Header Ads Widget

LightBlog

Ticker

6/recent/ticker-posts

மார்ச் 12

 இன்று "அவருடைய" சத்தம்


மார்ச் 12


🔸️ பாவ கூண்டிலிருந்து விடுதலை! 🔸️


 பழைய ஏற்பாட்டின் கீழ் "பாவம் செய்வதை நிறுத்தும்படி" எவ்வித புத்திமதியும் சொல்லப்பட வில்லை. ஆனால் புதிய உடன்படிக்கையிலோ, இரு பக்கங்களையுடைய சுவிசேஷ செய்தியாக 1) ஆக்கினைத் தீர்ப்பிலிருந்து விடுதலை! 2) பாவத்தை விட்டு ஓய்ந்திருத்தல்!! என்ற இயேசுகிறிஸ்துவின் செய்தியை காண்கிறோம்.


பவுல் கூறுகையில், "நீங்கள் பாவஞ்செய்யாதீர்கள்" (1கொரி.15:34) எனவும், யோவான் கூறுகையில், "என் பிள்ளைகளே நீங்கள் பாவம் செய்யாதபடிக்கு இவைகளை உங்களுக்கு எழுதுகிறேன்" (1யோவான் 2:1) எனவும், பேதுரு கூறுகையில், "பாவங்களை விட்டு ஓய்ந்திருங்கள்" (1பேதுரு 4:2) எனவும் ஒரே தொனியில் கூறினார்கள்!


பவுல், ரோமர் 5-ம் அதிகாரத்தில், விசுவாசத்தினால் நீதிமானாக்கப்படுதலை விவரித்துக் கூறிய பின்பு, ரோமர் 6-ம் அதிகாரத்தில், "ஆகையால் என்ன சொல்லுவோம்? கிருபை பெருகும்படிக்கு பாவத்திலே நிலைநிற்கலாம் என்று சொல்லுவோமா?" என்று கேள்விக்கணையைத் தொடுக்கின்றார். மீண்டும் 15-ம் வசனத்தில், "இதினாலென்ன? நாம் கிருபைக்குக் கீழ்பட்டிருக்கிறபடியால் ஒரு தடவைகூட பாவஞ் செய்வது முறையாகுமா?" (ரோமர் 6:15 எழுத்தின்படியான மூல மொழிபெயர்ப்பு) என மிகவும் அழுத்தமாக வினவுகிறார். மேற்கண்ட இரு வசனங்களின் கேள்விகளுக்கும் "கூடாதே!" என பவுல் ஆணித்தரமாக பதில் உரைத்தார். ஆம், இனியும் நாம் 'அறிந்து' ஒரு தடவைகூட பாவம் செய்யவே கூடாது!


இப்போது நீங்கள் கேட்கும் செய்தி ஒரு பாரமான செய்தியாக உங்கள் செவிகளில் தொனிக்கிறதா? தொடர்ந்து பாவம் செய்ய விரும்புபவர்களுக்கு மாத்திரமே இச்செய்தியோ பாரமானதாகத் தென்படும்! ஆனால் பாவத்தின் அடிமைத்தனத்தில் சிக்கி உழன்று தவிப்பவர்களுக்கு இச்செய்தி மகிழ்வூட்டும் விடுதலையின் செய்தியாகும்!! ஒரு சிறைக்கூண்டில் அடைபட்டிருப்பவன் "நீ விடுதலையாகப் போகிறாய்!" என்ற செய்தியைக் கேட்டு எங்ஙனம் பரவசம் அடையாமல் இருக்கக்கூடும்? நீங்களே சொல்லுங்கள், சிறையில் கட்டுண்டிருந்த அம்மனிதனுக்கு இச்செய்தி பாரமானதாயிருக்குமா? இல்லை. . . . அப்படி ஒருக்காலும் இருக்கவே இருக்காது!


"(பாவத்தினால்) சிறைப்பட்டவர்களை விடுதலை செய்யவும்; (சாத்தானால்) நொறுங்கி நசுக்கப்பட்டவர்களை விடுதலையாக்கவுமே" இயேசு புதிய உடன்படிக்கையின் அபிஷேகத்தைப் பெற்று நம்மிடம் வந்தார்! (லூக்கா 4:18).


ஜெபம்:

அன்பின் பரம தகப்பனே! மாபெரும் விடுதலை தரும் இயேசுகிறிஸ்துவின் புதிய உடன்படிக்கை வாழ்விற்கு ஸ்தோத்திரம்! 'இனியும்' அறிந்த பாவங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்திட உம் கிருபை தந்தருளும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென். 


எழுதியவர்:

சகோதரர் சகரியா பூணன்.


"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து.


From:-

https://t.me/hisvoicetoday




Post a Comment

2 Comments

  1. பாவம் குறித்து கூடுதல் தகவல் தெரிந்து கொண்டேன்.. நன்றி ஐயா... உங்கள் ஊழிய பணி சிறக்க வாழ்த்துக்கள்

    ReplyDelete