இன்று "அவருடைய" சத்தம்
ஜனவரி 12
🔸️ சுய-அனுதாபத்திலிருந்து விடுதலை! 🔸️
"என்னை யாரேனும் நேசிக்கமாட்டார்களா?" என்று ஏங்கி நிற்கும் ஜனங்களால் இவ்வுலகம் நிறைந்திருக்கிறது. அநேக கிறிஸ்தவர்களும், தாங்கள் நேசிக்கப்படும்படியாக சபை விட்டு சபை செல்கிறார்கள்! சிலர் நண்பர்களிடமும் சிலர் திருமண உறவிலும் அவ்வன்பைத் தேடுகிறார்கள். ஆனால் பரிதாபம்! இவ்விதமாய் தேடுவதின் பிரதிபலன் ஏமாற்றத்திலேயே முடிவடைகிறது!! அனாதைகளைப் போல, இவ் ஆதாமின் பிள்ளைகள் பாதுகாப்பற்றவர்களாய் மீண்டும் மீண்டும் "சுய-அனுதாப நோயினால்" பாதிக்கப்படுகிறார்கள். இதில் வேதனை என்னவென்றால், மனந்திரும்பிய அநேகர்கூட, இன்னமும் இக்கொடிய பாதுகாப்பற்ற நிலையிலேயே இருக்கின்றனர்! இவ்வாறு இருக்க வேண்டியது நிச்சயமாய் அவசியமேயில்லை!!
இப்பிரச்சினைகளுக்கு சுவிசேஷம் அளிக்கும் விடை யாது? தேவனுடைய அன்பில் பாதுகாப்பைக் கண்டுகொள்வதுதான் இதற்கு நிரந்தரமான விடை! மறுபடியும் மறுபடியும், இயேசு தன் சீடர்களுக்கு, அவர்களுடைய தலையின் மயிரெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது என்றும், கோடிக்கணக்கான பறவைகளைப் போஷிக்கிறவர், கோடிக்கணக்கான மலர்களை உடுத்துவிக்கிறவர் நிச்சயமாய் உங்களையும் பராமரித்து காப்பார் என்றும் உறுதிபடக் கூறினார். இவை எல்லாவற்றிற்கும் மேலாக, "தம்முடைய சொந்த குமாரனென்றும் பாராமல் நம் எல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர் அவரோடுகூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பது எப்படி?" என்று ரோமர் 8:32-ம் வசனம் அறைகூவி முழங்குகிறது.
இதைத்தான், "இளைப்பாறுதலுக்குள் பிரவேசித்தல்" என புதிய ஏற்பாடு விளம்புகிறது. "(நம்மீது தேவன் கொண்ட பூரண அன்பை) விசுவாசித்தவர்களாகிய நாமோ, அந்த இளைப்பாறுதலில் பிரவேசிக்கிறோம்" (எபிரெயர் 4:3) என்றே வாசிக்கிறோம். மேலும், இந்த இளைப்பாறுதலுக்குள் நம் முழு இருதயத்தோடும் நாம் பலவந்தம் செய்து பிரவேசிக்க வேண்டும் எனவும் வேதம் வலியுறுத்தி கூறுகிறது (எபிரெயர் 4:11). இந்த இளைப்பாறுதலை கண்டடையாதவர்களே மிக எளிதில் அலைக்கழிக்கப்பட்டு வீழ்ச்சி அடைவார்கள்!
ஜெபம்:
பேரன்பு கொண்ட பரம தந்தையே! பாடி மகிழும் ஆகாயத்துப் பறவைகளைவிட, வண்ண மலர்களைவிட எங்களை எவ்வளவு அதிகமாய் நேசிக்கிறீர்! 'சுய அனுதாப நோய்' இன்றே எங்களைவிட்டு மாய்ந்துவிட்டது!! உமக்கு நன்றி.... இரட்சகர் இயேசுவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-



0 Comments