையைப் போலவே நடந்து கொள்கிறோம்!!


"இவ்வுலகமும் அதிலுண்டான யாவும் கடந்து போகும்" என வேதாகமத்தில் மிகவும் தெளிவாக தேவன் நமக்கு கூறியிருக்கிறார். எனவே இப்பூமிக்குரிய தற்காலிகமானவைகளுக்காக நாம் ஜீவிப்பது,  நம்முடைய பணத்தை சீக்கிரத்தில் நஷ்டமடைந்து திவாலாகப்போகும் வங்கியில் சேமிப்பதற்கு ஒப்பாகும்! ஞானமுள்ள மனிதனோ தன் பணத்தை ஒரு நிலையான வங்கியில் சேமித்து வைப்பான்.  இதைப்போலவே பரலோக ஞானமுள்ளவர்கள், நித்திய மதிப்புடையவைகளுக்காகவே ஜீவிப்பார்கள்! நித்திய மதிப்புடையவைகள் நம்முடைய குணாதிசயங்களாகிய பரிசுத்தம், அன்பு, நற்குணம், மன்னிக்கும் தன்மை, தாழ்மை  போன்றவைகளாகும்!   நாம் இந்த பூமியை விட்டு கடந்து போகையில்,  இது போன்ற மேலான குணாதிசயங்களை மாத்திரமே நம்மோடு எடுத்துச்செல்ல முடியும்!!


ஏனெனில், "ஒரேதரம் மரிப்பதும் பின்பு நியாயத்தீர்ப்பு அடைவதும் மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறது" (எபிரேயர் 9:27). ஆம், இந்த "ஒரு வாழ்க்கை" நித்திய நோக்கத்தோடு வாழ்வதே மிகச்சிறந்த  வாழ்க்கையாகும்!  


ஜெபம்:

அன்பின் பரம பிதாவே! இந்த "ஒரே ஒரு வாழ்க்கையை" உலக மாயைக்கு அல்ல, நித்திய வாழ்வை முன்வைத்தே ஜீவித்திட வேண்டும் என மீண்டும் என்னை உணர்த்தியமைக்கு உமக்கு நன்றி! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.


எழுதியவர்:

சகோதரர் சகரியா பூணன்.


"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".


From:-

https://t.me/hisvoicetoday




Post a Comment

0 Comments