இன்று "அவருடைய" சத்தம்
மார்ச் 8
🔸️ தன் மீது தீராத வாஞ்சை உண்டோ என்பதை தேவன் காண விரும்புகிறார்! 🔸️
யாக்கோபை தேவன் முழுமையாய் ஆசீர்வதிப்பதற்கு முன்பாக அவனுடைய வாஞ்சையை தேவன் சோதித்துப் பார்த்தார்! ஆகவேதான் அவனிடம் "நான் போகட்டும்" என கூறினார். இதுவரை யாக்கோபு தான் பெற்றதில் திருப்தி அடைந்து விட்டானா? அல்லது இன்னமும் தேவன் மீது அதிக வாஞ்சை கொண்டிருக்கிறானா? என்பதையே சோதித்துப் பார்த்தார். இப்போது தேவன் யாக்கோபை சோதித்துப் பார்த்தது....பின் வருடங்களில், எலியா தன்னைப் பின் தொடர்ந்து வந்த எலிசாவை சோதித்ததற்கு ஒப்பாகவே இருந்தது. எலியா திரும்பத் திரும்ப எலிசாவிடம் "நான் போகட்டும்! " என்றே கூறிக் கொண்டிருந்தான். ஆனால் எலிசாவோ, பிரிந்து சென்றிட மறுத்தவனாய், மிகுந்த ஆர்வத்தோடு பின்தொடர்ந்து எலியாவின் ஆவியில் இரட்டிப்பான பங்கைப் பெற்றுவிட்டான். (2 இராஜா. 2).
இதைப்போலவே இயேசுவும்கூட எம்மாவு 2-சீஷர்களையும் சோதித்துப் பார்த்தார்! சம்பாஷணையின் பாதியில் அந்த சீஷர்களின் வீடு வந்துவிட்டது. அப்போது, அவர்களை விட்டு அப்புறமாய் விலகிப் போவது போல் இயேசு பாவனை செய்தார்! ஆனால், அந்த சீஷர்களோ அவர் தங்களை விட்டுப் போய்விட அனுமதிக்கவில்லை...அதன் விளைவாய், அவரிடமிருந்து ஆசீர்வாதத்தை அந்த ராத்திரியில் பெற்றுவிட்டார்கள் (லூக்கா 24 :15-31).
இன்றும், தேவன் நம்மையும் சோதித்துப் பார்க்கிறார். "தேவனுடைய மேலானவைகளை நான் பெற்றே தீரவேண்டும்!" என்ற தீராத ஏக்கத்தை ஒருவனில் தேவன் காணாதவரை அவனை அவர் ஒருபோதும் முழுமையாய் ஆசீர்வதிப்பதே இல்லை! யாக்கோபைப் போலவே நாமும் தாகம் கொண்டவர்களாய், "ஆண்டவரே! நான் இதுவரை அனுபவிப்பதைக் காட்டிலும் மேலான ஜீவியம் கிறிஸ்தவ வாழ்க்கையில் உண்டு. இப்போது நான் திருப்தி அடைந்திடவில்லை! என்ன விலைக்கிரயம் ஆனாலும், எனக்கு உம்முடைய பரிபூரணமும் வேண்டும்!!" என்றே கெஞ்சிட வேண்டும். இந்தப் பொன்னான இடத்திற்கு நாம் வந்து விட்டால், தேவனுடைய சம்பூரண ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்வதற்கு "ஒரு அடி எடுத்து வைத்தால் உள்ளே போய் விடலாம்" என்பதுபோல் அவருடைய ஆசீர்வாதம் நமக்கு மிக அருகாமையில் வந்துவிடும்!!
ஜெபம்:
பரம தந்தையே! உம் கரத்தின் ஆசீர்வாதம் "உம்மீது தாகம் கொண்டவர்களுக்கே" உரியது என்பதை கண்டு கொண்டோம். "நீரே எங்கள் வாஞ்சை" என அறிக்கை செய்து உம்மிடம் வருகிறோம், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எங்களை ஏற்றருளும், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
0 Comments