இன்று "அவருடைய" சத்தம்
மார்ச் 7
🔸️ சுயம் உடைவதே, மெய் ஆசீர்வாதம்! 🔸️
'வல்லமை' தந்திடும் பரிசுத்த ஆவியானவர் நம்மை எங்கே நடத்திச் செல்வார்? ஆம், "சிலுவைக்கே" அவர் நம்மை நடத்திச் செல்கிறார். "நாம்" சிலுவையில் அறையப்பட்டால் மாத்திரமே, கிறிஸ்து தன் முழு நிறைவோடும் நமக்குள் வாசம் செய்து ஜீவித்திட முடியும்! இயேசுவும் அவ்வாறே ஞானஸ்நானமாகிய தண்ணீருக்குள் அடக்கம் செய்யப்பட்டு, அதன் மூலமாய் மரணத்தை தனக்கென ஏற்றுக்கொண்ட பிறகுதான் பரிசுத்த ஆவியானவர் அவர்மீது வந்திறங்கினார்! (மத்தேயு 3:16). அதுபோலவே, யாக்கோபு நொறுங்கின பின்புதான் அவன் ஆசீர்வதிக்கப்பட்டான்! அதுபோலவே, மோசே புறஜாதி தேசத்தில் நாற்பது ஆண்டுகளாய் ஆட்டு மந்தையை மேய்த்த அனுபவத்தின் மூலமாகவே அவனின் "சுய-நம்பிக்கை" உடைந்து, இப்போது இஸ்ரவேலை விடுவிப்பதற்கு ஆயத்தம் பெற்றான்! ஜீவத்தண்ணீர் பாய்ந்து ஓடுவதற்கு முன்பாக 'கன்மலை' அடிக்கப்பட வேண்டும்! வாக்குத்தத்த பூமியாகிய கானானுக்குள், அதாவது ஆவியின் நிறைவுக்குள் செல்வதற்கு முன்பாக, இஸ்ரவேலர்கள் முதலாவது யோர்தான் நதிக்குள், அதாவது மரணமாகி அடக்கத்திற்குள் சென்றிட வேண்டும்! உள்ளான ஒளி வெளியே பிரகாசிக்க வேண்டுமென்றால், முதலாவது கிதியோனின் அந்த மண்பானை உடைக்கப்பட வேண்டும்! வீடு முழுவதும் நறுமணம் வீச வேண்டுமென்றால், அந்த நளதக்குப்பி உடைபட வேண்டும்! பெந்தெகோஸ்தேயின் வல்லமைக்குள் பிரவேசிப்பதற்கு முன்பாக பேதுருவின் மேன்மை பாராட்டும் சுய-நம்பிக்கை உடைந்து சிதற வேண்டும்!
இவ்வாறு ஆசீர்வாதம் பெறுவதற்கான விடையானது வேத வாக்கியங்கள் முழுவதிலும் நிறைந்து காணப்படுகிறது!!
உடைபடாத ஒரு மனிதனை தன் வல்லமையால் தேவன் நிரப்புவது பெருத்த அபாயமே ஆகும்! அது எப்படியெனில், ஒரு ஆறுமாத குழந்தையிடம் கூர்மையான கத்தியைக் கொடுப்பது போலவும், இருபதாயிரம் வோல்ட் மின்சாரக் கம்பியை அதற்குரிய காப்பு குழாய் இல்லாமல் பயன்படுத்துவது போலவும் ஆகும்! தேவனோ மகா கவனமுள்ளவர்!
இன்னமும் சுயம் உடைபடாமல் இருக்கும் மனிதனுக்கு அவர் தன் ஆவியின் வல்லமையை ஒருபோதும் தந்திட மாட்டார்! அதேபோல், தொடர்ந்து நொறுங்கி வாழ மறுத்துவிடும் மனிதனிடமிருந்து தன் வல்லமையை மீண்டும் எடுத்துக் கொள்வார்!!
ஜெபம்:
அன்பின் பிதாவே! உம் சிலுவைப் பாதையில், எங்களை உடைத்து, உமக்கென பயனுள்ள பாத்திரமாய், மாறிட எங்களை ஆசீர்வதித்தருளும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
0 Comments