இன்று "அவருடைய" சத்தம்
பிப்ரவரி 5
🔸️ புத்திமதி கூறிட மனதுருக்கம் தேவை! 🔸️
பிலிப்பியர் நிருபத்தில் பவுல் புத்திமதிகளை எழுதியபோது, "சகோதரரே, நீங்கள் என்னோடேகூடப் பின்பற்றுகிறவர்களாகி, நாங்கள் உங்களுக்கு வழிகாட்டுகிறபடி நடக்கிறவர்களை மாதிரியாக நோக்குங்கள்.
ஏனெனில், அநேகர் வேறுவிதமாய் நடக்கிறார்கள். அவர்கள் கிறிஸ்துவின் சிலுவைக்குப் பகைஞரென்று உங்களுக்கு அநேகந்தரம் சொன்னேன், இப்பொழுதும் கண்ணீரோடும் சொல்லுகிறேன். (பிலிப்பியர் 3:17,18) எனக் கூறினார்.
மேற்கண்ட வசனங்களில் இரண்டு ரகமான கிறிஸ்தவர்களை பவுல் தெளிவுபடுத்தினார். முதல் ரகத்தை சேர்ந்தவர்கள், அப்போஸ்தலனாகிய பவுலைப்போலவே, கிறிஸ்துவைப்போல் மாறுவதற்கும், ஆண்டவரையும் அவருடைய பாடுகளின் ஐக்கியத்தையும் அதிகமாய் வாஞ்சை கொண்டு அவரோடு மரிப்பதற்கும் வகைதேடுபவர்கள்!
ஆனால் இரண்டாவது ரகத்தைச் சேர்ந்தவர்களோ கிறிஸ்துவின் ஆவிக்கு முரணான ஆவி கொண்டவர்களாக இருந்தார்கள். இவர்களை "கிறிஸ்துவின் சிலுவைக்குப் பகைஞர்கள்" என்றே பவுல் குறிப்பிட்டார். ஏனெனில், இவர்கள் பூமிக்குரியவைகளிலேயே சதா நாட்டம் கொண்டவர்களாக இருந்தார்கள்!
நாம் பவுலோடு முதல் ரக குழுவினருடன் இருப்பதற்கே விரும்புகிறோம். ஆம், அந்த விருப்பம் நல்லதுதான். ஆனால், நாம் பவுலின் குழுவினரோடு இருக்க வேண்டுமென்றால், அவரிடம் காணப்பட்ட "ஒரு விசேஷித்த குணாதிசயமும்" நம்மில் காணப்பட வேண்டும். அது என்னவெனில்: கிறிஸ்துவின் சிலுவைக்குப் பகைஞர்களைக் குறித்து அவர் குறிப்பிட்ட போதெல்லாம் "மிகுந்த கண்ணீரோடு" பேசினார்!
பார்த்தீர்களா! நாமும் நம்முடைய ஜீவியத்தில், அவ்வப்போது ஒத்த வேஷம் தரித்த அல்லது பின்மாற்றம் அடைந்த கிறிஸ்தவர்களைக் குறித்து பேச வேண்டியதாய் உள்ளது. ஆனால்..... பவுல் பேசிய ஆவியோடு நாம் அவர்களைக் குறிப்பிட்டுப் பேசியிருக்கிறோமா? அல்லது பரிசேயத்துவ சுயநீதியோடும், குற்றம்சாட்டும் ஆவியோடும் பேசினோமா? இந்த இரண்டாவது ரக ஆவி உடையவர்களாய் இருந்திருப்பீர்கள் என்றால், "சகோதரர்களை குற்றஞ்சாட்டும்" சாத்தானோடு நீங்கள் ஐக்கியம் கொண்டுவிட்டீர்கள் என்பதையே இப்போது அறிந்து கொள்ளுங்கள்!
கிறிஸ்துவின் சிலுவைக்குப் பகைஞர்களைக் குறிப்பிடவேண்டிய அவசியம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அவ்வாறு குறிப்பிடுவதற்கு ஒரே வழி "கண்ணீரோடு" குறிப்பிடுவதுதான்!
ஜெபம்:
அன்பின் பிதாவே! எங்கள் பிள்ளைகளுக்கோ அல்லது மற்றவர்களுக்கோ நாங்கள் கூறும் புத்திமதிகளில் "மனதுருக்கமும் கண்ணீரும்" இல்லை..... உம் போன்ற மனதுருக்கத்தை எங்களுக்குத் தாரும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-



0 Comments