இன்று "அவருடைய" சத்தம்
மார்ச் 4
🔸️ தீமைக்கு தீமை செய்யாதிருப்பதே இயேசு கிறிஸ்துவின் இரக்க சுபாவம்! 🔸️
"நியாயத்தீர்ப்புக்கு முன்பாக இரக்கம் மேன்மை பாராட்டும்" என யாக்கோபு 2:13 இரக்கத்தின் மேன்மையை கூறுவதைப் பாருங்கள். நாம் யாரேனும் ஒருவரால் தீமையாய் நடத்தப்படும்போது ஒரு மறுபடியும் பிறந்த விசுவாசியின் இருதயத்திலிருந்து இரண்டு சப்தங்கள் ஒலிக்கின்றன. 1) "அவன் உன்னை நடத்தியதைப் போலவே நீயும் அவனிடம் கடினமாய் நடந்து கொள்" என்ற மாம்சத்தின் சத்தம். 2) "பரவாயில்லை, அவனிடம் இரக்கமாயிருந்து அவனை மன்னித்துவிடு" என்ற பரிசுத்த ஆவியானவரின் சத்தம்.
முதலாவது தொனித்த மாம்சத்தின் சப்தமோ, "நியாயம் தீர்த்துவிடு" என்ற ஓலமேயாகும்! ஆனால் ஆவியானவரின் சப்தமோ இரக்கத்தின் சப்தம் ஆகும்! இவ்வாறு என் இருதயத்தில் தொனித்த இரண்டு சப்தங்களில் "நியாயத்தீர்ப்புக்கு முன்பாக இரக்கம் மேன்மை பாராட்டி விட்டால்" அது எத்தனை அருமையாய் இருக்கும். ஆம், ஒரு நாளில் நமக்கு வரப்போகும் நியாயத்தீர்ப்பில், நாம் காட்டிய இரக்கம் நம்மை சூழ்ந்து பாதுகாக்கும் என்பதை அறிய கடவோம்! அன்று நமக்கும் இரக்கம் தேவை!!
எபிரெயர் 12:24-ம் வசனம், "ஆபேலினுடைய இரத்தம் பேசினதைப் பார்க்கிலும், நன்மையானவைகளை பேசுகிற இயேசுவின் இரத்தத்தின் இடத்திற்கு வந்து சேர்ந்தீர்கள்" எனக் கூறுவதை பாருங்கள். காயீன் ஆபேலுக்கு கொடிய அநீதியை ..... அதாவது அவனைக் கொலையே செய்துவிட்டான்! அச்சமயம் ஆபேலின் இரத்தம் "பூமியில் இருந்து தேவனை நோக்கிக் கூப்பிட்டது" (ஆதி. 4:10) என நாம் வாசிக்கிறோம். எதற்காக ஆபேலின் இரத்தம் கூப்பிட்டது? "தேவரீர்! விரைந்து வந்து நியாயம் செய்யும்!!" என்ற கூக்குரலே அந்த சத்தம் ஆகும்.
ஆனால் இதற்கு நேர்மாறாக, 'கல்வாரி மலையில் இயேசு கிறிஸ்துவும் அநியாயமாய் குற்றஞ்சாட்டப்பட்டு தன் சகோதரர்களால் கொலை செய்யப்பட்டார்'. அக்கொடிய நிகழ்ச்சியின்போது இயேசுவின் இரத்தமும் தேவனை நோக்கிக் கூப்பிட்டதை நாம் காண்கிறோம். ஆம், "பிதாவே இவர்களுக்கு மன்னியும்! தாங்கள் செய்வது இன்னதென்று அறியாதிருக்கிறார்கள்!" என பிதாவை நோக்கி கூப்பிட்ட இயேசுவின் இரத்தம்!!
ஆபேலின் இரத்தத்திற்கும் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்திற்கும் இடையே உள்ள வித்தியாசத்தை இப்போது நாம் தெளிவாகக் கண்டு கொள்ள முடிகின்றது. ஆம், இந்த புதிய உடன்படிக்கையின் இரக்கத்தில் நாம் யாவரும் ஐசுவரியவான்களாகக் கடவோம்! தேவனுடைய கிருபை ஒரு மனுஷனுக்கு கிட்டாத பட்சத்தில் அவன் ஆவிக்குரிய வளர்ச்சி அடைவது ஒருக்காலும் முடியாது என்ற உண்மையை நாம் யாவரும் மனதில் கொள்ளக் கடவோம்!!
ஜெபம்:
அன்பின் பிதாவே! தீமைக்கு பதில் செய்ய விரும்பும் 'ஆபேலின்' இரத்தம் அல்ல! தீமைக்கு நன்மை செய்த 'இயேசுவின்' இரத்தத்தின் இரக்க சுபாவத்திற்குள் எங்களை ஈர்த்துக் கொள்ளும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
0 Comments