இன்று "அவருடைய" சத்தம்
ஜனவரி 11
🔸️ மனச்சோர்விலிருந்து விடுதலை! 🔸️
என் கிறிஸ்தவ வாழ்க்கையை புரட்சியான மாற்றம் செய்த ஒரு சத்தியம் உண்டு. அதென்னவென்றால், "பிதா, இயேசுவை நேசித்தது போலவே நம்மையும் நேசிக்கிறார்" (யோவான் 17:23) என்று இரட்சகராகிய இயேசு நமக்கு அருளிய உன்னத வெளிப்பாடே ஆகும்.
பொதுவாய் எல்லா கிறிஸ்தவர்களுமே, பரலோகத்தில் அன்புள்ள பிதா ஒருவர் இருக்கிறார் என்பதை எழுத்தளவில் விசுவாசிக்கின்றனர். ஆனால் இவர்கள் அடிக்கடி கவலையுற்று, பதட்டம் அடைந்து, ஒரு பாதுகாப்பற்ற பயத்துடன் வாழும் வாழ்க்கை, இவர்கள் தங்கள் இருதயத்தின் ஆழத்திலிருந்து இச்சத்தியத்தை விசுவாசிக்கவில்லை என்பதையே நிரூபிக்கிறது. இருப்பினும், இயேசுவை தேவன் எவ்வளவு நேசித்தாரோ அதே அளவு நம்மையும் நேசிக்கிறார் என்ற துணிவான விசுவாசம் கொள்ள கொஞ்சம் நபர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்!
இம்மாபெரும் சத்தியத்தை காணும்படி உங்கள் கண்கள் மாத்திரம் திறக்கப்பட்டுவிட்டால் உங்கள் வாழ்க்கையின் முழு அணுகுமுறையையும் இச்சத்தியம் மாற்றிவிடும்! மாத்திரமல்ல, உங்கள் வாழ்க்கையில் உள்ள எல்லா முறுமுறுப்பும், மனச்சோர்வும், நம்பிக்கையின்மையும் அழிந்து ஒழிந்து போகும்! இப்படியெல்லாம் நடப்பது சாத்தியம் என்று நான் அறிந்திருக்கிறேன். ஏனெனில், இவை யாவும் என் வாழ்க்கையில் நிறைவேறி இருக்கிறதே!!
அநேக ஆண்டுகள் நான் மனச்சோர்வுக்கு அடிமையாக வாழ்ந்து தோற்கடிக்கப்பட்டவன். இவ்வாறு நான் இருந்தது பிதாவின் சித்தம் இல்லைதான்; இருந்தாலும் நானோ அதிலிருந்து விடுதலையாக முடியாமல் தவித்தேன். என்ன விந்தை! "பிதா இயேசுவை நேசித்தது போலவே என்னையும் நேசிக்கிறார்" என்ற சத்தியத்தைக் காண என் கண்கள் திறக்கப்பட்ட 'அந்த நாளிலிருந்து' எல்லாம் அடியோடு மாறிவிட்டது!! என் வாழ்வின் பாதைக்குள் பிரவேசிக்கும் ஒவ்வொன்றும் என் அன்பின் பிதாவின் கையிலிருந்தே வருகின்றன என்பதை இப்போது தெளிவாய் காண்கிறேன். அவர் என்னைக் கண்ணின் மணிபோல் காக்கிறதை கண்டுகொண்டபடியால், இப்போது என் வாழ்வின் எந்த சூழ்நிலையும் என்னை முறுமுறுக்கவோ, மனச்சோர்வு அடையவோ செய்திட முடிவதில்லை!! ஆ, இப்போது "தேவன் இயேசுவை நேசித்தது போலவே என்னையும் நேசிக்கிறார்" என்ற சத்தியம் என் வாழ்வில் அசைக்க முடியாத அஸ்திவாரமாய் ஆகிவிட்டது!!
ஜெபம்:
நேசமுள்ள பரம தகப்பனே! "இயேசுவை நேசித்ததுபோலவே என்னையும் நேசிக்கும்" உமது அன்பை என் கண்கள் கண்டுவிட்டன! மனச்சோர்வை அகற்றிய உம் சத்தியத்திற்கு நன்றி! இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-



0 Comments