இன்று "அவருடைய" சத்தம்
மார்ச் 9
🔸️ சிலுவையின் பாதையே வல்லமையின் பாதை! 🔸️
"சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவே, தேவபெலனாயிருக்கிறார்" என்றே கொரிந்தியர்களுக்குப் பவுல் எழுதினார். மேலும், "அவர் பெலவீனத்தால் சிலுவையில் அறையப்பட்டிருந்தும், தேவனுடைய வல்லமையினால் பிழைத்திருக்கிறார். நாங்களும் அவருக்குள் பெலவீனராய் இருந்தும், தேவனுடைய வல்லமையினால் அவருடனேகூடப் பிழைத்திருக்கிறோம்" (1கொரிந்தியர் 1:23,24 & 2கொரிந்தியர் 13:4) என்றும் பவுல் அவர்களுக்கு எழுதினார். இந்த கொரிந்திய கிறிஸ்தவர்களோ, "அந்நிய பாஷை வரமே தேவ வல்லமையினால் தரிக்கப்படுவதின் அடையாளம்" என தவறாக கருதி இருந்தார்கள்.... ஆகவேதான், அந்தத் தவற்றை பவுல் அவர்களுக்குத் திருத்த வேண்டியதாய் இருந்தது. அந்தக் கொரிந்தியர்களுக்குப் பவுல் முடிவாய் கூற வந்த செய்தி இதுதான் : "சகோதரர்களே அந்நிய பாஷை பேசும் வரத்தில் "தேவனுடைய வல்லமை" ஒருக்காலும் காணமுடியாது! அந்த வரம் உங்களிடத்தில் இருப்பதற்காக கர்த்தருக்கே ஸ்தோத்திரம்!! ஆனால், அதனிமித்தம் எந்தத் தவறும் செய்துவிடாதீர்கள். மெய்யாகவே, தேவனுடைய வல்லமை "சிலுவையிலும்" "சிலுவையின் மூலமாகவும்" மாத்திரமே வெளிப்படுகிறது! ஆம், மனுஷனுடைய பெலஹீனத்திலிருந்துதான், தேவனுடைய வல்லமை காணப்பட முடியும்!!" என ஆணித்தரமாய் கூறினார்.
ஒரு தேவமனிதன், தனக்குத் தேவன் "ஆவிக்குரிய வல்லமையின் இரகசியத்தை" எவ்வாறு விளங்கச் செய்தார் என்பதை கூறிய ஒரு செய்தியை நான் கேட்டிருக்கிறேன். அந்த செய்தியில், அந்த தேவமனிதன் "ஆண்டவரே! ஆவிக்குரிய வல்லமையைக் கண்டுணர ஒரு மகத்துவமான செயலை எனக்கு நீர் செய்திட வேண்டும்!" என ஜெபித்து சில காலமாய் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்தார். கடைசியில், ஆண்டவர் அந்த தேவமனிதனைப் பார்த்து, "உன் பாவமன்னிப்பை நீ எவ்வாறு பெற்றுக் கொண்டாய்? " என வினவினார். அதற்கு அந்த தேவமனிதர் "ஆண்டவரே இந்த பூமியில் நான் ஒரு மிகக் கேடான பாவி என்பதை உணர்ந்து உம்மிடம் வந்தேன்! நீரும் என்னை இலவசமாய் மன்னித்துவிட்டீர்!" என பதிலளித்தார். பின்பு ஆண்டவர் அவரைப் பார்த்து, "அதைப் போலவே, இப்போது இப்பூமியில் நீ தான் மகா பெலவீனமான மனுஷன் என்பதை உணர்ந்து என்னிடம் வா! அப்போது நீ என் வல்லமையை பெறுவாய்!!" எனக் கூறினார். இப்படித்தான் அந்த தேவமனிதன் தன்னுடைய வாழ்க்கையில் "தேவனுடைய வல்லமையை" அனுபவிக்கத் தொடங்கினார்!!
ஆம், "சிலுவையின் பாதையே வல்லமையின் பாதை!"
ஜெபம்:
அன்பின் பிதாவே! எங்கள் சுயபெலன் உடைத்திடும் "சிலுவைப்பாதைக்காய்" உமக்கு ஸ்தோத்திரம்! அதுவே, தேவ பெலன் பெற்றிடும் வழி என அறிந்தோம், இயேசுவின் நாமத்தில் உமக்கே நன்றி, ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
0 Comments