இன்று "அவருடைய" சத்தம்
ஜனவரி 8
🔸️ ஜெபம் கேட்டிட நமக்கு பரம தகப்பன் உண்டு! 🔸️
ஜெபிக்கும் சிலாக்கியம் ஒவ்வொரு தேவனுடைய பிள்ளைக்கும் கையளிக்கப்பட்ட ஆச்சரியமான சிலாக்கியங்களில் ஒன்றாகும். பொதுவாக ஒரு சத்தத்தை நம்முடைய காதுகளினால் கேட்பதுபோல தேவன் நம்மிடம் பேசுவதில்லை. ஆனால் நமக்குள் இருக்கும் ஆவியில், உணர்த்துதலைக் கொடுத்து தேவன் பேசுகிறார். இதுவும் நாம் காதுகளால் கேட்கும் சத்தத்தைப் போலவே உண்மையான சத்தமேயாகும். அதுபோலவே, நம் மனதின் பாரங்களை ஜெபத்தின் மூலமாய் நாம் பேசுவதையும் தேவன் கேட்கிறார்! ஆம், நம்முடைய மனதில் ஏற்படும் பாரமான யாவற்றையும் தேவனிடத்தில் கூறும்படியே இயேசு நம்மை ஊக்குவிக்கிறார்!!
இன்று அநேக ஜனங்கள் தனிமையில் மௌனமாய் துன்பப்படுகிறார்கள். ஏனென்றால் இவர்களுக்கு தங்கள் வருத்தங்களை பகிர்ந்து கொள்வதற்கு யாருமே இல்லை! ஆனால் தேவனுடைய பிள்ளைகளுக்கோ பரலோகத்தில் ஒரு தகப்பன் இருக்கிறபடியால், அவரிடத்தில் நமக்குரிய யாவற்றையும் பகிர்ந்துகொள்ள முடியும். பரலோகத் தகப்பன், இப்பூமியில் நமக்குத் 'தேவையான' யாவற்றையும் தருவார் என நாம் நம்பியிருக்கவும் முடியும்!
நமக்குரிய சிக்கல்களை தேவன் மாற்றும்படி அவரிடம் நாம் கேட்பதற்கும், அதன்மூலம் சிக்கல்கள் மாறுவதை ருசிப்பதற்கும், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நமக்கு கற்றுக் கொடுத்திருக்கிறார். இதுவே ஜெபத்தினால் விளையும் அற்புதமாகும்! நமக்கு ஏற்படும் சம்பவங்கள் நமக்கும் நம் குடும்பத்திற்கும் ஏதேனும் ஒருவகையில் ஊறு விளைவிக்கும் போது, "எது நடந்தாலும் தேவ சித்தம்தான்!' என விதிப்பயனாக நாம் ஏற்றுக் கொள்ளத் தேவையே இல்லை! விதிப்பயனுக்கும், தேவனுடைய சித்தத்திற்கு அடங்கி இருப்பதற்கும் ஏராளமான வித்தியாசங்கள் உண்டு. ஆம், ஜெபத்தில் நமக்குத் தேவையான யாவற்றையும் கேட்பதற்கே நாம் ஊக்குவிக்கப்படுகிறோம்!!
வேதாகமத்தில் உள்ள வாக்குத்தத்தமும், "தேவன் உங்கள் குறைவையெல்லாம் (தேவையெல்லாம்) நிறைவாக்குவார்" என்றே இருக்கிறது (பிலிப்பியர் 2:19).
இருப்பினும், ஞானமுள்ள எந்த ஒரு தகப்பனைப் போலவே நாம் விரும்புவதையெல்லாம் அவர் தரமாட்டார்! நமக்குத் 'தேவையானவைகள்' எவைகளோ, நமக்கு நல்லது என அவர் காண்பவைகள் எவைகளோ, அவைகளை மாத்திரமே நமக்குத் தருவார்!
ஜெபம்:
எங்களிடம் பட்சம் நிறைந்த பரம தகப்பனே! இனியும் நாங்கள் தனியாய் துன்பம் அடைந்திட தேவையில்லையே! எங்கள் பாரங்கள் யாவையும் உம்மிடம் கூறி பதில் பெற்றிட தயை புரியும்! இயேசுவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
https://t.me/hisvoicetoday
0 Comments