இன்று "அவருடைய" சத்தம்
பிப்ரவரி 15
🔸️ ஜீவன் தரும் இடுக்கமான வாசலுக்குள் பிரவேசியுங்கள்! 🔸️
மத்தேயு 5, 6, 7-ம் அதிகாரங்களில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து விவரித்த வெற்றியுள்ள வாழ்க்கையில் அனேகருக்கு விசுவாசம் இருப்பதில்லை. இவ்வதிகாரங்களை வாசித்தவுடன், இப்படிப்பட்ட ஜீவியம் "இவ்வுலகில்" சாத்தியமில்லை என்று சொல்லுவார்கள். கானான் தேசத்தை வேவு பார்த்து, அதனுள் பிரவேசிப்பது கூடாத காரியம் என்று கூறிய 10 வேவுக்காரர்களுக்கே ஒப்பாயிருக்கிறார்கள் (எண்.13:31).
தங்களை "விசுவாசிகள்" என்று அநேகர் அழைத்துக் கொண்டாலும், இவர்களுடைய அவிசுவாசத்தின் கொழுமை "ஜீவனுக்குள் நடத்தும்" இடுக்கமான வாசலுக்குள் பிரவேசிக்க ஒவ்வாது! நாம் வாழும் இவ்வுலகம் தேவன் பேரில் அவிசுவாசத்தினால் நிறைந்திருக்கிறது. "இதே ஆவி" அதிகபட்சமான கிறிஸ்தவர்களிடம் காணப்படுவது மிகவும் பரிதாபம்! மிகவும் கொஞ்சம் பேர்களே தாங்கள் தேவனுடைய கிருபையினாலும், அவருடைய பெலத்தினாலும் மலைப் பிரசங்கத்தில் விவரிக்கப்பட்ட வாழ்விற்குள் பிரவேசிக்க முடியும் என்று விசுவாசிக்கிறார்கள்.
அநேக கிறிஸ்தவர்கள் தங்களுடைய தரம் குறைந்த வாழ்க்கையை நியாயப்படுத்துவதற்கு, தேவனுடைய வார்த்தையில் கலப்படம் செய்து, கறைப்படுத்தவும் துணிவு கொள்கிறார்கள் (2 கொரி 2:17; 4:2). சிலர் மலைப்பிரசங்கத்தை யூதர்களுக்கு உரியது என்றுகூட துணிந்து தர்க்கம் செய்கிறார்கள். பலர் அசட்டையாய் புறக்கணிக்கிறார்கள்.
எவ்வித வேதவசன முரண்பாட்டிற்கும் ஆணித்தரமாக எதிர்த்து நிற்பவர்களும், தேவனுக்குரிய மேன்மைகளைப் பெற்றிட எந்த விலைக்கிரயமானாலும் செலுத்தத் துணிந்தவர்களுமே..... ஆம், இவர்கள் மாத்திரமே..... இயேசு பிரசங்கித்த இடுக்கமான வாசலுக்குள் உட்பிரவேசிக்க முடியும். இவர்களே இன்றைய கிறிஸ்தவத் தலைவர்களாகக் கருதப்படுபவர்களிடமிருந்து உருவாகும் எதிர்ப்புகள், பொய்யான குற்றச்சாட்டுகள், தவறாய் புரிந்து கொள்ளப்படுதல், பயமுறுத்தப்படுதல் போன்ற தடைகளை எல்லாம் மீறி இக்குறுகிய வாசலுக்குள் உட்பிரவேசிப்பார்கள். மீதியானவர்கள் எல்லாம் கரங்களைத் தட்டி, ராகத்தோடு பல்லவிகள் பாடி, காது குளிர பிரசங்கங்கள் கேட்பதில் திருப்தியுற்று வெளியிலேயே தங்கிவிடுவார்கள்!
ஜெபம்:
அன்பின் பரலோக பிதாவே! ஆண்டவர் இயேசுவின் மூலம் எங்களுக்குப் போதித்த 'இடுக்கமான வாசலுக்காய்' ஸ்தோத்திரம்! இவ்வழி நடந்து, "ஜீவனுக்குள்" பிரவேசத்திட அருள்செய்யும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
0 Comments