இன்று "அவருடைய" சத்தம்
டிசம்பர் 26
🔸️ லௌகீக துக்கத்தை மேற்கொள்ள வேண்டும்! 🔸️
"லௌகீக துக்கமோ மரணத்தை உண்டாக்குகிறது"
(2 கொரி 7:10) என வேத வசனம் எச்சரிப்பதைப் பாருங்கள்.
லௌகீகமான உங்கள் வாழ்வின் கவலைகளை அடிக்கடி நினைவுபடுத்தி, மற்றவர்களின் ஆறுதலையும் அனுதாபத்தையும் பெறும் ஆசையில், "அந்த நினைவுகளைச்" செத்த உடலைப் பாதுகாக்கும் "எகிப்திய மம்மீஸ்" போன்று பத்திரமாய் வைத்திருக்க விரும்புகிறீர்களா? இந்த இழிவான நிலையில் இருக்கும் நீங்கள், நடந்து முடிந்த துயரமான சம்பவங்களை மீண்டும் நினைவுகூரும்படி எப்போதெல்லாம் சோதிக்கப்படுகிறீர்களோ, அப்போதெல்லாம் அந்த சிந்தைகளை அப்புறப்படுத்திட தேவன் உங்களுக்கு உதவி செய்யும்படி ஜெபம் செய்யுங்கள்! இந்தச் செயலை நீங்கள் தொடர்ச்சியாய் செய்து வந்தால், சில காலங்களுக்குப் பிறகு அந்த கடந்த கால சம்பவங்களை நீங்கள் முற்றிலுமாய் மறந்து விடுவீர்கள்! உங்கள் ஆத்துமாவும் சுகம் பெற்றுவிடும்!
உங்கள் கடந்த காலம் "கெட்டுப்போன பிரேதத்திற்கு" ஒப்பாயிருக்கிறபடியால், அவைகளை நீங்கள் நிரந்தரமாய் புதைப்பதே அவசியமாய் இருக்கிறது.
அவ்வாறு நீங்கள் செய்யும்போது, ஒரு பெரிய அடிமை கட்டிலிருந்து நீங்கள் விடுதலையானதை உணர்வது மாத்திரமல்லாமல், பரலோகத்தின் முன் ருசியை இந்தப் பூமியிலேயே நீங்கள் அனுபவிப்பதைக் காண்பீர்கள். இவ்வாறு நீங்கள் செய்வதால், நீங்கள் வாழும்படி இந்த உலகத்தை சிறந்த ஸ்தலமாக மாற்றியதுமல்லாமல், உங்களைச் சூழ்ந்த மற்றவர்களுக்கும் அந்த இனிய உணர்வை நீங்கள் தந்துவிட முடியும்!!
தேவன் விரும்புகிறபடி உங்கள் வாழ்க்கையை வாழ்ந்து விடுங்கள். உங்கள் சுயநலத்திலிருந்து மனந்திரும்பி, உங்கள் முழுமையையும் ஆண்டவராகிய இயேசுவினிடத்தில் 'சமர்ப்பணம்' செய்துவிடுங்கள். சில சமயங்களில், உங்கள் பொறுமையின் எல்லைக்கே நீங்கள் வந்துவிட்டதாக உணரலாம். ஆனால் அதுபோன்ற உணர்வு நீங்களாக எண்ணிக் கொண்டதேயாகும்! ஏனெனில், தேவனுடைய கிருபை உங்களை எச்சூழ்நிலையிலும் பாதுகாத்துக்கொள்ள முற்றிலும் போதுமானதேயாகும். உங்கள் திராணிக்கு மிஞ்சி நீங்கள் சோதிக்கப்பட தேவன் ஒருபோதும் அனுமதிக்கவே மாட்டார்!!
ஜெபம்:
எங்கள் பரலோக தந்தையே! என்றோ, எப்போதோ நடந்த வாழ்வின் துயரங்களை அல்லது ஏமாற்றங்களை இன்னமும் தொடர்ச்சியாய் எண்ணி பின்மாறிப்போன எங்களை மன்னியும்! அவைகளை ஜெயித்து உமக்குள் முன்னேறி வர கிருபை தாரும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
https://t.me/hisvoicetoday
0 Comments